செய்திகள்

மெகந்தியில் உலக சாதனை படைத்த மதுரை

ஜெய மீனாட்சி இன்ஸ்டிட்யூட்டின் மெகந்தி திருவிழா:

3000 க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்

 

மதுரை மெகந்தியில் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மதுரையில் உள்ள ஜெய மீனாட்சி இன்ஸ்டிட்யூட் மெகந்தியில் உலக சாதனை படைத்துள்ளது.

பெண்கள் அனைவரும் விரும்பும் ஒன்றாக மருதாணி உள்ளது. பெண்கள் பொதுவாக மருதாணியின் மூலம் அவர்களது உள்ளங்கைகளில் பல வகையான டிசைன்களை வரைந்து தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். இது காலப்போக்கில் ஆண்களும் பயன்படுத்தும் அலங்காரப் பொருளாக மாறியது.

மருதாணி வைப்பது என்பது இப்போது பேச்சு வழக்கில் ‘மெஹந்தி’ என்ற வடமொழிச்சொல் மூலம் சொல்லப்படுகிறது என்றாலும் கூட கிராமப் புறங்களில் இன்றும் மருதாணி என்றே கூறுகின்றனர்.

தற்போது உள்ளங்கைகளில் மட்டும் அல்லாது கால், தோள்பட்டை என உடலில் வரைந்து தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். இதனை உடலில் வரைவதால் ‘உடற்கலை’ என்றும் இது அழைக்கப்படுகிறது.

விழா காலங்களில் மட்டும் அல்லாது சாதாரண நாட்களிலும் கூட தங்களது உடலில் மருதாணியை வைத்து பல வடிவமைப்புகளில் வரைந்து கொள்வார்கள். இப்படி ஆண்கள், பெண்கள் என அனைவரும் இந்த மருதாணியை விரும்புகிறார்கள்.

இப்போது மருதாணி வைப்பது என்பது நவநாகரீகமான ஒன்றாக இருக்கிறது. இதனை மற்றவர் கைகளில் வரைந்து விடுவதற்குப் பல கலைஞர்கள் உள்ளனர். இது தற்போது ஒரு தொழிலாகவும் மாறி விட்டது.

மெகந்தி வைக்கும் கலையைக் கற்பதில் பலரும் ஈடுபாடு காட்டுகின்றனர். இதனை அழகு நிலையம் நடத்துபவர்கள், பேஷன் டெக்னாலஜி, காஸ்ட்டியூம் டிசைனிங், அழகுக்கலை துறையைச் சேர்ந்த பாட சாலைகளில் மெகந்தி எப்படி வரைய வேண்டும் என ஆர்வமுள்ளவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

இந்தநிலையில் மெகந்தி வரைவதில் உலக சாதானை புரிந்துள்ளது மதுரையில் உள்ள ஜெயமீனாட்சி டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்.

மதுரை அழகர்கோயில் மெயின் ரோடு சர்வேயர் காலனி எஸ்.பி ஆபிஸ் எதிரில் உள்ளது ஜெய மீனாட்சி டிரைனிங் இன்ஸ்டிட்யூட். இது 5 ஆண்டுகளாக பேஷன் டெக்னாலஜி, காஸ்மடாலஜி போன்ற துறையில் டிப்ளமோ மற்றும் குறுகிய கால பயிற்சிகளை நடத்தி வருகிறது.

இந்த இன்ஸ்டிட்யூட் கடந்த மாதம் 11 ம் தேதி உலக சாதனைக்காக காந்தி மியூசியத்தில் மிகப்பெரிய ‘மெகந்தி பெஸ்டிவெல்’ ஒன்றை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் பங்குபெற்று பிரபலமான முகின்ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

தனக்குத்தானே மெகந்தி வரைந்து கொண்ட மாணவிகள்

உலக சாதனைக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மற்ற துறைகளைச் சேர்ந்த மாணவிகளும் அழகுக்கலை துறையில் கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளும் பெண்களும் கலந்துகொண்டனர்.

இதில் ஆயிரத்து 794 பெண்கள் ஒரே இடத்தில் கூடி, 2 ஆயிரத்து 691 கைகளில் மெகந்தி போட்டுக் கொண்டனர். பெரும்பாலான மாணவிகள் தாங்களே தங்களது கைகளில் மெகந்தி வரைந்தது பார்ப்பவர்களை வியப்படையச் செய்தது.

இதன் மூலம் 2018 ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த மெகந்தி உலக சாதனை முறியடிக்கப்பட்டது.

2018 ம் ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி மிக நீண்ட மெஹந்தி மராத்தான் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் சுசித்ரா கார்வாண்டிகர் ஹர்ஹாரே என்பவரது குழு உலக சாதனை நிகழ்த்தியது.

இந்தக் குழுவில் உள்ள 19 பேர் மொத்தம் ஆயிரத்து பெண்களுக்கு ஆயிரத்து 624 கைகளில் மெகந்தி போட்டு உலக சாதனையில் இடம்பிடித்தனர். இந்த நிகழ்ச்சி காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைந்தது.

இந்தச் சாதனையை மதுரை ஜெயமீனாட்சி டிரெய்னிங் இன்ஸ்டியூட் முறியடித்தது பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

மதுரை மெகந்தி பெஸ்டிவெல் நிகழ்ச்சியை குளோபல் அமைப்பின் மேற்பார்வையாளர்களாகக் மன்மோகன் ராவத், சுபோத் ராவத் ஆகியோர் நேரிடையாகப் பார்வையிட்டனர்.

அவர்கள் மெகந்தி உலக சாதனைக்கான சான்றிதழை மதுரை கோ.புதூர் ஜெய மீனாட்சி டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாக இயக்குனர் பாண்டீஸ்வரி முத்துகிருஷ்ணனிடம் வழங்கினர்.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சென்னை, பெங்களூர் போன்ற பல பகுதிகளில் அழகு நிலையம் நடத்துபவர்கள், பேஷன் டெக்னாலஜி, காஸ்ட்டியூம் டிசைனிங், அழகுக்கலை துறையைச் சார்ந்தவர்கள், கல்லூரி மாணவிகள் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *