செய்திகள்

சாலைப் போக்குவரத்துத்துறை மின்சார வாகனத்துக்கு மாறும்

டெல்லி, பிப். 20–

மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில், மின்சார வாகன விழிப்புணர்வு குறித்த பரப்புரை இயக்கத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்பட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாய்வுக்கான செலவை விட, மின்சாரம் மூலம் செய்யப்படும் சமையலுக்கு செலவு குறைவாக தான் இருக்கும். மின்சார சாதனங்களில் சமையல் செய்வது சூழலுக்குத் தூய்மையானது என்பதோடு எரிவாயு இறக்குமதியின் தேவையையும் குறைக்க முடியும்.

மின் வாகனங்களுக்கு மாறுக

சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அரசு துறைகள் மின்சார வாகனங்களை பயன்படுத்த துவங்க வேண்டும் என்றும், இதற்கு வழிகாட்டும் வகையில், சாலை போக்குவரத்து துறையானது, மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 10 ஆயிரம் வாகனங்கள் மின்சார வாகனங்களாக இயக்கினாலே, அதன் மூலம் மாதம் ரூ.30 கோடி சேமிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அனைத்து அரசு அதிகாரிகளும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தவும், கட்டாயமாக்கவும் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *