செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கிருபானந்தவாரியார் குடும்பத்தினர் நேரில் நன்றி

வேலூர், பிப்.10–

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாரியார் சுவாமிகளின் குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில், “தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் சைவத்தையும், தமிழையும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பன்னூல்களையும் சுவைபட பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றி, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்த பெருமைக்குரியவர் திருமுருக கிருபானந்தவாரியார்.. இவர் 1906ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் நாள் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் பிறந்தார். இவர் 19ம் வயது முதல் சமய, சமூக சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கி, அதன் மூலம் கிடைத்த வருவாயினை ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் ஆகிய மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்காக செலவிட்டார். இரண்டு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களால் முனைவர் பட்டமும், இசைப் பேரறிஞர் பட்டமும், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இந்திய அரசால், இவருக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்ட சிறப்புக்குரியவர். நமது புரட்சித் தலைவருக்கு “பொன்மனச் செம்மல்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தவர் கிருபானந்தவாரியார். அவரது நினைவாக அவர் பிறந்த ஆகஸ்ட் மாதம் 25ம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வேலூரில் தங்கியிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று (10–ந்தேதி) திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் குடும்பத்தைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சகோதரர் மகன் புகழனார், மருமகள் ஏலவார் குழலி, வாரியார் சுவாமிகளின் அக்காள் பேரன் சி.பி. பாபு மற்றும் குடும்பத்தினர் சந்தித்து, திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி. சண்முகம், வேலூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.கே. அப்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *