திருவனந்தபுரம், மார்ச் 10–
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6–ந்தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி 83 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தற்போது முதலமைச்சராக உள்ள பினராயி விஜயன் தொடர்ந்து வெற்றிபெறும் தொகுதியாக இருக்கக்கூடிய தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அதேபோன்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். கே.கே.சைலஜா மீண்டும் மட்டன்னூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது என தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்த கட்சியும் இன்று அல்லது நாளை டெல்லியில் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.