செய்திகள்

மோடியின் ஊரடங்கு கொரோனா மீதான தாக்குதல் அல்ல; ஏழைகள் மீதான தாக்குதல்: ராகுல் காட்டம்

டெல்லி, செப். 9-

ஊரடங்கு என்பது அமைப்பு சாரா தொழில்கள் மீது பிரதமர் மோடி நடத்திய மூன்றாவது தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது பற்றி இன்று ராகுல் காந்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ஏழைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் உள்ளவர்கள், தினசரி கூலி சம்பாதிப்பவர்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் சம்பாதிப்பதை வைத்துதான் சாப்பிடுகிறார்கள்.

நீங்கள் (பிரதமர் மோடி) முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் ஊரடங்குப் பொதுமுடக்க உத்தரவு அறிவித்தபோது, ​ அவர்களைத் தாக்கினீர்கள். 21 நாட்களுக்கு முதல் பொதுமுடக்கம் இருக்கும் என்று பிரதமர் அறிவித்தார். அந்த 21 நாட்களிலேயே அமைப்பு சாரா தொழில்களின் முதுகெலும்பு உடைந்தது.

97 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, நீங்கள் ஒரு பொருளாதாரத் தொகுப்பை அளிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்தோம். ஆனால், அதற்கு பதிலாக, பணக்காரர்கள் பதினைந்து இருபது பேரின் லட்சம் கோடி மதிப்புள்ள வரிகளை அரசாங்கம் தள்ளுபடி செய்தது” என்று ராகுல் காந்தி சாடி உள்ளார்.

மேலும், “இந்தியாவில் பொதுமுடக்கம் என்பது கொரோனா மீதான தாக்குதல் அல்ல. ஏழைகள் மீதான தாக்குதல். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் மீதான தாக்குதல். இது அமைப்புசாரா துறை மீதான தாக்குதல். இதனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் சரிய, கொரோனா தாக்குதலில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

இப்போதும் தேவை ஏழைகளுக்கு அவர்கள் கையில் பணம் கொடுப்பதுதான். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நியாய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *