போஸ்டர் செய்தி

மேட்டூர் அணை: நாளை எடப்பாடி பழனிசாமி திறக்கிறார்

சென்னை, ஜூலை.18-

காவிரி டெல்டா பகுதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (19-ந் தேதி) தண்ணீர் திறந்து விடுகிறார்.

டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை 19–ந் தேதி அன்று திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேட்டூர் அணை திறப்பை சிறப்பான நிகழ்வாக அமைக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்கிறார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை அவர் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (18-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்குச் செல்கிறார். அங்கிருந்து சேலம் சென்றுவிட்டு, பின்னர் நாளை காலையில் மேட்டூர் அணைக்குச் சென்று தண்ணீரை திறந்து விடுகிறார்.

டெல்டா பாசனத்துக்காக அணை திறக்கப்படும்போது, அந்த பகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை முதலமைச்சரே நேரில் சென்று பங்கேற்று மேட்டூர் அணையில் நீர் திறந்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.

கலெக்டர் ஆய்வு

மேட்டூர் அணையில் இன்று நீர்மட்டம் 102.68 அடியாக உள்ளது. அணைக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 68.53 டி.எம்.சி. ஆகும்.

முதலமைச்சர் நாளை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட இருப்பதால் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *