செய்திகள்

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி: பிரதமர் மோடி புகழாரம்

எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பங்கேற்பு

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி:

பிரதமர் மோடி புகழாரம்

6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கம்

சென்னை, பிப்.27–

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மருத்துவப் படிப்புகளில் 30,000 எம்பிபிஎஸ் இடங்களும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைக் கல்வி இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

தமிழகத்தில் எம்ஜிஆரின் ஆட்சிக் காலம் ஏழை–எளிய மக்களின் நலன் சார்ந்து இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா, கிண்டியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில கவர்னரும், வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழாண்டில் 21,889 மாணவர்கள் பட்டப் படிப்புகளை முடித்துள்ளனர். அவர்களில் 71 சதவீதம் பேர் பெண்கள். மாணவர்களில் 31 பேருக்கு விழா அரங்கில் நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து, பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக காணொலி முறையில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:–

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இத்தகைய வெற்றி எம்ஜிஆருக்கு நிச்சயம் சந்தோஷத்தை அளித்திருக்கும்.அவரது ஆட்சிக் காலம் முழுவதும் ஏழை–எளிய மக்களின் நலனுக்காகவே இருந்தது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்துவதும் எம்.ஜி.ஆரின் எண்ணத்தில் கலந்த திட்டங்களாக இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். பிறந்த மண்ணான இலங்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு வாழும் தமிழ் சகோதர, சகோதரிகள் நலனுக்காகவும், மருத்துவத் துறை மேம்பாட்டுக்காகவும் இந்தியா அளித்து வரும் பங்களிப்பு அவர்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பதை நேரில் உணர முடிந்தது.

நமது நாட்டின் நிதியுதவியுடன் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன சேவைகளை இலங்கைத் தமிழர்கள் பரவலாக பயன்படுத்துவதையும் கண்டேன். அண்டை நாட்டுக்கான மருத்துவ சேவைக்காகவும், குறிப்பாக அங்கு வாழும் தமிழர்களுக்காகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருப்பது எம்ஜிஆருக்கு கண்டிப்பாக களிப்பைத் தந்திருக்கும்.

கூடுதலாக 30 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள்

கொரோனா தொற்று பல்வேறு படிப்பினைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளன. அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் இந்திய தேசம் புதிய பாதையை வகுத்தது மட்டுமன்றி, அதன் வாயிலாக பிறரையும் பயன் பெறச் செய்துள்ளது. அதனால்தான் கொரோனாவால் இறந்தவர்களின் விகிதம் இந்தியாவில் மிகக் குறைவாகவும், அந்நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் மிக அதிகமாகவும் உள்ளது.தற்போது, இந்தியா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்வதோடு அவற்றை பிற நாடுகளுக்கும் வழங்கி வருகிறது. சுகாதாரத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும் புதிய மாற்றத்தை எதிர்நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

மருத்துவக் கல்வியையும், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதையும், நெறிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் மருத்துவப் படிப்புகளில் 30,000 எம்பிபிஎஸ் இடங்களும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைக் கல்வி இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மருத்துவக் கல்விக்கு பெயர் பெற்ற மாநிலங்களில் ஒன்று. இங்கு மேலும் 11 மருத்துவக் கல்லூரிகளை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக ரூ.2,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சுகாதாரப் பணிக்கு ரூ.62 ஆயிரம் கோடி

மேலும் பிரதம மந்திரியின் சுயசார்பு திட்டத்தின் மூலம் சுகாதாரப்பணிக்காக ரூ.62,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக 50 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

மக்களுக்கு ஆற்றும் சேவையே மகேசனுக்கு (இறைவன்) ஆற்றும் சேவை என்பது ராமகிருஷ்ண பரமஹம்சர் உரைத்த பொன்மொழிகளில் ஒன்று. அதன்படி எவரேனும் தற்போது வாழ்வதற்கு வாய்ப்பிருக்கும் என்றால் அதில் மருத்துவத் துறையினரே முதன்மையாக இருப்பர்.

சமூகத்தில் மருத்துவர்கள் என்றாலே ஒரு மதிப்பு உள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு அந்த மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *