செய்திகள்

விடுதி அறைக்குள் நள்ளிரவில் புகுந்த லேப்–டாப் திருடன்: சிசிடிவி கேமிரா மூலம் கைது

சென்னை, டிச. 30–

சென்னை கிண்டியில் நள்ளிரவில் விடுதி அறைக்குள் புகுந்து லேப்–டாப்பை திருடிய நபரை போலீசார் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணித்து 2 மாதங்களுக்குப் பின் கைது செய்தனர்.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், சார்தார் காலனியைச் சேர்ந்தவர் கிரிதரன் (வயது 28). அங்குள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இரவு வழக்கம் போல சாப்பிட்டு விட்டு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்த போது அவரது அறையில் வைத்திருந்த இரண்டு லேப்–டாப்கள் மற்றும் ரூ. 3,700 பணம் காணவில்லை. மர்ம நபர்கள் நள்ளிரவில் அவரது அறைக்குள் புகுந்து இந்த திருட்டை நடத்தியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கிரிதரன் கிண்டி போலீசில் புகார் அளித்தார்.

அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் கிண்டி உதவிக்கமிஷனர் சுப்பராயன், இன்ஸ்பெக்டர் கர்ணன், எஸ்ஐ ஸ்ரீதர் மற்றும் தலைமைக்காவலர்கள் தாமோதரன், அச்சுதராஜ், ஊர்க்காவல்படை காவலர் சந்தோஷ் அடங்கிய தனிப்படையினர் இந்த திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் அறையினுள் நுழைந்து லேப்–டாப்களை திருடி செல்வது பதிவாகியிருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் லேப்–டாப்பை திருடிச்சென்ற நபர் கள்ளக்குறிச்சி, கீழத்தெரு ஜவுளிபாளையத்தைச் சேர்ந்த ராஜதுரை (வயது 23) என்பது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக நடத்திய தேடுதல் வேட்டையில் திருச்சியில் பதுங்கியிருந்த ராஜதுரையை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 11 லேப்–டாப்கள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இதர லேப்டாப்களையும் மற்றும் செல்போன்களையும் அவற்றின் உரிமையாளர்களை கண்டறிந்து ஒப்படைக்கும் நடவடிக்கைகளை போலீசார் செய்து வருகின்றனர். லேப்–டாப் திருடனை விடாமுயற்சி மூலம் தொடர்ந்து கண்காணித்து கைது செய்த அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *