செய்திகள்

‘கண்பார்வையிழந்த’ ஹேமலதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Spread the love

சென்னை, டிச. 3 –

கண்பார்வை இழந்த வீணைக் கலைஞர் ஹேமலதா மணிக்கு ‘பேரல்லல் மியூசிக்’ என்ற அமைப்பு நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு அங்கீகாரத்தைக் கொடுக்கும் நோக்கில் இவ்விழா நடைபெற்றது.

ஹேமலதா மணி 10 வயதில் தனது கண்பார்வையை இழந்தார். இது வீணை வாசிப்பதில் உள்ள அவரது நோக்கத்தை எந்தவிதத்திலும் தடுக்கவில்லை. தனது கணவர் ஓபிஎஸ் மணியன், மகள், ‘வீண மேதை’ குரு சிட்டி பாபுவின் வழிகாட்டுதலில் இந்தியா, வெளிநாடுகளில் நடக்கும் இசை விழாக்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஹேமலதா, ‘நான் தஞ்சாவூரில் இருக்கும்போது வீணை வாசிப்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனது கண்பார்வையை நான் இழந்தபோதிலும், படிப்பிலும், வீணை கற்பதிலும் உறுதியாக இருந்தேன்’ என்றார்.

மேலும் அவர், தனது இளமைக் காலத்தில் தமிழ் மீது அளவு கடந்த ஆர்வம் வைத்திருந்ததாகக் கூறினார். ‘என்னால் அனைத்து திருக்குறளையும் மனப்பாடம் செய்ய முடிந்தது. மார்கழி மாதத்தில் திருப்பாவையை வீணையில் வாசித்தேன். பல கவிதைகளையும் எழுதியுள்ளேன். எனது குரு சிட்டி பாபுவுடன் சேர்ந்து பல ஆல்பம்களை வெளியிட்டேன்’ எனவும் தெரிவித்தார். மியூசிக் அகாடமி மினி ஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் 20க்கும் அதிகமான கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த விழா மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்காகவும், அவர்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் நடத்தப்பட்டதாக விழாவை நடத்தும் அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவரான நிர்மலா ராகவன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *