செய்திகள்

தென் இந்திய ராணுவ அதிகாரி மொகந்தி சிறப்பு அனுமதியுடன் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்

காஞ்சிபுரம், நவ.2-

தென்னிந்திய ராணுவ துறையின் தலைமை அதிகாரி (லெப்டினன்டு ஜெனரல்) மொகந்தி டெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் சிறப்பு அனுமதி பெற்று நேற்று தனது குடும்பத்துடன் மாமல்லபுரம் வருகை புரிந்தார்.

மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு அருகில் அவரை சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் வரவேற்றார். பிறகு வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம், கணேச ரதம், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார். அவருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றியும், பல்லவர்களின் கற்சிற்ப படைப்புகள் பற்றியும், குடைவரை மண்டபங்கள், குடைவரை கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் ஆகியோர் அவருக்கு விளக்கி கூறினர்.

அனைத்து புராதன சின்னங்களையும் அவர் ரசித்து பார்த்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

தற்போது மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய புராதன சின்னங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியும் இல்லை. மத்திய தொல்லியல் துறையின் சிறப்பு அனுமதியுடன் இவர் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தென் இந்திய ராணுவ அதிகாரி வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் முன்பு மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *