செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவு: கவர்னர்கள், கட்சி தலைவர்கள் இரங்கல்

சேலம், அக்.13

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு கவர்னர்கள், கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமான செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

தனது நிபந்தனையற்ற அன்பு மற்றும் தியாகங்களால் பிறப்பிலிருந்து சரியான முறையில் வளர்த்த தாயின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய ஆத்மா நித்திய அமைதியுடன் என்றென்றும் ஓய்வெடுக்கவும், எடப்பாடி பழனிசாமிக்கு பலம் கொடுக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

ராமதாஸ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக் குறைவால் சேலத்தில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தவுசாயம்மாளை இழந்து வாடும் அவரது புதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மறைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

தமிழக முதல்வருடைய கடின உழைப்புக்கும் படிப்படியான உயர்வுக்கும் சிறுவயதில் இருந்தே அவர்களை வளர்த்து ஆளாக்கிய பெரும் பங்கு அவர்களது தாயாரையே சாரும்.

அன்பு தாயாரை இழந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அண்ணா தி.மு.க.வினருக்கும் த.மா.கா. சார்பிலே என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் தனது 93-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு தி.மு.க.வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

வைகோ

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் இயற்கை எய்திய செய்தி அறிந்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முதல்வருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு, ம.தி.மு.க.வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக்குறைவினால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

அன்பால் அரவணைத்த தாயாரை பிரிந்து வாடும் முதல்வரின் வேதனையை உணர முடிகிறது. தாயின் மறைவு முதல்வருக்கும், அவரது குடும்பத்தார்க்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வேதனையில் வாடும் முதல்வருக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையார் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அன்னையார் தவுசாயம்மாள் தமது 93 ம் வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இந்திய ஹஜ் அசோஷியேஷன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் சார்பில் தலைவர் அபுபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். அண்மையில் எனது தாயார் அமெரிக்காவில் உயிரிழந்த போது முதலமைச்சர் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்த நேரத்தில் நீண்ட நாட்கள் நண்பராக பழகி வரும் முதலமைச்சருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தாலும் தாய்க்கு மகன் என்கிற போது அதன் வலியும் வேதனையும் அதிகம் என்பதை உணர்கிறேன். தாயாரின் ஆன்மா அமைதியின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று அபுபக்கர் கூறியுள்ளார்.

கோகுல மக்கள் கட்சி

தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத் தலைவரும், கோகுல மக்கள் கட்சி நிறுவனர் தலைவருமான எம்.வி.சேகர் யாதவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பெற்ற அன்னையை இழந்து நிற்கும் தமிழக முதல்வருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் கோகுல மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் செயலாளர்

கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ்நாடு முதலமைச்சரும் அண்ணா தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) இன்று அதிகாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

தவுசாயம்மாள் உடல்நலிவு காரணமாக சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார்.

அவரின் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அஞ்சலி தெரிவிப்பதுடன் தாயாரை இழந்து நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *