சிறுகதை

வாழ்வோம் வெற்றி பெறுவோம் | ராஜா செல்லமுத்து

Spread the love

வழக்கம் போலவே ஊரில் இருக்கும் அண்ணனுடன் அன்று பேசும் போது தூக்கி வாரிப் போட்டது எனக்கு

‘‘என்ன சொல்ற..? ஆச்சர்யம் ஆகாயம் அளக்க மறுபடியும் ‘‘ நீ சொல்றது உண்மையா..? என்று மறுபடியும் மறுபடியும் அண்ணனிடம் கேட்டேன்

‘‘ஆமா.. உண்மை தான் மூர்த்தி.. மாமா.. இறந்து போயிட்டாருன்னு..’’ சொல்லுச்சு அந்த வார்த்தையைக் கேட்டு நிலைகுத்திய என் கண்கள் இடம் பெயர சில நிமிடங்கள் பிடித்தன.

இன்னும் நம்பாமல் அண்ணனிடமே மறுபடியும்

‘‘இது பொய் இல்லையே..! என்றேன்

‘‘இந்தா.. பக்கத்துல ஆண்டவர் சித்தப்பா இருக்காரு.. அவர் கிட்ட கேட்டுக்க..’’ என்று செல்போனை அவர் கையில் அண்ணன் கொடுத்தார்.

‘‘ஆமா மகனே..அண்ணன் சொல்றது உண்மைதான். மூர்த்தி இறந்திட்டார்..’’ என்று அவரும் சொல்ல நம்ப மறுத்தன என் நினைவுகள்.

‘‘எப்படி இருந்த மனுசன்.. சின்ன வயதில் ஊரில் நான் பார்த்த ஹீரோக்களில் அவரும் ஒருவர் அல்லவா..? அவர் எப்படி..? இறப்பின் அடிச்சுவடு தெரிய மன்றாடியது மனது ‘‘எப்பிடி இறந்தார்..? அவரிடமே மறு கேள்வி கேட்டேன்.

‘‘தெரியலையே மகனே.. ஏதோ விஷம் குடிச்சிட்டதா சொல்றாங்க..’’ என்று ஆண்டவர் சொல்ல,

‘‘என்ன சொல்றீங்க..? தற்கொலையா..? வியப்பாய்க் கேட்டேன்.

‘‘ஆமா..’’ என்று அவர் சொல்ல

‘‘எவ்வளவு தைரியமான மனுசனுக்கு இவ்வளவு கோழைத்தனமான எண்ணமா..? இருக்காது..’’ என்றே என் மனம் மன்றாடியது. சின்ன வயதில் ஊர்ச்சாவடியில் அவரைப்பற்றி நான் பேசிய பேச்சுக்கள் என் நினைவலைகளில் வந்து நின்றன

“இந்தச் சமூகத்தின் வீர வாள்.. எச்சூழலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் மூத்த இளைஞன் மூர்த்தி ”

இப்படி நான் பேசிய வரிகள் என் நினைவில் நிழலாட ஆண்டவர் சித்தப்பாவிடம் அதைச் சொன்னேன்

‘‘ஆமாப்பா நீ.. சொன்னத நானும் கேட்டேன் . நல்ல மனுசன் இப்பிடி சாவார்ன்னு நினைக்கவே இல்ல..’’ என்று அவர் சொன்னார்.

‘‘ச்சே.. என்ன இது..! ’’.

தற்கொலையை வீரர்கள் செய்வதில்லை. கோழைகள்தான் செய்கிறார்கள். அது சரி. இந்த பூமியில் நம்மைக் கேட்காமலே நமக்கு வழங்கப்பட்ட இந்த உயிரை நாமே.. மாய்த்துக்கொள்வது முட்டாள்தனம். நம்முடைய பிறப்பு எப்படி நமக்குத் தெரியாதோ.. அப்படித்தான் நம்முடைய இறப்பும் இருக்க வேண்டுமே தவிர.. அதை நாமே மாய்த்துக்கொள்வது மடத்தனம்..’’ என்று ஆண்டவரிடம் சொல்லிய போது அவரும் அதை ஆமோதித்தார்.

‘‘சித்தப்பா.. நம்ம ஊர்ல இருக்கிற ஆளுகளுக்கு ஒரு கவுன்சிலிங் குடுக்கணும்..’’ என்றேன் நான் .

‘‘எப்படி..? என்று செல்போன் பேச்சிலேயே ஆர்வமாகக் கேட்டார்.

‘‘குடிக்கக் கூடாது, சின்ன வயசுலயே மனசு ஒடஞ்சு தற்கொலை பண்ணிக் சாகக்கூடாது, உடல் பலத்த விட மன பலத்துக்கு வலிமை அதிகம்னு சொல்லணும். வாழ்க்கை ரொம்ப தூரத்தில இருக்கு. அதுக்குள்ள நீங்க ஏன் ஒங்களோட வாழ்க்கைய அழிச்சிக்கிறீங்கன்னு சொல்லணும். இது தப்பு சித்தப்பா.. ஒரு கூட்டுல இருக்கிற குருவிகள் ஒவ்வொன்னா பறந்து போனா..! அது மத்த குருவிகளுக்கு வலிக்கும்ங்கிற தெரியாத நம்ம பயலுகளுக்கு சுர்ருன்னு ஒறைக்கிற மாதிரி சில கேள்விகள கேக்கணும்..’’என்று நான் செல்போனில் சொல்லச் சொல்ல அத்தனைக்கும்

‘ஆமா..’’ என்றே சொன்னார் ஆண்டவர் சித்தப்பா.

‘‘இன்னொன்னு தெரியுமா..? என்றேன்.

‘‘சொல்லு தம்பி..’’ என்று ரொம்பவே ஆவலாகக் கேட்டார்

‘‘என்னைய, எங்க அண்ணன் சொல்லும் ஊர விட்டுப் போயி இவ்வளவு வருசமாச்சே.. நீ.. என்ன சம்பாரிச்சன்னு கேக்கும். அதுக்கு நான் என்ன சொன்னேன்னு தெரியுமா..?

‘‘சொல்லுப்பா..’’ என்றார் அவர்.

‘‘இங்க வந்து.. தண்ணி கிண்ணியடிச்சு பழகாம, யார் கிட்டயும் கடன் கிடன் வாங்கிக் கேவலப்படாம, பொம்பள கிம்பளன்னு கெட்ட சோலி எதுவும் இல்லாம.. இருக்கிறதே பெரிய சொத்துன்னு சொல்லுவேன். இது சரிதானே சித்தப்பா..’’ என்றேன்.

‘‘சரியாச் சொன்ன தம்பி.. இது இவ்வளவும் இருந்து என்னென்னமோ வச்சுருக்கிறதுல எந்த பிரயோசனமும் இல்ல..’’ என்றார்.

‘‘சித்தப்பா..இந்த மாதிரி தேவையற்ற மரணங்கள் என்னைய ரொம்பவே உறுத்துது. அதுனால நம்ம பயக கிட்ட சொல்லுங்க. வாழ்க்கை ரொம்ப சவாலானது தான். அதுல போராடி வெற்றி பெற்று வாழ்றதுல தான் சுகமே.. இருக்குன்னு அத விட்டுட்டு.. விலை மதிப்பில்லாத உயிர ஏன்? இவங்களா மாச்சுக்கிறாங்கன்னு தெரியல.. இனிமே காரணமில்லாம எந்த ஒரு உசுரும்போகக் கூடாதுன்னு ..சொந்தக்காரப் பயக கிட்ட சொல்லி வையுங்க..’’என்று சொல்லிவிட்டுப் போனைக் கட் செய்தேன்.

‘தற்கொலை என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். தற்கொலை செய்துகொள்பவன் ஒரு முறை மட்டுமே இறந்து போகிறான். ஆனால் அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இறக்கிறார்களே..’ என்ற கவலை என்னைக் கவ்விக் கொண்டு கவலைப்பட வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *