நாடும் நடப்பும்

மெட்ரோ ரெயில் சேவைகள் விரிவாக்கம்

சென்னை நகர போக்குவரத்து நெரிசல் பெரும் தலைவலியாக மாறலாம் என்று கருதியே 1980–களில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ., தலைமையிலான தமிழக அரசு புதிய திட்ட ரெயில் சென்னையில் ஓடவேண்டும் என்று யோசித்தது.

பிறகு வேளச்சேரி வரை எம்.ஆர்.டி.எஸ். ரெயில் சேவைகளுக்கு உத்வேகம் தரப்பட்டு அவை மூன்று கட்டங்களாக அதில் முதல் கட்டமாக கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து மயிலை வரை 1997–ல் ரெயில் சேவை துவங்கியது.

2007–ல் அத்தடம் வேளச்சேரி வரை நீண்டது. ஆனால் சிறு பகுதியில் நிறைவு பட முடியாததால் வேளச்சேரி – செயின்ட் தாமஸ் மவுண்ட் இணைப்பு 2019–க்குள் முடிய வேண்டியது நின்று விட்டது.

அதற்குள் பூமிக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில் சேவைகள் வந்து விட்டதால் மேல்தள ரெயில் சேவைகள் இனி வேண்டாம் என்று முடிவு செய்து சுரங்க ரெயில் திட்டத்திற்கு முழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் ஜன நெரிசலையும் போக்குவரத்து அதிகரிப்பையும் மனதில் கொண்டு இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விசேஷ கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் 2-–ம் கட்ட திட்டத்துக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் வண்ணாரப்பேட்டை –திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இதற்கிடையே சென்னையில் 2–-ம் கட்டமாக மாதவரம் –- சிறுசேரி, மாதவரம் –- சோழிங்கநல்லூர், பூந்தமல்லி –- விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் சுமார் ரூ.69 ஆயிரம் கோடியில் 119 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

சென்னையில் 2-–வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கோயம்பேடு –- புழுதிவாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில் 12 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சாய்நகர், இளங்கோ நகர், முகலிவாக்கம், டிஎல்எஃப், சத்யா நகர், வர்த்தக மையம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும்.

இதற்கான பணிகளை மேற்கொள்ள அடுத்த 6 மாதங்களில் நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

தாமதமின்றி உடனுக்குடன் நிதி ஒதுக்கப்படுவதால் ஏற்கெனவே திட்டமிட்டபடி, 2-–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் முடிக்க உள்ளோம். இது செயல்பாட்டுக்கு வரும்போது மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்படும். பெரும்பாலான ரெயில்களில் 3 பெட்டிகள் இருக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆக 2030–களில் ஏற்பட இருக்கும் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களுக்கு விடையாய் மத்திய பட்ஜெட்டில் உள்ள அறிவிப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *