செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 2வது நாள் ஆட்டத்தில் தடுமாறும் இந்தியா

அகமதாபாத், மார்ச் 5–

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் தடுமாற்றத்துடன் ஆடி வருகின்றனர்.

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது. ஏற்கனவே நடந்த முதல் மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், மற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று 2–1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தாலே இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும்.

இந்நிலையில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணியின் வீரர்கள் தடுமாற்றம் அடைந்து அடுத்தடுத்து அவுட்டானார்கள். அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அரைசதத்தை கடந்தார். மேலும் அணியின் லாரன்ஸ் 46, ஓலி போப் 29 ரன்களை எடுத்தனர். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜாக் கிராவ்லி – 9 ரன்களுடன், சிப்லி – 2, பேர்ஸ்டோ – 28, ஜோ ரூட் – 5, ஸ்டோக்ஸ் – 55,

ஆலி போப் – 29, டேன் லாரன்ஸ் – 46, பென் போக்ஸ் – 1, டாம் பெஸ் – 3, ஜாக் லீச் – 7 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். ஆண்டர்சன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் 3 பந்துகள் ஆடிய சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு ரோகித் சர்மா- புஜாரா இணைந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா (8 ரன், 34 பந்து), புஜாரா (15 ரன், 36 பந்து) களத்தில் இருந்தனர்.

2வது நாள் ஆட்டம்

இன்று காலை 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. 23.6வது ஓவரில் லீச் வீசிய பந்தை அடிக்க முயன்ற புஜாரா (66 பந்துகளில் 17 ரன்) எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் இணைந்து ரன் அடிக்க முயன்றார். ஆனால் அந்த கூட்டணியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 26.4வது ஓவரில் விராட் கோலி 8 பந்துகள் ஆடி ரன் எதுவும் எடுக்காத நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது போக்ஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய துணை கேப்டன் ரஹானே, ரோகித் சர்மா இணைந்து நிதானமாக ரன் அடிக்க முயற்சித்தனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பான முறையில் பந்து வீசினர். 37.5 ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தை ரஹானே (45 பந்துகளில் 27 ரன்) அடிக்க முயன்ற போது பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 37.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன் அடித்தது. ரோகித் சர்மா 102 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

49 ரன்னில் அவுட்

பின்னர் களம் இறங்கிய ரிஷ்ப் பண்ட், ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக ரன் அடிக்கும் முயற்சியில் இறங்கினார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 144 பந்துகளில் 49 ரன்கள் அடித்த நிலையில் 49.6வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். 52 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் அடித்திருந்தது. அடுத்தடுத்து இந்திய வீரர்கள் அவுட்டானதால் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.

அதைத் தொடர்ந்து களம் இறங்கிய தமிழக வீரர் அஸ்வின் ரிஷ்ப் பண்ட் கூட்டணி ரன் அடிக்கும் முயற்சியில் இறங்கினர். 52 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் அடித்திருந்தது.ரிஷப் பண்ட் 22 ரன்களும், அஸ்வின் 7 ரன்கள் அடித்து களத்தில் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *