கொரோனா பாதிப்பில் விளிம்பு நிலை மக்களின் உணவு, வேலைவாய்ப்பு, கல்விக்காக…
4 மாதங்களில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடியை நன்கொடையாக கொடுத்த வள்ளல் மெக்கன்சி!
பணம் என்பதும் செல்வம் என்பதும் பொருளாதார வசதி என்பதும், உலகின் வளங்களை எல்லாம் தானும் தன் குடும்பமும் அனுபவிக்கத்தான் என்ற நுகர்வு மனப்பான்மை உலகின் பெரும் செல்வந்தர்களுக்கு இருப்பது கண்கூடு.மனிதன் தானாகவும் பிறந்தவனில்லை; தனக்காகவும் பிறந்தவனில்லை என்பார் தந்தை பெரியார். எனவே, மனிதன் சமூக விலங்கு என்பதால், பிறருக்காகவும் வாழ்வதே மானுட பிறவியின் தவிர்க்க கூடாத அடிப்படை. ஆனால், இந்தியாவின் சாபக்கேடு, இந்தியாவின் முதல்தர பணக்காரர்கள் எல்லாம், பரம ஏழைகளையும், நாட்டுக்கே சோறு போடும் உழவர்களையும் கூட சுரண்டி, தான் மட்டுமே நலமாக வாழ வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படுகிறார்கள்.
இப்படியான இந்திய சூழலில், உலக அளவில் பெண் பணக்காரர்களில் 3வது இடத்தையும், ஒட்டுமொத்த பணக்காரர்களில் 18வது இடத்தையும் பிடித்துள்ள மெக்கன்சி ஸ்காட், வெறுமனே சொத்து சேர்ப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், அதை மற்றவர்களுக்கு வாரி வாரிக் கொடுப்பதிலும் வள்ளலாக திகழ்கிறார் என்றால் வியப்பாகவும் நம்புவதற்கே தயக்கமாகவும் இருக்கிறதா? உண்மைகளை நம்பித்தானே ஆக வேண்டும்..
உலகின் 18 வது பணக்காரர்
உலகின் முன்னணி வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். பல்வேறு தளங்களில் வர்த்தகத்தை பெருக்கி வரும் ஜெப் பெசோஸின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இருவருக்கும் இடையிலான சில பிரச்னைகள் காரணமாக, இவர்கள் இவரும் கடந்தாண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அந்நேரத்தில், அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு, ஜெப், ஜீவனாம்சமாக வழங்கினார். இது அன்றைய மதிப்பின்படி, இந்திய ரூபாயில், சுமார் 2 லட்சத்து 94 ஆயிரம் கோடியாகும். மெக்கன்சியின் தற்போதைய சொத்துமதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலாராக உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின்படி, சுமார் ரூ.4லட்சத்து 46 ஆயிரம் கோடி. இதன்மூலம் மெக்கன்சி உலக அளவில் பெண் பணக்காரர்களில் 3வது இடத்தையும், ஒட்டுமொத்த பணக்காரர்களில் 18வது இடத்தையும் பிடித்துள்ளார்.
43 ஆயிரம் கோடி நன்கொடை
வெறுமனே சொத்து சேர்ப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், அதை மற்றவர்களுக்கு கொடுப்பதிலும் வள்ளலாக திகழ்கிறார் மெக்கன்சி. அவ்வப்போது, அற்றக்கட்டளைகளுக்கு நன்கொடை அளித்து வருகிறார். அந்த வகையில், தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றது முதல் கடந்த ஜூன் மாதம் வரை அவர் அறக்கட்டளைகளுக்கு அளித்த தொகை எவ்வளவு தெரியுமா? மொத்தம் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர். இதனை, 116 அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பின்படி, சுமார் ரூ.12 ஆயிரத்து 500 கோடி.
இதைத்தொடர்ந்து,எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், கொரோனா தொற்று உச்சம் தொட்ட ஜூலை மாதத்துக்கு பிறகான 4 மாதங்களில் மட்டும் மீண்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) இதனை 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பில்லியனர்களை வளப்படுத்திய கொரோனா
384 WAYSTOHELP என்ற தலைப்பில் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளவர், “ஏற்கெனவே போராட்டமான வாழ்கையை நடத்தி வரும் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இந்த தொற்றுநோய் அழிவுகரமான பந்தாக மாறியிருக்கிறது. பொருளாதார இழப்புகள் மற்றும் சுகாதார விளைவுகள், பெண்களையும், பல்வேறு தரப்பு மக்களையும், வறுமையில் வாழ்பவர்களையும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த சூழ்நிலையிலும் பில்லியனர்களின் செல்வத்தை கொரோனா காலம் கணிசமாக அதிகரித்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார் மெக்கன்சி ஸ்காட்.
நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நன்கொடைகள் வழங்கி வருவதாக அவர் கூறுகிறார். உதாரணமாக, உணவு, நிவாரண நிதி, வேலைவாய்ப்பு, வரலாற்று ரீதியாக ஓரங்கட்டபட்ட மக்கள், கல்வி, சிவில் உரிமைக் குழுக்கள், சட்ட பாதுகாப்பு அமைப்புகள், உள்ளிட்டவைகளுக்கு நன்கொடைகளை வழங்குவதை முதன்மையானதாக கொண்டுள்ளதாக மெக்கன்சி பெருமிதத்துடனும் தன்னடக்கத்துடனும் கூறி உள்ளார்.
எமிலியின் கவிதை வரிகள்
மேலும் ‘MacKenzie Scott’ பக்கத்தில் 384 waystohelp என்ற தலைப்பில் மெக்கன்சி எழுதும் போது, எமிலி டிக்கன்சன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரே அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டவர். இந்த 2020 ஆம் ஆண்டு அவரது கவிதைகள் அதிகமாக என் கண்களில் பட்டன. அவளுடைய தனிமை தன்னார்வமாக இருந்தபோதிலும், அது எளிதானது அல்ல. அவளுடைய அறை ஒரு கல்லறையை போன்றதாகவே இருந்தது. அவளுடைய பல கவிதைகளும் மரணத்தை மையமாகக் கொண்டுள்ளன. 2020 ஆம் ஆண்டின் குளிர்காலம் நெருங்கியவுடன், அந்தக் கவிதைகளில் ஒன்று இந்த கோவிட் காலத்தில் மனதில் அடிக்கடி நினைவுக்கு வந்தது. ஆனால் அவள் நம்பிக்கையுடன் எழுதியது இதுதான்:
‘நம்பிக்கை’ என்பது சிறகுகளை
தன்னுள் கொண்டுள்ளது-
அது ஆன்மாவில் அமர்ந்து
தொடங்குகிறது- அத்துடன்
சொற்களற்ற பாடலைப் பாடுகிறது
ஒருபோதும் எதையும் நிறுத்தாது ”
அவளுடைய தனி அறையிலிருந்து அவள் எழுப்பாத கேள்வி இதுவாக இருக்கலாம்: இந்த தொற்றுநோய் பாதிப்பால் ஏற்கனவே போராடி வரும் அமெரிக்கர்களின் வாழ்க்கையில், பொருளாதார இழப்புகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள், குறிப்பாக பெண்களுக்கும், நிறத்தால் வேறுபடுத்தப்படும் மக்களுக்கும் வறுமையில் வாழும் மக்களுக்கும் மிகவும் மோசமாக உள்ளது. இதற்கிடையில், இது கோடீஸ்வரர்களின் செல்வத்தை கணிசமாக பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியில் பெரும்பாலான மக்களை போலவே, குற்ற உணர்ச்சியுடன் பெருந்தொற்று முடிவடையும் வரை காத்திருப்பது எளிதானதா? என்று கேள்வியும் எழுப்பி உள்ளார் மெக்கன்சி ஸ்லாட்.
சில அரசுகளும் பெரும் கார்ப்பொரேட்டுகளும், மக்களிடம் இருக்கும் அடிப்படை வசதிகளையே உருவி்க்கொள்ளும் சூழலில், நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்ய விரும்பி, நன்கொடைகளை வாரி வாரிக் கொடுத்துள்ள மெக்கன்சி ஸ்காட்டை எத்தனை பாராட்டினாலும் தகும்தானே.
–மா. இளஞ்செழியன்.