செய்திகள்

தமிழ்நாட்டில் தமிழை பாதுகாப்போம் தமிழகத்துக்கு வெளியே தமிழை வளர்ப்போம்

தமிழியக்க 3ம் ஆண்டு தொடக்க விழா

‘‘தமிழ்நாட்டில் தமிழை பாதுகாப்போம் தமிழகத்துக்கு வெளியே தமிழை வளர்ப்போம்’’

தமிழியக்க நிறுவனர் முனைவர் கோ. விசுவநாதன் பேச்சு

வேலூர், அக். 17

உலகத்திலே அச்சடிக்கப்பட்ட முதல் மொழி நூல் என்றால் அது தமிழ் மொழி நூல் தான். இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் நாம் தமிழை பாதுகாப்போம் தமிழகத்திற்கு வெளியே தமிழை வளர்ப்போம்’ என்று தமிழியக்க நிறுவனர்முனைவர் கோ. விசுவநாதன் கூறினார்.

தமிழியக்கத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா காணொளி மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில் தமிழியக்க நிறுவனர்-தலைவர் முனைவர்.கோ. விசுவநாதன் தலைமையுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழை சுவாசிப்போம் பிறமொழிகளை நேசிப்போம்’. இன்று பலர் ஆங்கிலம் கலந்த தமிழைத் தான் பேசுகிறோம் இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பு பெயரை வைத்தே தமிழர் என்று நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம் ஆனால் தற்போது அந்த நிலை இல்லை பிற மொழி சொற்களை கலந்து தான் பெயரை நாம் வைக்கிறோம். இந்த நிலை மாறி தமிழில் பெயர் வைத்து நம் அடையாளத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். இதற்காகத்தான் தமிழியக்கத்தின் சார்பில் தூய தமிழ் பெயர்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 121 பெரிய மொழிகள் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 500 மொழிகள் உள்ளது. நாம் முதலில் தமிழனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். நம் பெயரிலும், பேச்சிலும் தமிழ் இருக்க வேண்டும். ராஜேந்திரசோழன் 13 நாடுகளை வென்று இருக்கிறார் உலகம் முழுவதும் தமிழ் பேசும் அளவிற்கு நாம் வணிகம் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சிறப்புரையாற்றியதாவது:

உண்மையிலேயே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுதான் இது. கீழடி அகழ்வாய்வு மூலம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர் என சாட்சிகள் உள்ளது. மொத்தத்தில் நம் தாய் மொழியான தமிழின் புகழை உலக அளவில் வளர்க்க வேண்டும் என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையில் பேசியதாவது, தமிழர்களின் பெருமை உலகின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி இருக்கின்றது. அதே போல் தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். மேலும் தமிழர்களின் வீட்டின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள்

தமிழியக்கத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:–

* மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இந்திய வரலாற்றை 12 ஆயிரம் ஆண்டுகள் முந்தியிருந்து தொடங்க வேண்டும் என்ற வரையறையோடு, வரலாற்றையும், கலாச்சாரத்தையும் இணைத்து, மறுவரைவு செய்ய வல்லுநர் குழுவில் தென்னிந்தியர் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதியினரும் இடம் பெற மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

* அஞ்சல்துறை, தொடர் வண்டித்துறை, வங்கித்துறை, ஆயுள்காப்பிட்டுத்துறை, சுங்கத்துறை போன்ற மைய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற அந்தந்த மாநிலம் இளைஞர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* கடலூர் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அரசின் காவல்துறையைச் சார்ந்த 3 காவலர்களையும் பணியிடை மாற்றம் நடவடிக்கையை உடனே விலக்கி, பழைய பணியிடத்திலேயே, அவர்கள் பணியாற்றிட காவல் துறை பரிசீலனை செய்ய வேண்டும்.

முன்னதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி விழாச் சீருரையும், தமிழக அரசின் தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் எழிலுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழியக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *