அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாக்குதல், லண்டன் விமான நிலைய தாக்குதல் என்று, ‘ஆளில்லா சிறிய விமானங்கள்’ (ட்ரோன்கள்) பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடிகிறது. இதை தடுக்க, அண்மையில் ரேதியான் என்ற ராணுவ தளவாட நிறுவனம், லேசர் கதிர் பாய்ச்சும் பீரங்கியை உருவாக்கியுள்ளது.
இந்த கருவியை, அமெரிக்க ராணுவம் பரிசோதனை அடிப்படையில் தற்போது வாங்கி உள்ளது. வானில் சில ஆயிரம் அடிகள் வரை பறக்கும் சிறிய ட்ரோன்களை, இந்த பீரங்கி அடையாளம் கண்டு லேசர் கதிர்களை பாய்ச்சும். கதிர் பாய்ந்ததும், ட்ரோன் செயல் இழந்து தரையில் வீழ்ந்துவிடும்.
ஒரு முறை லேசர் கதிரை பாய்ச்ச, 1 டாலர் மட்டுமே செலவு ஆகும். மேலும், 220 வோல்ட் மின்சாரம் தரும் சாதாரண ஜெனரேட்டர் இருந்தால் போதும். இந்த ட்ரோன் கொல்லும் லேசர் பீரங்கி, ஓய்வில்லாமல் செயல்படும் திறன் பெற்றுவிடும். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் தாக்குவதும், அதைவிடக் குறைவான நேரத்தில் ட்ரோனை அடையாளம் கண்டு குறிவைக்க முடிவதும், இந்த பீரங்கியின் சிறப்பம்சம்.