செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள்: செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு

சென்னை, பிப். 6–

சென்னை, வேப்பேரியில் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை, கொசப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 33). கடந்த 30.4.2016 அன்று மர்ம நபர்கள் சிலர் பாலமுருகனை கத்தியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக வேப்பேரி காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனc. விசாரணை செய்ததில் முன்விரோதம் காரணமாக பாலமுருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட தாம்பரம் சானடோரியத்தைச் சேர்ந்த சதிஷ் (எ) சதிஷ்குமார் (வயது 42), திருவிக நகர் பஜாஸ்பாய் (எ) முகமது மஜாசுதீன் (35), பெரம்பூர் சகாயு (27), விக்னேஷ் (24), கீழ்ப்பாக்கம் மணிகண்டன் (25), கோபிநாத் (23), புது வண்ணாரப்பேட்டை ஜாகிர் உசேன் (36), நெற்குன்றம் அருண்குமார் (35) ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட் 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வேப்பேரி போலீசார் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் வந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகளில் விக்னேஷ் என்பவர் இறந்துவிட்ட நிலையில், மற்ற 7 பேருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்பேரில் குற்றவாளிகள் சதிஷ்குமார், முகமது மஜாசுதீன், சகாயு, மணிகண்டன், கோபிநாத், ஜாகிர் உசேன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த வேப்பேரி போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *