மேட்டூர், அக்.11
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3வது நாளாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.நேற்று காலை வினாடிக்கு 22,969 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 24,036 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3வது நாளாக அதிகரித்துள்ளதால் நேற்று காலை 98.03 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.50 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.