செய்திகள்

அனைத்திலும் புரட்சி படைக்கும் அம்மாவின் அரசு: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

நீர்மேலாண்மை, கல்வி, தொழில் துறை என

அனைத்திலும் புரட்சி படைக்கும் அம்மாவின் அரசு:

எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சங்கரன்கோவில், டிச.23

கல்வி, நீர் மேலாண்மை, தொழில் துறை என அனைத்து துறையிலும் புரட்சி படைக்கின்ற அரசு அம்மாவின் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் பேசியதாவது:

அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமியினுடைய மகள் எம்.ஹரிணி மற்றும் அமைச்சருடைய கணவர் முருகனுடைய தங்கை மகள் அனுசுயாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இதை ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நாம் பார்க்கின்றோம்.

அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமியை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நாங்கள் பார்க்கின்றோம். கழகம் என்றால் ஒரு குடும்பம். அப்படி குடும்ப நிகழ்ச்சியில் நாங்கள் பங்குபெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். மனமார, உளமார அந்தக் குழந்தைகளை வாழ்த்துகிறோம்.

வி.எம்.ராஜலட்சுமி, புரட்சித்தலைவி அம்மாவின் மனதில் இடம் பெற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் அமைச்சராக இடம் பெற்றார். இவர் சிறந்த முறையில் தன்னுடைய பொறுப்பை கவனிக்கக்கூடிய திறமை மிக்கவர், நல்ல கல்வி கற்றவர். அவருடைய கணவர் முருகன் கட்சியில் பொறுப்பு வகித்து, கழகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் குடும்பம் ஆரம்பகாலத்திலிருந்து கழகத்தில் இருக்கின்றனர்.

அவருடைய மாமனார் 1972 முதல் கழகத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார். கழக குடும்ப விழா என்கிறபோது, இந்த நிகழ்ச்சியை நடத்துகின்ற அனைவரும் கழகத்திற்காக பாடுபட்டு கழகத்தை மென்மேலும் வளர்வதற்கு உழைக்கின்றவர்களின் நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில் வருகைதந்து வாழ்த்த இருக்கின்ற அண்ணன் ஜான்பாண்டியனுக்கும் அவருடைய இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பாக பணியாற்றுவார்

அமைச்சர் 2004 -ல் கட்சி உறுப்பினராக பொறுப்பை ஏற்று, 2008 -ல் 18 வது வார்டு பாசறைச் செயலாளராக இருந்து, 2014 -ல் சங்கரன் கோவில் நகர மன்றத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றியவர். நகர கழக இணைச் செயலாளராக பணியாற்றியவர். இளம்பெண்கள் பாசறையின் பொறுப்பாளராக பணியாற்றியவர்.

2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்மாவின் ஆசியோடு அம்மாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து, இன்றுவரை திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். அம்மா மறைவிற்குப் பிறகு அவருக்கு கட்சியில் இன்னும் கூடுதலாக பொறுப்புகள் வழங்கப்பட்டு, கழக மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு கழகத்திற்காக சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றார். கட்சிக்காக உழைக்கின்ற குடும்ப நிகழ்ச்சியில் பங்குபெறுவது உண்மையிலேயே மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரே அணியில்…

அண்ணா தி.மு.க. என்று சொன்னாலே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் நம் மனதில் தோன்றுவார்கள். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் வலிமையோடும், செழிப்போடும், வளமோடும் இருப்பதற்கு காரணம் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருந்து ஒரே அணியில் இருக்கின்றதால்தான் நம்முடைய கழகம் வலிமை பெற்றிருக்கின்றது. குடும்ப நிகழ்ச்சி என்றால் அனைவரும் பங்கு பெறுகின்றோம். அப்படி குடும்பமும், கழகமும் ஒன்றாக இணைந்து பிணைக்கப்பட்டு நம் கழகம், நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை, எளிய, நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வித்தரம், கிராமப்புற பொருளாதாரம் அனைத்தும் உயர்வதற்கு அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக ஏராளமான திட்டங்களை நம் அரசு செய்து கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களிலுள்ள மாணவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கின்றார்கள். ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்வி பயிலும் கனவு நீட் தேர்வின் காரணமாக கானல் நீராகியது. அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டுமென்ற அடிப்படையில், 7.5 உள் ஒதுக்கீடு மூலமாக தமிழ்நாடு முழுவதும் 313 மாணவச் செல்வங்களுக்கு மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது.

இதையும் நாங்கள் சாதித்துக் காட்டியுள்ளோம்.

விவசாயம் பிரதானமாக இருக்கும் இந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக தூர்வாரப்படாத ஏரிகளை தூர்வாருவதற்காக, குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர்வாரப் பட்டதால், அவை ஆழப்படுத்தப்பட்டு, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கின்றது. நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கின்றோம். கல்வியில், நீர்மேலாண்மையில், தொழில் துறையில் புரட்சி என அனைத்திலும் புரட்சி படைக்கின்ற அரசு அம்மாவின் அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *