செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம்

Spread the love

சென்னை, பிப். 18–

விருப்பம் போல் வழக்கு போட்டு, வாபஸ் பெறுவதா? என ஏ.ஆர். முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த, ‘தர்பார்’ படம் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வினியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டையும், அலுவலகத்தையும் வினியோகஸ்தர்கள் சிலர் முற்றுகையிட்டனர்.

வழக்கு நடத்த விருப்பமில்லை

இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதை பதிவு செய்து கொண்டு இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்றார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கிறஞர், ‘மனுதாரர் முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்று போலீசுக்கு முருகதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்’ என்று கூறி அந்த கடிதத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.

நீதிமன்றம் கண்டனம்

இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இதுகுறித்து கூறியதாவது:–

பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு கோர்ட்டும் உத்தரவிடும். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன் பின்னர் நடவடிக்கை வேண்டாம். பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த கோர்ட்டு மனுதாரர் விருப்பப்படி செயல்பட வேண்டுமா? என்று ஏ.ஆர்.முருகதாசுக்கு கண்டனம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *