செய்திகள்

பாரதீய ஜனதா போட்டியிடும் ஆயிரம் விளக்கு, துறைமுகம் உள்ளிட்ட 20 தொகுதிகள் பட்டியல் அறிவிப்பு

சென்னை, மார்ச்.11-–

அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதா போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி பா.ம.க., பாரதீய ஜனதா, த.மா.கா. மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகளும், பாரதீய ஜனதாவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அண்ணா தி.மு.க., பா.ம.க. மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று மாலை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா தொகுதிகள் பட்டியலில் அண்ணா தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாரதீய ஜனதா சார்பில் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பாரதீய ஜனதா போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:–-

1. திருவண்ணாமலை

2. நாகர்கோவில்

3. குளச்சல்

4. விளவங்கோடு

5. ராமநாதபுரம்

6. மொடக்குறிச்சி

7. துறைமுகம்

8. ஆயிரம்விளக்கு

9. திருக்கோயிலூர்

10. திட்டக்குடி (தனி)

11. கோயம்புத்தூர் தெற்கு

12. விருதுநகர்

13. அரவக்குறிச்சி

14. திருவையாறு

15. உதகமண்டலம்

16. திருநெல்வேலி

17. தளி

18. காரைக்குடி

19. தாராபுரம் (தனி)

20. மதுரை வடக்கு

ஆகிய 20 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திட்டக்குடி மற்றும் தாராபுரம் ஆகிய 2 தனித்தொகுதிகளாகும்.

வெற்றிக்கு பாடுபடுவோம்: எல்.முருகன் போட்டி

இதுகுறித்து பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது:–-

பாரதீய ஜனதா பலம் வாய்ந்த தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அண்ணா தி.மு.க. தலைமையிடம் தங்களுக்கு ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த தொகுதிகள் தற்போது பாரதீய ஜனதாவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எங்களைப் பொறுத்தவரை எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான்.

அனைத்து தொகுதிகளிலும் முழு வீச்சில் இறங்கி வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்து கூறி தேர்தல் பணியாற்றுவோம். தற்போது கிடைத்து வரும் மத்திய அரசு திட்டங்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு கிடைத்து தமிழகம் மேலும் முன்னோடி மாநிலமாக மாறுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் கேட்க இருக்கிறோம். வெகுவிரைவில் அகில இந்திய தலைமை, வேட்பாளர் பட்டியலை வெளியிடும். கேட்ட தொகுதிகள் கிடைத்து இருப்பதால் திருப்தியாக இருக்கிறோம்.

கடந்த காலம் போன்று எல்லாம் இல்லாமல் மக்களின் ஒரே எண்ணம் வளர்ச்சி மட்டுமே. எனவே மத்திய அரசு ஆதரவு பெற்ற எங்கள் கூட்டணியை ஆதரிக்க பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். திட்டமிட்டப்படி பாரதீய ஜனதாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், அண்ணா தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் அயராது உழைத்து வெற்றிக்கு பாடுபடுவோம். அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மீண்டும் தமிழகத்தில் அண்ணா தி.மு.க. ஆட்சி மலர்வது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *