வாழ்வியல்

செவ்வாய் கோளில் வாழ்ந்தால் ‘டிமென்சியா’ நோய் ஏற்படலாம்!

Spread the love

சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது செவ்வாய். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு, இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. செவ்வாய் கிரகத்தை பற்றி வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு செயற்கைக் கோள்களை அனுப்பி, கிரகத்தில் உள்ள தட்பவெப்ப நிலை, நீர், வாயுக்கள் மற்றும் புவியியல் பண்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில், அமெரிக்கா, சோவியத் யூனியன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே வெற்றி கண்டுள்ளன. தற்போது, செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதே அறிவியலாளர்களின் முயற்சி. அதற்காக, செவ்வாய் கோளுக்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா ரஷியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் செவ்வாய் கோளை வாழ்விடமாக்கும் திட்டங்கள் உள்ளதாக அறிவித்துள்ளார். செவ்வாயை சுற்றும் ரோவர் மூலம், பூச்சிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பூச்சியியல் ஆய்வாளர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாள்பட்ட மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முற்பட்டால், முதல் பிரச்சினையாக இருப்பது சுகாதார குறைபாடுகள் தான். இவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், உலோகம், பிளாஸ்டிக் மற்றும் மனித தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிக அளவு கதிர்வீச்சு. அது புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.

டிமென்சியா என்பது மூளை நோய்கள் அல்லது பிற காயத்தால் ஏற்படும் மன செயல்முறைகளின் நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான கோளாறு ஆகும். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு இந்த செய்தி சாதகமானது அல்ல என கலிபோர்னியா மருத்துவ பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் பேராசிரியர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *