சிறுகதை

குப்பை | ராஜா செல்லமுத்து

Spread the love

வியாழக்கிழமை வந்தால் போதும் பாபாவின் பக்தி மணம் அந்தப் பகுதியையே நிரப்பும் .

முருகன், விநாயகர், மாரியம்மா, காளியாத்தா என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கூட்டம்,

திடீரென பாபாவுக்குத் தாவியதில் வியப்பொன்றுமில்லை .

எல்லாம் பணம் படுத்தும் பாடு, அவர் கேட்டதையெல்லாம் கொடுக்கிறார் என்ற நம்பிக்கை. அதனால் தான் என்னவோ இப்போது பாபாவின் கொடி ரொம்ப உயரத்திலேயே பறந்து கொண்டிருக்கிறது.

‘‘ஏய்.. மகாலட்சுமி இன்னைக்கு வியாழக்கெழம பாபா கோயிலுக்குப் போயிட்டு வரலாமா..?’’ என்று புஷ்பலதா கூப்பிட,

‘‘என்ன இப்பிடிச் சொல்லிப்புட்டிங்க.. கெழமயக் கூட மறந்திருவேன் ஆனா..! பாபாவ நான் மறக்க மாட்டேன்ல.. பாபாவ மறக்கிறதும்.. நம்ம மூச்ச மறக்கிறதும் ஒண்ணு தான் புஷ்பா..’’ என்ற மகாலட்சுமி பாபா கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் பாபா கோயிலை அடைந்தனர். ஏற்கனவே அங்கு பெரிய கூட்டம் கூடி நின்று கொண்டிருந்தது.

‘‘இது என்ன..? இவ்வளவு கூட்டமா இருக்கு..’’ என்ற இருவரும் பாபாவின் கருவறை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவர்களால் கோயிலுக்குள் முன்னேறவே முடியவில்லை.

‘‘என்ன புஷ்பா.. எந்த வியாழக்கெழமையும் இல்லாம.. இந்த வாரம் இவ்வளவு கூட்டமா இருக்கு..!’’ என்று சொன்ன மகாலட்சுமியின் மனசு ரொம்பவே கலங்கியது.

‘‘ஆமா மகா.. இவ்வளவு கூட்டம் இருக்கே..’’ என்று முன்னாடி போனவர்களிடம்

‘‘எங்க போறிங்க..?’’ என்று ஒருவர் இடைமறித்தார்.

‘‘பாபா கோயிலுக்கு..’’என்று மகா பதில் சொன்னாள்.

‘‘ம்ஹூம்.. இன்னைக்கு நீங்க அங்க போக முடியாது..கோயில் பக்கத்தில ஏதோ பிரச்சினையா இருக்கு..’’ என்று அவர் சொல்ல,

‘‘என்ன பிரச்சினை..’’ என்று ஆவலாய்க் கேட்டாள் மகா

‘‘அத என் வாயால.. சொல்ல மாட்டேன் நீங்களே..! போய் பாருங்க..’’ என்றவர் அப்படியே ஒதுங்கிக் கொண்டார்.

மகாவுக்கும் புஷ்பாவுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

‘‘புஷ்பா.. இன்னைக்கு ஒரு பூஜை பண்ணலாம்னுட்டு இருந்தேன்.. இப்படி கூட்டம், பிரச்சினைன்னு இருக்கே..’’ என்று மகா ரொம்பவே வருத்தப்பட்டார்.

‘‘என்ன பூஜை மகா..’’ என்று புஷ்பா கேட்டாள்

‘‘வேண்டுறத வெளியில சொன்னா பலிக்காது புஷ்பா..’’

‘‘அப்பிடியா..?’’ என்று ஆச்சர்யம் கலந்து கேட்டாள் புஷ்பா.

‘‘ஆமா..’’ என்று பூஜைக்கான விளக்கத்தை மகா வெளியே சொல்ல மறுத்து விட்டாள்.

இரண்டு பேரும் கொஞ்சம் நெருங்கி நெருங்கி கோயிலை முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஓரளவுக்கு அவர்கள் கோயிலை ஒட்டிப் போன போது அங்கே போலீஸ்காரர்கள் நிறையக் குவிந்து கிடந்தனர்.

‘‘என்ன போலீஸ் இருக்காங்க..’’ என்று பதறினாள் மகா, புஷ்பாவுக்கும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டு பேரும் செய்வதறியாது திகைத்தனர்.

‘‘மகா..அந்த ஆளு சொன்னது உண்மை தான்.. ஏதோ பிரச்சினை நடந்திட்டு இருக்கு.. ச்சே.. நானும் ஒரு சிறப்பு பூஜை பண்ணலாம்னு ஆச பட்டேன். இப்பிடி கூட்டமா இருக்கே..’’ – என்று புஷ்பாவும் வருத்தப்பட

‘‘என்ன புஷ்பா..நீயும் சிறப்பு பூஜை செய்ய நெனச்சியா..?’’ என்று மகா கேட்க

‘‘ஆமா..’’ என்று தலையாட்டினாள் புஷ்பா

‘‘என்ன பூஜை புஷ்பா..’’ என்று மகா கேட்டாள்.

‘‘செய்யுற பூஜைய வெளிய சொன்னா பூஜை பலிக்காது மகா..’’என்று புஷ்பா சொன்னாள்.

‘‘என்ன புஷ்பா நான் சொன்னதையே.. திரும்ப எனக்குச் சொல்ற..?’’ என்று மகா சொல்ல அப்போது அங்கு பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது.

‘‘ஏய்.. இந்த எடத்த விட்டு..எழுந்திருய்யா..’’ என்று பிச்சைக்காரரை விரட்டிக் கொண்டிருந்தார்கள் போலீஸ்

‘‘ம்ஹூகும்..’’ அந்தப் பிச்சைக்காரர் அந்த இடத்தை விட்டு எழவே இல்லை..அவரைச் சுற்றி நிறையக் குப்பைகள் கிடந்தன.

‘‘ஐயா.. எந்திருங்கய்யா.. இந்த இடம் எல்லாம் ஒரே குப்பையா இருக்கு.. – கோயிலுக்கு வந்து போறவங்களுக்கு ரொம்பவே எடஞ்சலா இருக்கு.. நீங்க எந்திருச்சீங்கன்னா..! இந்த எடத்த சுத்தம் பண்ண முடியும் எந்திரிங்க..’’ என்று ஆட்கள் சொல்லிப் பார்த்தும் அந்தப் பிச்சைக்காரர் அந்த இடத்தை விட்டு எழவே இல்லை.

‘‘சார்..இவரு இப்படிச் சொன்னா..! கேக்க மாட்டாரு போல..ஒங்களோட பாணியில சொல்லுங்க..’’என்று கோயிலைச் சுற்றியிருப்பவர்கள் சொல்ல, அந்தப் பிச்சைக்காரர் முதலில் உட்கார்ந்திருந்தவர் இப்போது படுத்துக்கொண்டார்.

‘‘சார்..பாருங்க..இது மாதிரி தான் செய்றான் இந்த பிச்சக்காரன்.. ஒரே குப்பை நாத்தம், பக்தர்கள் சுகாதாரமா கோயிலுக்குப்போய்ட்டு வர முடியல.. மொதல்ல இந்த குப்பைய அள்ளி எறிஞ்சிட்டு இந்த எடத்த சுத்தப்படுத்தணும் சார்.. இன்னைக்கு பணம் கொட்டுற குபேர பூஜை வேற இருக்கு சார்..’’ என்று அவர் சொன்ன போது மகாவும் புஷ்பாவும் கூட சிரித்தார்கள்.

‘‘என்ன மகா.. நீயும்..குபேர பூஜை செய்யத் தானே வந்தே..?’’

‘‘ஆமா..’’ என்று தலையாட்டினாள் மகா.

‘‘நீ புஷ்பா..’’

‘‘ஆமா.. நானும் குபேர பூஜை தான் பண்ண வந்தேன்..’’ என்று புஷ்பா சொல்ல

‘‘நீங்க மட்டுமில்லீங்க.. இங்க வந்திருக்கிற எல்லாமே பணம் கொட்டோ கொட்டு கொட்டணும்னு தான் இன்னைக்கு குபேர பூஜை செய்ய வந்திருக்காங்க..’’என்று அங்கிருப்பவர் சொல்ல

அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் குப்பைக்குள் படுத்துக்கிடந்த பிச்சைக்காரரை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினார்கள்.

‘‘ஐயோ..என்னைய விடுங்க..என்னைய விடுங்க..’’ என்று மறுபடியும் மறுபடியும் அந்த குப்பையை நோக்கியே போனார் அந்த பிச்சைக்காரர்.

ஆனால் போலீஸ்காரர்கள் அவரை அங்கு போக அனுமதிக்கவில்லை. மாறாக அங்கு கிடக்கும் குப்பையை அகற்ற ஆணையிட்டனர். சிறிது நேரத்திற்கெல்லாம் குப்பை அள்ளும் வண்டி அந்த இடத்திற்கு வந்தது. குப்பையை அள்ள பொக்லைன் எந்திரமும் வந்து சேர்ந்தது.

குப்பையும் அகற்றப்படப்போகிறது.

‘‘நீங்க..குபேர பூஜையை ஆரம்பிக்கலாம்..’’என்று போலீஸ்காரர்கள் சொல்ல பாபா கோயிலில் குபேர பூஜையின் மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மகாவும் புஷ்பாவும் கூட இணைந்து கொண்டார்கள் – அங்கு கூடியிருந்த கூட்டம் பணம் தங்களுக்கு கொட்டோ கொட்டு கொட்ட வேண்டுமென்று நெக்குருகி வேண்டிக்கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரரின் குப்பையை பொக்லைன் எந்திரம் தன் நீண்ட இரும்புக்கையை நீட்டி அப்படியே குப்பையை அள்ளி குப்பை வண்டியில் போட எத்தனித்த போது

‘‘விர்.. விர்..’’ என காற்றடித்தது பிச்சைக்காரர் தன் குப்பையை நோக்கி ஓடி வர முனைந்தார். அவரை போலீஸ்காரர்கள் விடவே இல்லை – பாபா கோயிலுக்குள் மண்டியிட்டு பணம் வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தனர் பாபாவின் பக்தர்கள் .

பொக்லைன் இரும்புக்கை அள்ளிய குப்பையில் காற்றடிக்க குப்பையிலிருந்து கீழே சிதறியது பணம்..அவ்வளவும் பணம் அடித்த காற்றில் அவை கீழே விழ பிச்சைக்காரர்

‘‘என் பணம்.. என் பணம்..’’ என்று துடித்தார். அவரைப் பிடித்திருந்த கூட்டம் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது. மறுபடியும் மறுபடியும் பொக்லைன் எந்திரம் குப்பைய அள்ள அள்ள, அள்ளிய குப்பை அத்தனையும் பணம்.

பிச்சைக்காரரை விட்ட போலீஸ்காரர்கள் கூட பணத்தை நோக்கி முன்னேறினர். அந்த வழியாகக் சென்ற மக்களும் கூட குப்பை வண்டியை நோக்கி ஓடினர். குப்பையிலிருந்து பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்டிக் கொண்டிருந்தது. இது பற்றி எதுவும் தெரியாத கூட்டம் பணம் வேண்டுமென்று பாபாவின் சிலை முன்பு குபேர பூஜையில் ஈடுபட்டிருந்தனர்.

பிச்சைக்காரர் குப்பையிலிருந்து பணம் பறந்து கொண்டிருந்தது.

குபேர பூஜையில் பணம் வருமா? வராதா? என்பதும்

பிச்சைக்காரரின் குப்பையில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதும் பாபாவுக்கே வெளிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *