செய்திகள் முழு தகவல்

அரசியல் அறப்போரில் ‘காலத்தை வென்ற’ எம்ஜிஆர்!

* தப்புக் கணக்கில் கருணாநிதி, சரியான கணிப்பில் ராஜாஜி

* 1973, ஜூன் 9ல் அண்ணா திமுகவில் நான் இணைந்தது ஏன்?

* கருணாநிதி இல்லாத சட்டசபை எதுக்கு?

* இந்திராவை அசர வைத்த ‘நல்வாழ்வு’ புத்தகம்

அண்ணா திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் அமைச்சரவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் டாக்டர் எச்.வி.ஹண்டே.

1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நிலை மோசமானபோது அவரது மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தியவர்களில் ஹண்டே முக்கியமானவர்.

1942 ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு போராட்டகளத்தில் போலீசிடம் அடிவாங்கி நாட்டின் விடுதலை வேள்வியில் பங்கேற்ற பெருமைக்குரியவர் ஹண்டே. அப்போது அவருக்கு 15 வயது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஹண்டே முதன்மையானவர்.

“மக்கள் குரல்” நாளிதழின் சிறப்பு செய்திக்காக எம்ஜிஆருடனான தனது அரசியல் பயணம் பற்றி உற்சாகத்துடன் ஹண்டே நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தற்போது ஹண்டேவுக்கு 94 வயது. நம்மிடம் பேசும்போது, சிறிது கூட அவரது நினைவு தடுமாறவில்லை. ஒவ்வொரு ஆண்டும், தேதியும், கிழமையும், நேரங்களையும் அவர் அவ்வளவு துல்லியமாக எடுத்து வைத்தார்.

எம்ஜிஆர் உடனான தனது அரசியல் பயணங்கள் பற்றி ஹண்டே தெரிவித்தவை:

சுயேட்சையாக முதல் வெற்றி

1964ல் சென்னை மாநகரத்தின் எம்எல்சி என்று அழைக்கப்படும் பட்டதாரி தேர்தல் நடைபெற்றது. சட்டப்பேரவைக்கான மேலவை தேர்தல் அது.

காமராஜர் அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர், அவர் ஒரு பிரதிநிதியை நிறுத்தினார்.

சுதந்திரா கட்சியின் தலைவர் ராஜாஜி ஒரு பிரதிநிதியை நிறுத்தினார். அறிஞர் அண்ணா, பேராசிரியர் கே.அன்பழகனின் சகோதரர் அறிவழகனை நிறுத்தினார். நான் சுயேட்சையாக நின்று அமோகமான முறையில் வெற்றி பெற்றேன்.

(கவனிக்க… கட்சி பலம் இல்லை. நண்பர்கள் உதவியுடன் மட்டுமே வெற்றி பெற்றேன்.)

ராஜாஜியும் நானும்…

அந்த காலக்கட்டத்தில் பக்தவத்சலம் முதலமைச்சர். சட்டமன்றத்தில் காங்கிரஸை கடுமையாக எதிர்த்து பேசி வந்தேன். எனது சட்டமன்ற பணிகளை பார்த்து அண்ணா மிகவும் பாராட்டினார்.

திமுக அப்போது எதிர்க்கட்சி. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் துணைத்தலைவர். மேலவை உறுப்பினராக பேராசிரியர் கே.அன்பழகன். இது நடந்தது 1964.

ராஜாஜி அப்போது என்னிடம், காங்கிரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள், தனித்து ஒருவராக நின்று காங்கிரசை எதிர்ப்பதைவிட, சுதந்திரா கட்சியிலிருந்து வேலை செய்யலாமே என்றார்.

1965ல் சுதந்திரா கட்சியில் நான் என்னை இணைத்துக்கொண்டேன்.

அண்ணாவுக்கு ஒரே சிரிப்பு

எம்எல்சியில் நான் வெற்றி பெற்றதால், எனது பதவிக்காலம் 6 ஆண்டுகள். 1970 வரை எனது பதவி காலம் இருக்கிறது.

இதற்கிடையில் 1966ல் பயங்கர வெள்ள பாதிப்பு. வியாசர்பாடி, சூளை பகுதிகளில் பாதிப்பு அதிகம். வெள்ளப்பாதிப்பை பார்வையிட அண்ணா நினைத்தார். ஹண்டேவையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்றார்.

என்னை அழைக்க காரணம், சட்டமேலவையில் நான் பேசும்போது, எந்தெந்த குடிசைகளில் அண்ணா படமும் எம்ஜிஆர் படமும் இருக்கிறதோ அந்த குடிசைகளுக்கெல்லாம் நிவாரணம் கொடுக்கவில்லை என்று பேசியிருந்தேன். அடுத்த நாள் அது தலைப்பு செய்தியானது.

மோசஸ் என்பவர் மேயராக இருந்தார்.

ஆதிஆந்திர மக்கள் அப்பகுதியில் அதிகம். நான் அந்த மக்களிடம் தெலுங்கில் பேசினேன். அந்த மக்களிடம், இவர் தான் அடுத்த முதல்வராக வர போகிறார் என்று அண்ணாவை காட்டி நான் பேசினேன். அண்ணாவுக்கு ஒரே சிரிப்பு.

மனசுவிட்ட காமராஜர்

1967ல் சட்டப்பேரவை தேர்தல் வந்தது. அண்ணா தலைமையில் இயங்கி வந்த திமுகவும், சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணியில் சென்னையில் 12 சீட். ஒரு சீட் சுதந்திரா கட்சிக்கு அண்ணா ஒதுக்கினார். எங்களுக்கு பூங்கா நகர் தொகுதி. அதில் சவுக்கார் பேட்டை அடக்கம்.

பூங்கா நகர் தொகுதியில் ஒரு மார்வாடியை நிற்க வைக்க ராஜாஜி எண்ணினார். இந்த செய்தி அண்ணாவுக்கு எட்டியது. போனில் ராஜாஜியை அழைத்து, நீங்கள் யாரோ மார்வாடியை நிற்க வைப்பதாக கேள்விப்பட்டேன். அந்த தொகுதிக்கு ஹண்டே தான் பெஸ்ட்.

அந்த பகுதியில் 35 ஆயிரம் பேர் தெலுங்கு பேசுபவர்கள் இருக்கிறார்கள். இந்தி பேசுபவர்கள் சவுக்கார் பேட்டையில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார். காங்கிரஸ் சார்பில் டி.என்.அனந்தநாயகி நின்றார். மொத்தம் 95 ஆயிரம் ஓட்டு. நான் 2500 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

தமிழ்நாடு முழுவதும் கவுண்ட்டிங். ஒரு மணிக்கு என் தொகுதியில் ரிசல்ட் வந்தாச்சு. தமிழகமெங்கும் பட்டாசு வெடிக்கிறார்கள்.

டெல்லிக்கு புறப்பட்ட காமராஜர், சென்னை ஏர்போர்ட்டில் பேசும்போது, “பூங்காநகர் போய்விட்டது என்றால், “தமிழ்நாடு நம் கைக்கு வராது,” என்று சொன்னார். அந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது.

அண்ணா மறைவுக்கு பின்…

அண்ணா மறைவுக்கு பின் கலைஞர் திமுகவுக்கு தலைமை ஏற்கிறார். 1969ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.

1971ல் வந்த தேர்தலில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சியுடனும், இந்திரா காங்கிரஸ் திமுகவுடனும் கூட்டணி அமைத்தன.

தமிழ்நாடு முழுவதும் இந்திரா காங்கிரஸ் திமுக கூட்டணி அலை வீசுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் பூங்கா நகர் தொகுதியில் நான் போட்டியிட்டேன்.

என்னை எதிர்த்து, ‘தோல்வியே அறியாத’ நபர் திமுக சார்பில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி போட்டியிட்டார். 5 ஆயிரத்து சில்லரை ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

கலைஞர் செய்த முதல் தவறு

திமுகவுக்கு 1971ல் அமோக வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு காரணம் இந்திரா காங்கிரசுடன் வைத்த கூட்டணி தான் என்று கலைஞர் நினைத்தார். அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் என்பது அவர் மனதில் படவில்லை. எம்ஜிஆரை என்ன செய்வதென்று கலைஞருக்கு தெரியவில்லை.

எம்ஜிஆர் அப்போது திமுகவில் பொருளாளர். கணக்கு கேட்டார் என்று சொல்லி எம்ஜிஆரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் கலைஞர்.

கலைஞரும், காமராஜரும் தப்பு கணக்கு போட்டார்கள்; ராஜாஜி சரியாக கணித்தார்

1972 அக்டோபர் 10ந் தேதி திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்படுகிறார்.

எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தலைவர்கள் மத்தியில் அதாவது காமராஜர் போன்றவர்கள் மத்தியில், வேறு எண்ணம் இருந்தது.

காமராஜர், எம்ஜிஆரை குறைத்து கணக்கிட்டார். “திமுகவும், அண்ணா திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”. அது இரண்டாக உடைந்தால் நாம்தான் வருவோம் என்று நினைத்தார்.

கலைஞர், எம்ஜிஆர் போனதால் எந்த நஷ்டமும் நமக்கு வராது என்று நினைத்தார்.

ஆனால் ராஜாஜி ஒருத்தர்தான் தொலைநோக்குடன் சிந்தித்தார். “எம்ஜிஆரை நீக்குவது அமரர் அண்ணாவை திமுக நீக்கியதற்கு சமம். இதை போக போக அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்”.

தன்னை ஆதரித்து ராஜாஜி அறிக்கை கொடுத்ததில் எம்ஜிஆருக்கு சந்தோசம். ராஜாஜியை பார்த்து எம்ஜிஆர் ஆசி வாங்கினார். 1972 டிசம்பர் 25ல் ராஜாஜி மறைந்தார்.

கன்வின்ஸ் ஆகாத காமராஜர்

1973 மே மாதம் 20ந் தேதி திண்டுக்கல் மக்களவை தேர்தல். ஸ்தாபன காங்கிரஸ் சுதந்திரா கட்சி கூட்டணி. நான் அந்த தேர்தலில் காமராஜருக்கு ஆதரவாக வேலை செய்தேன். மே 13ந் தேதி மதுரையில் காமராஜர் எங்களை அழைத்து தேர்தல் நிலவரம் குறித்து கேட்டார்.

எல்லோரும் ‘நாம் தான் ஜெயிப்போம்’ என்றார்கள். காமராஜர் கன்வின்ஸ் ஆகவில்லை. நான் மவுனமாக அமர்ந்து இருந்தேன். என்னை பார்த்து… “ஹண்டே என்ன சொல்றாரு…” என்றார்.

“சார், எம்ஜிஆர் அலை வீசுகிறது. உசிலம்பட்டியில் 95 சதவீத மக்கள் எம்ஜிஆருக்கு ஆதரவு”, என்றேன். கரெக்ட் என்றார். காமராஜர் புரிந்து கொண்டார்.

என்னை இழுத்த காந்தம்

இதெல்லாம் நடந்து முடிந்து, ஒரு நாள் திடீரென எனக்கு போன் வந்தது. எம்ஜிஆர் ஆதரவாளர் ஹக்கீம் பாய் என்பவரது வீடு திமுகவினரால் சேதமாக்கப்பட்டது.

இதை கண்டித்து எம்ஜிஆர் கூட்டம் நடத்த நினைத்தார். இது நடந்தது சூளை பகுதியில். சூளை பகுதி யார் தொகுதியில் வருகிறது என எம்ஜிஆர் கேட்டு உள்ளார். இது ஹண்டே தொகுதி என்று தொண்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

என்னிடம் போனில், “உங்கள் தொகுதியில் கலைஞரை எதிர்த்து நாங்கள் கூட்டம் நடத்த இருக்கிறோம்”. சட்டமன்றத்தில் நீங்கள் கலைஞரை விமர்சனம் செய்து பேசுகிறீர்கள்.

நீங்க வந்து பேசனும் என்றார். நான் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தேன். அதற்கப்புறம் டெல்லி செல்வதை நிறுத்தி விட்டு, நான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

1973ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி எம்ஜிஆரை சந்தித்து அண்ணா திமுகவில் இணைந்தேன்.

கட்சியில் சேர்ந்த 15வது நாள்…

நான் கட்சியில் இணைந்து 15வது நாள், சினிமா கலைக்குழு சார்பில் ரஷ்யா, அமெரிக்க பயணம் செல்ல எம்ஜிஆர் தயாரானார். அது மூன்று வார பயணம். அப்போது கட்சி பணிகளை கவனிப்பதற்காக 6 பேர் கொண்ட குழுவை எம்ஜிஆர் அமைத்தார்.

அந்த குழுவில் இருந்தவர்கள், எம்ஜிஆர், நாஞ்சில் மனோகரன், மதியழகன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி, எச்.வி.ஹண்டே. கட்சியில் சேர்ந்த 15வது நாளிலேயே எனக்கு இந்த பொறுப்பு. ஆச்சரியமாக இருந்தது.

நான் தினமும் கிளினிக் வேலை முடித்து விட்டு, 12 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று விடுவேன். 2 மணி வரை அங்கு இருந்துவிட்டு, அதற்கு பின் கிளினிக் பார்க்க வந்து விடுவேன். இதை கேட்டு எம்ஜிஆர் எவ்வளவு சந்தோஷப்பட்டார் தெரியுமா?

தாயகம் திரும்பிய பின் எம்ஜிஆர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். நாஞ்சில் மனோகரன் துணை பொதுச்செயலாளர், கே.ஏ.கிருஷ்ணசாமி அமைப்பு செயலாளர், எஸ்.டி.சோமசுந்தரம் கொள்கை பரப்பு செயலாளர், என்னை கட்சியின் தலைமை நிலைய செயலாளராக்கினார்.

கோவை மேற்கில் இடைத்தேர்தல்

1974ல் கோவை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதே நேரத்தில் கோவை நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. காரணம் எம்பியாக இருந்த மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் இறந்தார். அண்ணா திமுகவும், கம்யூனிஸ்ட்டும் கூட்டணி. கோவை நாடாளுமன்ற தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எம்ஜிஆர் ஒதுக்கினார்.

கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அண்ணா திமுக சார்பில் செ.அரங்கநாயகம் போட்டியிட்டார். நாடாளுமன்ற தொகுதிக்கு கம்யூனிஸ்ட் சார்பில் பார்வதி கிருஷ்ணன் போட்டியிட்டார்.

அப்போது, கோவை மேற்கு, கோவை கிழக்கு, தொண்டாமுத்தூர், அவினாசி, திருப்பூர் என மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து கோவை நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது.

இதில் திருப்பூர் எம்ஜிஆரின் எக்கு கோட்டை. கோவை மேற்கு தொகுதி எம்ஜிஆருக்கு ஆதரவு குறைவு. கோட்டைமேட்டில் திமுக ஸ்ட்ராங்.

இதற்கிடையில் உடைந்த காங்கிரஸ் இரண்டும் ஒன்றிணைந்தது.

கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் காலத்தில் இரண்டு காங்கிரசும் சேர்ந்து பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்தியது.

அங்கு போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக இந்திராகாந்தியும், காமராஜரும் வந்து பிரச்சாரம் செய்தனர்.

கோவை தேர்தல் மேற்பார்வை யாளராக நாஞ்சில் மனோகரனை எம்ஜிஆர் நியமித்திருந்தார். புதுவையில் அப்போது தேர்தல். அங்கு எஸ்.டி.சோமசுந்தரத்தை எம்ஜிஆர் நியமித்திருந்தார்.

நான் கோவையில் தான் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய தந்தை பிரபல மருத்துவர். ஜி.டி.நாயுடு போன்ற தலைவர்களின் குடும்ப மருத்துவராக இருந்தார்.

இது எப்படியோ எம்ஜிஆரின் கவனத்துக்கு சென்றது. அதனால் கோவை தேர்தலுக்கு என்னையும் மேற்பார்வையாளராக எம்ஜிஆர் நியமித்தார்.

நாஞ்சில் மனோகரன் நன்றாக பேசுவார். ஆனால், கிரவுண்ட் ஒர்க் ஜீரோ. எம்ஜிஆர் கவலையடைந்தார்.

நான் கோவைக்கு சென்றேன். ஒரே நாளில் ஆறு தொகுதிகளையும் சுற்றி பார்த்து தேர்தல் நிலவரத்தை கணித்துவிட்டேன்.

நாஞ்சில் மனோகரனிடம், கோவை மேற்கு சட்டமன்ற தொகுதியில் மட்டும் நமக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றேன். மனோகரன் எம்ஜிஆருக்கு தகவல் தெரிவித்தார்.

எம்ஜிஆர் போனில் என்னை அழைத்தார்… “பார்வதி கிருஷ்ணனுக்கு நாம் வேலை செய்யாமலேயே வெற்றி பெற்றுவிடுவோம். ஆனால், கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெயிப்பது கஷ்டம்” என்றேன். “அதற்கு என்ன பரிகாரம் என்றார்” எம்ஜிஆர்.

கோவை மேற்கு தொதியில் 17 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வேலை செய்தால், நாம் வெற்றி பெற்று விடலாம்” நான் கோவை மேற்கு தொகுதிக்கு மட்டும் வேலை செய்கிறேன்” என்றேன். மனோகர னிடம்… “ஹண்டே சொன்னபடி செய்யுங்கள்” என்றார் எம்ஜிஆர்.

எம்ஜிஆருக்கு ஒரே குஷி

எக்கச்சக்கமாக கேன்வாசிங். தெலுங்குபிராமின்ஸ் வீதியில் மட்டும் 3500 ஓட்டு. ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இரவு நேரம். ரிசல்ட்டு வருகிறது.

எம்ஜிஆர் வீட்டில் நானும், திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மாயத்தேவரும் அமர்ந்து இருந்தோம்.

ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அரங்கநாயகம் வெற்றி பெறுகிறார். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர், மூன்றாவது இடத்தில் திமுக வருகிறது.

ரிசல்ட்டு கேட்டு எம்ஜிஆருக்கு ஒரே குஷி. முதுகில் தட்டி பாராட்டினார்.

1973ல் திண்டுக்கல்லில் எம்ஜிஆர் வெற்றி பெற்றவுடன், தமிழ்நாடு முழுவதும் கலைஞர் ஒரு கருத்தை பரப்பினார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி. சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் திமுக தான் வெற்றிபெரும் என்று ஒரு புரளியை கிளப்பினார். அந்த புரளி, கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பொய்யானது.

ஐசரி வேலன் மட்டுமே வெற்றி

1977ல் சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர் அமோகமான வகையில் வெற்றி பெறுகிறார். ஆனால் சென்னை மாநகரத்தில் 14 சீட்டில் 13 சீட்டில் திமுக வெற்றி. தற்போது ஆர்கே நகர் என்று சொல்கிறோமே அந்த தொகுதியில், ஐசரி வேலன் அண்ணா திமுக சார்பில் பெற்றி பெற்றார்.

1978 ல் மீண்டும் எம்எல்சி தேர்தலில் நான் போட்டியிட்டேன். நான் அமோகமாக வெற்றி பெறுகிறேன். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அண்ணா திமுக தோல்வி பெற்ற சென்னை மாநகரத்தில் எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. என்னை எதிர்த்து திமுகவின் மீசா கணேசன் நின்றார். டெபாசிட் இழந்தார். வெற்றி சான்றிதழுடன் நான் எம்ஜிஆரை காண சென்றேன்.

டி.நகர் கட்சி அலுவலகத்தில், என் வரவுக்காக எம்ஜிஆர் காத்திருந்தார். என்னை பார்த்தவுடன் சென்னையை மீட்டு எடுத்துட்டீங்க… என்று பாராட்டினார்.

திருவாரூருக்கு மாறிய கலைஞர்

அண்ண திமுகவில் “சென்னை மாநகராட்சி சீரமைப்பு குழு” என்று ஒன்றை உருவாக்கி, அந்த குழுவுக்கு என்னை எம்ஜிஆர் தலைவராக நியமித்தார். ஜேப்பியாரை செயலாளராக நியமித்தார்.

அங்கமுத்து, அப்துல்காதர், நிலவழகன் என ஐந்து பேர் கொண்ட உறுப்பினர்களையும் எம்ஜிஆர் நியமித்தார். 14 தொகுதிகளையும் கவனிக்கும் பணியை எங்களிடம் எம்ஜிஆர் ஒப்படைத்தார்.

நாங்கள் மூன்று மாதங்களாக தொகுதிவாரியாக சென்று 14 தொகுதிகளையும் கணித்துவிட்டோம்.

எங்கள் குழுவின் வெற்றி என்னவென்றால், சேப்பாக்கத்தில் போட்டியிட்ட கருணாநிதி, பின்னா ளில் திருவாரூரில் போட்டியிடும் நிலைமையை உருவாக்கியது தான்.

நாடாளுமன்ற தேர்தலில் சறுக்கல்

1980 ஆரம்பத்தில் நாடாளுமன்ற தேர்தல். இந்திரா காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி. ஜனதாவும் அண்ணா திமுகவும் கூட்டணி. நாடு முழுவதும் ஜனதா தோல்வியுற்ற நேரம். அதே கதி தமிழகத்திலும். போனில் ரிசல்ட்டு வருகிறது. அப்போது நானும் எம்ஜிஆருடன் ரூமில் இருந்தேன்.

கோபிசெட்டிபாளையத்திலும், சிவகாசியிலும் மட்டும் தான் அண்ணா திமுக வெற்றி பெற்றது. புதுவை உள்ளிட்ட 38 தொகுதிகளில் திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

டெல்லி சென்ற ரகசியம்

1977ல் மொராஜிதேசாய் பிரதமராக இருந்த சமயம். காங்கிரஸ் ஆட்சி செய்த 7 மாநிலங்களின் ஆட்சியையும் டிஸ்மிஸ் செய்தார். அங்கு ஜனதா கட்சியினர் முதல்வரானார்கள். சில காரணங்களால் இந்திராகாந்திக்கு எதிரான அலை வீசிய சமயம் அது.

1980ல் பிரதமரான இந்திராகாந்தி, 7 மாநிலங்களில் ஜனதா ஆட்சியை டிஸ்மிஸ் செய்து, தேர்தலுக்கு அங்கு ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையில் மாறன் டெல்லி சென்றார். சஞ்சய்காந்தியை சந்தித்தார்.

மக்கள் செல்வாக்கு இழந்ததாக சொல்லி 7 மாநிலங்களில் ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டீர்கள். எம்ஜிஆர் படுதோல்வி அடைந்திருக்கிறார். தமிழகத்திலும் எம்ஜிஆர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது என்று சொல்லி, எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

ஆட்சி டிஸ்மிஸ்; ஓட்டலில் டின்னர்

இந்திராவுக்கு ஜனதா மீது தான் கோபம். அண்ணா திமுக மீது அவருக்கு பெரிதாக கோபம் இல்லை.

சட்டசபை கலைக்கப்பட்டது. ரேடியோவில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது என்ற செய்தி வருகிறது. எம்ஜிஆருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று, எம்ஜிஆரின் டி.நகர் அலுவலகத்துக்கு ஓடினேன்.

ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி அறிந்த உடன் எம்ஜிஆரிடம் சென்ற முதல் ஆள் நான்.

கம்பராமாயணத்தில், ராமனை ஆட்சி செய்ய அழைத்த போது ராமனின் முகம் தாமரையாக இருந்தது. ஆட்சி இல்லை என்று சொன்ன போது, ராமனின் முகம் மலர்ந்த தாமரையாக மாறியது.

அப்படித்தான் எம்ஜிஆர் சந்தோஷமாக இருந்தார். “ஹண்டே கவலைப்படாதீர்கள்” என்றார்.

“இந்திரா நமக்கு நல்ல சவ்ரியம் (சவுகரியம்) செய்து கொடுத்து இருக்கிறார். எனக்கு மக்களை சந்திப்பதற்கான வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்” என்றார்.

அப்போது அங்கு ஆனந்தவிகடன் மணியன் இருக்கிறார்.

சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்…(சிரிக்கிறார்) … நாங்கள் மூன்று பேரும் உட்லன்ஸ் ட்ரைவின் ரெஸ்டராண்டில் மசால் தோசை, டிபன் சாப்பிட்டோம் ஆனந்தமாக…

நீங்கள் எதிர்த்து நின்றால்…50:50

மாநிலம் முழுவதும் சென்று எம்ஜிஆர் மக்களை சந்தித்தார்.

“என்னுடைய ஆட்சியை ஏன் நீக்கினார்கள்? நான் என்ன தவறு செய்தேன். என் மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தினார்கள். இதை அவர்கள் விளக்க வேண்டும். என்னுடைய அமைச்சரவையை ஏன் நீக்கினார்கள்?” என்று தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் 1980 மே மாதம் சட்டமன்ற தேர்தல். 27, 31 என இரண்டு கட்டமாக நடக்கிறது. அண்ணா நகரில் கலைஞர் போட்டியிடுகிறார்.

எம்ஜிஆரிடம் இருந்து எனக்கு போன் வருகிறது.

“அண்ணா நகரில் கலைஞர் போட்டியிடுகிறார்…

நீங்கள் எதிர்த்து நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?” என கேட்டார்.

“50:50” என்றேன். அதை 51 சதமாக்க முடியுமா என்றார். “நீங்கள் மனது வைத்தால் முடியும்” என்றேன். என்னை போட்டியிட ஆணையிட்டார் எம்ஜிஆர்.

கலைஞர் இல்லா சட்டசபை எனக்கெதுக்கு? எம்ஜிஆர்

இரண்டாவது கட்டத்தில் அதாவது (31.5.1980) தான் அண்ணா நகர் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. கலைஞர் நிற்பதால், முதலாவது கட்டத்தில் (21.5.1980) போட்டியிட்ட திமுகவின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய தலைவர்கள் அண்ணா நகரில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த திமுவினர் தான்.

வாக்கு எண்ணப்படுகிறது. ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் நான் இருக்கிறேன். பச்சையப்பன் கல்லூரியில் ஓட்டு எண்ணப்படுகிறது. திடீரென்று லைட் ஆப் செய்யப்படுகிறது. கடைசியில் 699 ஓட்டு வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.

எனக்கு எம்ஜிஆரிடமிருந்து போன் வருகிறது. கவலைப்பட வேண்டம் ஹண்டே. எனக்கு கலைஞர் சட்டமன்றத்துக்கு வரணும். அவருடன் சும்மா “பைட்” செய்வதற்காகத்தான் உங்களை நிறுத்தினேன்.

எதிர்க்கட்சி தலைவராக கலைஞர் இருந்தால் தான், சட்டசபை சோபிக்கும். அவர் இல்லாத சட்டசபை எனக்கு என்னதுக்கு… உங்களை நான் மந்திரியாக்குகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் என்றார்.

ஜூன் 9ந் தேதி கலைவாணர் அரங்கத்தில் பதவியேற்பு விழா. நல்வாழ்வு துறை அமைச்சர் பதவிக்கு என் பெயரை அறிவித்தவுடன் பயங்கர கைத்தட்டல்.

(தொடரும்…)

பேட்டி: ஷீலா பாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *