-:எஸ் தீனதயாளன்:-
உலகில் 300 நாடுகளில் கால்பந்து ஆட்டம் முக்கியமான விளையாட்டாக உள்ளது. நமது இந்தியா, இந்த விளையாட்டில் 193 வது இடத்தில் உள்ளது. முன்னணியில் உள்ள 15 நாடுகளில் ஒன்றாக அர்ஜெண்டினா இருக்கிறது. அங்கு உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர், உலகம் முழுவதும் கொண்டாடக் கூடியதாக அதிகத் திறமை கொண்ட வீரராக மாரடோனா விளங்கினார்.
1986–ல் அர்ஜெண்டினா நாடு, உலக கால்பந்து கோப்பையைக் கைப்பற்றியது. இதில் தனிநபராக அவரது தனிப்பட்ட முயற்சி, திறமையால் முன்னணி நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி வாகை சூடச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கால் பந்தாட்ட ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
30.10.1960–ல் பிறந்த இவர் 25.11.2020 அன்று தனது 60 –வது வயதில் காலமானார். இவரது மரணம் அறிந்து பல ரசிகர்கள், வயது வித்தியாசமின்றி அழுது புரண்டு அவரது உடலைக் காண லட்சக்கணக்கில் திரண்டனர். ஒரு நாட்டின் அதிபருக்கு கூட இந்த அளவில் கூட்டம் கூடி இருக்க மாட்டார்கள். அவருடைய மறைவுக்கு அர்ஜெண்டினா நாடு மூன்று நாட்கள் துக்கம் அறிவித்தது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராக இவரும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலேயும் கொண்டாடப்படுகின்றனர்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டியாகோ மாரடோனா. கால்பந்தாட்டத்தில் உள்ள மோகம், அசாத்திய திறமையைத் தந்தது. இவர் உயரம் குறைவு தான். ஆனால் வேகமாக ஓடும் திறமை பெற்றவர். அனேகமாக இடதுகாலை உபயோகித்து பந்தை தட்டிச் செல்பவர். லாவகமாக பந்தை எதிரியின் கால்களுக்கு இடையே உள்ளே செலுத்தி அவர்களை ஏமாற்றி யாருமே அடிக்க முடியாத ஒரு நிலையில் இருந்தாலும் கோல் நோக்கி தவறாது அடித்து கோல் போடும் அசாத்திய திறமை தான் இவரது வலிமை. இது இவருக்கு பல கோடி ரசிகர்களை உலகம் முழுவதும் தேடித்தந்தது.
குறிப்பாக 1986–ல் உலக கால்பந்து போட்டியில் இங்கிலாந்துடன் நடந்த போட்டியில் இடது கையால் தட்டி
கோல் போட்டதை நடுவரும் ஏற்றுக்கொண்டார். எனவே இவர் அந்த கோலை ‘‘கடவுள் கை கொடுத்தார்’’ என்று நகைச்சுவையாக கூறினார். மேலும் மேற்கு ஜெர்மனி உடன் இருந்த கடைசி போட்டியில் ஒரு கோல் போட்டு கோப்பையை அர்ஜென்டினாவுக்கு பெற்றுத்தந்தார்.
1982, 1986, 1990 மற்றும் 1994 உலக கால்பந்து போட்டிகளில் பங்கேற்றார் மாரடோனா. 496 போட்டிகளில் இதுவரை பங்கேற்று 259 கோல்கள் போட்ட பெருமையும் உடையவர். மேலும் பல உலக கால்பந்து போட்டிகளில் அதிகமாக தலைமைப் பொறுப்பை ஏற்றவர். இவர் உலக கால்பந்து போட்டிகளில் 91 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த பெருமையும் பெற்றவர்.
பல நாடுகள் இவரை கால்பந்து கடவுளாகவே எண்ணினார்கள்.

இந்தியாவிற்கு பலமுறை வந்துள்ளார். 2015–ல் கேரளாவைச் சேர்ந்த இந்திய கால்பந்து அணி வீரர் விஜயன், மாரடோனாவோடு சேர்ந்து விளையாடியது மறக்க முடியாது என்று கூறுகிறார்.
அதேபோன்று 2017–ல் கிரிக்கெட் வீரர் கங்குலி உடன் இணைந்து சிறிது நேரம் விளையாடினார்.
இந்தியாவில் கோவாவிலும் கொல்கத்தாவிலும் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை நாடுகளில் இவருக்கு சிலைகள் வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை.
மேலை நாடுகளில் திருமண வாழ்க்கை என்பது அடிக்கடி விவாகரத்து, மறுபடியும் திருமணம் என்பது மிக சாதாரணமாக நடைபெறும் ஒரு விஷயம். இவருடைய கடைசி மனைவி பேபியாலோ 35 வயது ஆனவர். 1997–ம் ஆண்டு தனது 37–வது பிறந்த நாளன்று கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

போதை மருந்தை உபயோகித்ததன் காரணமாக 1991ஆம் ஆண்டு 15 மாதங்கள் கால்பந்தாட்டத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அடுத்து, 1996–ம் ஆண்டு உலகக் கால்பந்து போட்டியில் நீக்கப்பட்டு அர்ஜெண்டினாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். 2000–ம் ஆண்டு போதை மருந்து உட்கொண்டதால் அர்ஜெண்டினா நாட்டு சட்டப்படி அந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போதைய கியூபா அதிபர் இவரது ரசிகர். இவர் போதையிலிருந்து விடுபட இதற்கான மையத்தில் சிகிச்சை பெறச் செய்தார். பின்னர் அர்ஜென்டினா திரும்பினாலும் பல சர்ச்சைகளில் தனது பேச்சால் சிக்கிக்கொண்டார். போதை மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உடலில் பல உறுப்புகள் சேதம் அடைந்தது.
1996ல் தங்கப்பந்து விருதை பெற்ற வரும், 1999–ல் விளையாட்டு எழுத்தாளர்கள் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் ஆகவும் 1979, 1980, 1981, மற்றும் 1996 களின் சிறந்த கால்பந்து வீரராகவும் விருது பெற்றவர். 25.11.2020 அன்று மாரடைப்பால் காலமானார்.
மாரடோனாவின் அசாத்திய திறமைக்காக தனிப்பட்ட கால்பந்து அணிகள் நிறைய பணம் கொடுத்து விலைக்கு வாங்கி ஒப்பந்தம் செய்தனர். அதே போன்று விளம்பர படங்களிலும் நடித்து ஏராளமாக பணம் சம்பாதித்தார். அர்ஜெண்டானா, இத்தாலி போன்ற நாடுகளில் கால்பந்து அணிகளுக்கு பயிற்சியாளராகவும் பணி ஆற்றினார். இவை அனைத்தும் மாரடோனாவின் கால்பந்து விளையாட்டின் மிக உன்னதமான திறமையே.
எத்தனையோ கால்பந்தாட்ட வீரர்கள் இருந்தாலும் ஒரு சில ஆட்டக்காரர்கள் மட்டுமே தனிப்பட்ட திறமை மூலம் ஒளிவிட்டு பிரகாசித்து ரசிகர்களை கவர்ந்து உலகம் முழுவதையும் ரசிகர்களை தன் வசம் ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர்.
11 பேர் கொண்டு ஆடப்படும் கால் பந்தாட்டத்தில் ஒருவரை நட்சத்திர விளையாட்டு வீரராக கொண்டாடப்படுவது எளிதல்ல! மேலும் நட்சத்திர விளையாட்டு வீரரை எதிர் அணியினர் எளிதில் பந்துடன் கோல் அடிக்க முன்னேற விடவும் மாட்டார்கள்!
ஆட்டத்தில் இருந்த அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தனது சாதூர்ய திறமையால் உலக கோப்பை போட்டியில் தனது முத்திரையை பதித்ததை உலகம் இன்றும், என்றும் மனம் திறந்து பாராட்டுகிறது. மாரடோனாவின் திறமை நிலைத்து நின்று அவருக்குப் புகழைத் தந்தது. அந்த திறமைக்கு கால்பந்து உலகம் என்றுமே அடிமைதான்….!
மேலும் படிக்க…
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்