சென்னை, டிச.6–
கொரோனா காலத்திலும், மருத்துவத் துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மத்திய பிரதேச மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்து பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
மத்திய பிரதேச அமைச்சர், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சுகாதாரத்துறை நடவடிக்கைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். மழை, புயல், வெள்ள காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட உரிய நடவடிக்கை காரணமாக கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
8456 மருத்துவ முகாம்
சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புயல் நடவடிக்கையாக, 8,456 மருத்துவ முகாம்கள் மற்றும் 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் நடத்தப்பட்டு, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீரேற்ற நிலையங்களிலும், குளோரினேசன் முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் லாரிகளில் குளோரினேசன் இல்லாமல் தண்ணீர் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா இலவச தடுப்பூசி
முதன்முறையாக கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மத்திய பிரதேச மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
கொரோனா காலத்திலும், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். சுகாதாரப் பணிகளில், தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. சுகாதாரத்துறையைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களில் உள்ள நல்ல பணிகளை எடுத்து கொள்ள வேண்டும். அதனால் தான், இங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக வந்து பார்வையிட்டேன். மருத்துவக் கல்வியில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுகிறது. எனவே தமிழகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். இதற்காக, தமிழக முதலமைச்சரை சந்திக்க உள்ளேன் என்று கூறினார்.