செய்திகள்

ரூ.160 கோடியில் சர்வதேச தரத்தில் மதுரை பெரியார் பஸ் நிலையம்

Spread the love

மதுரை நகரின் அடையாளமாகவும் இதயமாகவும் செயல்பட்டு வந்தது மத்திய பஸ் நிலையம். நகரின் மையத்தில் இருந்த இந்த பஸ் நிலையம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான பஸ்கள் வந்து சென்றன. மக்கள் தொகை பெருக்கம் காரணமாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை நகருக்கு மக்கள் வந்து சென்றதால் மத்திய பஸ் நிலையம் நெருக்கடி மிகுந்த இடமாக மாறியது. மழை பெய்தால் பஸ் நிலையமே தெப்பக்குளம் போன்று தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் மத்திய பஸ் நிலையம் பெரியார் பஸ்நிலையமாக மாற்றப்பட்டு ஆரப்பாளையம் மற்றும் பழங்காநத்தம் பகுதிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இது தவிர பெரியார் பஸ் நிலையம் எதிரே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அமைத்து மற்றொரு பஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. மேலும் பெரியார் பஸ் நிலையம் அருகே சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய திருவள்ளுவர் பஸ் நிலையமும் செயல்பட்டு வந்தது.

கோவை, சேலம், பெங்களூர் உள்ளிட்ட மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஆரப்பாளைம் பஸ் நிலையத்திலும் விருதுநகர், திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பழங்காநத்தம் பஸ்நிலையத்திலும் திருச்சி, புதுக்கோட்டை போன்ற பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்திலும் இருந்து புறப்பட்டு சென்றன. இதனால் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு பெரியார் பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அண்ணா பஸ் நிலையங்கள் என 6 பஸ் நிலையங்கள் மதுரை நகரில் செயல்பட்டு வந்தன.

இதனால் நகரில் போக்குவரத்து நெரிசலும் மக்கள் எந்த ஊரில் எந்த பஸ் நிலையத்தில் நிற்கும் என்று தெரியமால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அனைத்து பஸ் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ்நிலையம் கட்டப்பட்டது. தற்போது மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் நகர பேருந்துகள், சென்னை மற்றும் வெ ளி மாநில பஸ்கள், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் வடக்கு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பழங்காநத்தம் , அண்ணா திருவள்ளுவர் பஸ் நிலையங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டன. தற்போது பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

பெரியார் பஸ் நிலையத்துக்கு மாற்றாக மதுரையில் பல பஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டாலும் தற்போது வரை பெரியார் பஸ் நிலையம் பகுதி நெருக்கடி மிகுந்த இடமாக தான் இருக்கிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் உதவியுடன் மதுரை நகர் ஸ்மார்ட் சிட்டி அதாவது “பொலிவுறு நகரம்” என அறிவிக்கப்பட்டு 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட இருக்கின்றன. இதில் ஒன்று தான் பெரியார் பஸ் நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 159 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் பெரியார் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இந்த 2 பஸ் நிலையங்கள் இணைத்து ஒரே நேரத்தில் 64 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. பார்க்கிங் வசதியுடன் 4 மாடிகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்படுகிறது. தரை தளத்தில் ஒரே நேரத்தில் 371 கார்கள் 4,865 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது.

தரை தளத்தில் பஸ் நிலையம் அமைகிறது. முதல், 2 வது, 3 வது மாடிகளில் வணிக வளாகம் அமைகிறது. 4 வது மாடியில் “ஹைடெக்” உணவகம் அமைகிறது. முன்பு போல டவுன் பஸ்கள் மட்டும் புதிய ‘ஸ்மார்ட் சிட்டி’ பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.

அடுத்த 100 ஆண்டுகளை கணக்கிட்டு புதிய பெரியார் பஸ் நிலையம் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. பெங்களூர் மெஜஸ்டிக் பஸ்நிலைய வடிவமைப்பில் 30 ஆயிரம் சதுர மீட்டரில் (சுமார் 7 ஏக்கரில்) பிரம்மாண்டமாக பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒன்றறை ஆண்டுகளில் பெரியார் பஸ் நிலையம் புதிய பொலிவுடன் செயல்பட துவங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *