நாடும் நடப்பும்

மன நலமும் சமுதாய கடமையும்

கடந்த வார இறுதியில் அக்டோபர் 10 அன்று ‘உலக மனநல நாள்’ அனுசரிக்கப்பட்டது. இன்றைய கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வரும் உலகளாவிய சீரழிவு நம் உடல் நலன் மீது புது அக்கறையை ஏற்படுத்தி வருகிறது. நம் நலன் மட்டுமின்றி அருகாமையில் உள்ளவர்களின் நலனும் நன்றாக இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டம் ஏற்பட்டு வருகிறது.

உடல் நலத்துடன் உள நலன் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே உலக மனநல நாள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொதுவாகவே, நாம் மனநலத்தையும் மனநோயையும் ஒன்றோடொன்று தொடர்பு படுத்திக்கொள்கிறோம். அதன் விளைவாகவே மனநலம் தொடர்பாகப் பேசத் தயங்குகிறோம். நான் மனநலத்துடன் இல்லை அல்லது எனது மனம் ஆரோக்கியமாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் காரணம், அது மனநோய் என்று உருவகப்படுத்தப்படுமோ என்ற பயம் தான். அதனால்தான், மனநலம் என்ற வார்த்தையின் மீதே நமக்கு ஒருவித பயம் ஏற்பட்டுவிடுகிறது.

மனநலப் பிரச்சினைகளை நமக்குள்ளே ரகசியமாய் வைத்துக்கொள்கிறோம்; அதற்கான உதவிகள் கேட்பதைக்கூடப் பலவீனமாய் நினைத்துக்கொள்கிறோம்.

தனிப்பட்ட ஒருவர் தனது மனநலத்தை அவரே சீர் செய்து கொள்ளவேண்டும் என்பது தவறான எண்ணமாகும். அவரே தன்னைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாத நிலையில், தடுமாறி கொண்டிருக்கும் நிலையில், உடன் இருப்பவர்கள், அருகாமையில் இருப்பவர்கள் தான் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியாக வேண்டும்.

ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட, பாதிப்படைந்த நபரை சமுதாயம் உரிய வகையில் பார்க்க தவறும்போது தான் பல்வேறு அசம்பாவிதங்களுக்கு காரணமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட உத்தரபிரதேசத்தில் மனநலம் பாதிப்படைந்த ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது.

ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் நாடெங்கும் மாதாமாதம் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கிறது. சென்னை உட்பட பல பெரிய நகரங்களில் இப்படி மனநலன் பாதிப்படைந்த சிறுமிகளுக்கு ஏற்படும் சங்கடத்தை சமுதாயம் தனது சங்கடமாக கருதாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதை இனியும் தொடரக்கூடாது.

மனநலனே சமுதாயத்தின் நலன் என்பதை ஆணித்தரமாக அனைவரும் ஏற்றாக வேண்டும். சாலையில் தப்பாக வண்டி ஓட்டுபவரை கோபத்தில் திட்டிவிட்டு சென்று விடுவதால் எந்த நன்மையும் அறவே கிடையாது. ஆனால் நல்ல முன்உதாரணமாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொண்டு செயல்பட்டால் தானே சமுதாயமே மகிழ்ச்சியாக, சிறப்பாக செயல்படும்!

உலகெங்கும் பத்து பேரில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது கொரோனா பெருந்தொற்றை விட மிக அபாயகரமான ஆரோக்கிய சீர்கேடு மனநல பிரச்சினைகளாக இருக்கிறது. குடிகாரனாக மாறுவதும், 40 நொடிகளுக்கு ஒரு தற்கொலை நடப்தும் மனநல சீர்கேடுகளால் தானாகும்.

ஆனால் உலகெங்கும் மனநல மருத்துவரின் சதவிகிதம் ஒரு லட்சம் பேருக்கு ஒருவர் என்றே இருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாகவும் பல்வேறு குடும்ப சிக்கல்கள் உருவாகி வருவதாலும் மனநல பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

ஆக, மனநல மருத்துவ வளர்ச்சிகள், அவர்களிடம் ஆலோசனை பெற்று, தேவையற்ற பயங்கள் நீங்கினால் தான் மனநல பிரச்சினை தீரும்.

நல்ல ஆரோக்கியமான மனநலம் கொண்டவர் தான் மனநல சிக்கல்களை தீர்த்து வைக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட உறுதி ஏற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *