செய்திகள்

மேல்மலையனூர்அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Spread the love

விழுப்புரம், பிப்.27-

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 23-ந்தேதி மயானக்கொள்ளை விழாவும், 24-ந்தேதி தங்க பல்லக்கு மற்றும் பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் 5-ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணி அளவில் மேள, தாளம் முழங்க உற்சவ அம்மன் அக்னி குளத்திற்கு ஊர்வலமாக பல்லக்கில் கொண்டு வரப்பட்டார். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தப்பட்டார்.

தீமிதித்து நேர்த்திக்கடன்

அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் மாலை 4 மணி அளவில் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார். பின்னர் சாமிக்கும் பூக்குழிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பூ உருண்டையை உருட்டி விட்டதும், பூசாரிகள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினர். அவர்கள் இறங்கியதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மேலும் பல பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு பணி

விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும், வட்டார மருத்துவ அலுவலர் குணசுந்தரி தலைமையிலான சுகாதார பணியாளர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நாளை தேரோட்டம்

6-ம் நாள் விழாவான இன்று (வியாழக்கிழமை) காலை தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் செல்வம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், சரவணன், வடிவேல், சந்தானம், கண்காணிப்பாளர் செண்பகம், ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *