செய்திகள்

சட்டசபைக்கு வருகிறார்களா?, சிறைக்கு செல்கிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல் வழக்கு

சட்டசபைக்கு வருகிறார்களா?, சிறைக்கு செல்கிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்

அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம், ஜன.4–

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது. அவர்கள் சட்டசபைக்கு வருகிறார்களா? சிறைக்கு செல்கிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றிய அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஒன்றிய அவைத்தலைவர் சீத்தா கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: அடாது மழை பெய்தாலும் இளைஞர்களும், மகளிரும் அதிகளவில் கூட்டத்தில் பங்கேற்று உள்ளதை பார்க்கும் போது, கட்சிக்கு புதிய எழுச்சியை உண்டாக்கி உள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் தேர்தல் பணி செய்ய வேண்டும். நீங்கள் நினைத்தால் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாம் அமைத்திட முடியும். ஒவ்வொரு வாக்காளர்களும் மிகவும் முக்கியமானவர்கள் அவர்களை நீங்கள் தினமும் சந்தித்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

தி.மு.க. கனவு காண்கிறது

மக்களுடைய ஏழ்மையை, அறியாமையை பயன்படுத்தி கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று தி.மு.க. கனவு காண்கிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் இந்த ஆட்சி இருக்குமா என நினைத்தவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி நாடே போற்றும் வகையில் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி பல்வேறு திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளார். இன்றைக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியின் மீது மக்களிடையே நல்ல பெயரும் அபிப்ராயமும் உள்ளது. அதை நீங்கள் வாக்குகளாக மாற்ற வேண்டும். முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்து பணியாற்ற வேண்டும்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அவர்கள் சட்டசபைக்கு வருகிறார்களா? அல்லது சிறைக்கு செல்கிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் கண்டமானடி ராஜ், அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.டி. முருகவேல் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *