சிறுகதை

காவலாளி “கபீர் ” | ராஜா செல்லமுத்து

இருநூறு வீடுகளை உள்ளடக்கிய அந்தப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு கபீர் தான் காவலாளி. அவரைத் தாண்டி ஒரு ஈ ,எறும்பு கூட அந்தக் குடியிருப்புக்குள் நுழையவே முடியாது.

கபீர் அவ்வளவு ஸ்டிரிக்ட்டான பேர்வழி . பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டாலும் தமிழ்நாட்டைத் தன் மாநிலமாகவே பாவித்து வாழும் கபீருக்கு குடும்பமோ ? குழந்தைகளோ? எதுவும் கிடையாது. ஒற்றை ஆளாகவே இருக்கிறார். அவரின் சொந்தங்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அந்தக் குடியிருப்பு ஆட்களே! அறுபத்தைந்து வயது கடந்த பிறகும் இவரைத் தேடி ஒரு சொந்த பந்தமோ? யாரும் இங்கு வந்ததில்லை . இவரும் எங்கும் சென்றதில்லை. பகல் , இரவு என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே அடைக்கலமாய்க் கிடப்பார். அந்தக் குடியிருப்பு வீடுகளில் ரேசன் கார்டில் சேர்க்கப்படாத ஓர் உறுப்பினராகவே இருந்தார் கபீர். அவ்வளவு உரிமையும் அன்பும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். யாராவது யாரையோ தேடிக் கொண்டு வந்தால் வருகைப் பதிவேட்டில் பெயர், செல் நம்பர், கையெழுத்து இல்லாமல் ஆளை விடவே மாட்டார்.

‘‘சார்.. வீட்டு நம்பர் 167.. குருசாமி ஹவுஸ் ஓனர் பேரு.. அவரப் போய் பாத்திட்டு, ஒடனே வந்திடுறேன் சார்..’’ என்று ஒருவர் கெஞ்சாத குறையாகக் கேட்டும்

‘‘இல்லங்க..இங்க கேமரா இருக்கு.. இங்க வர்ற போறவங்கள கரைக்டா.. அடையாளம் கண்டு பிடிச்சு கேள்வி கேப்பாங்க .. ஒவ்வொரு நாளும் வந்து போறவங்களோட எண்ணிக்கையும் வருகைப் பதிவேட்டுல இருக்கிறவங்களோட எண்ணிக்கையும் சரியா இருக்கனும். இல்ல.. நான் தான் அதுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்..’’ என்று தமிழில் கொஞ்சம் பீகாரி சேர்த்துப்பேசினார் கபீர்.

‘‘ஐயா..எழுதித்தான் ஆகணுமா..?’’ என்று வந்தவர் இழுக்க

‘‘ஆமாங்க.. எழுதித்தான் ஆகனும்..’’ என்று கபீர் சொல்ல

இருமனதாக எழுதினார் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு வந்தவர்.

‘‘இதுல நீங்க எழுதுறதுனால.. ஏதாவது பிரச்சினை இருக்குங்களா..?’’ என்று கபீர் கேட்க அதற்கு பதில் சொல்லாமலே பெயர், முகவரி என்று எழுதிக் கையெழுத்துப் போட்டவன் விறுவிறுவென குடியிருப்புக்குள் சென்றான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புத் தலைவர்,

‘‘கபீர்.. சூப்பர்.. நீங்க உண்மையிலேயே ரொம்ப சின்சியர்..’’ என்று அவரின் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

‘‘இல்லங்க.. இங்க வார ஆளுக யாரு.. என்ன விவரம்னு சரியா தெரியாது.. – அவங்க நல்லவங்களா..? கெட்டவங்களான்னும் தெரியாது.. இவ்வளவு கேமரா இருந்தாலும்.. எழுதி வைக்கிறதில ஒரு இது இருக்கத்தாங்க செய்யுது..’’ – என்று கபீர் சொன்னார்.

‘‘அதான்.. கபீர் – இவ்வளவு நாளா.. இங்க இருக்கிங்க.. – உங்களோட பணிவு, ஒழுக்கம், நேர்மை தான், உங்கள எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..’’ என்று தலைவர் சொல்ல அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு நிர்வாகிகள் மொத்தம் சேர்ந்தனர். கபீரின் நல்ல குணங்களைப் பற்றிப் பேசிச் சிலாகித்துக் கொண்டார்கள்.

‘‘அப்பறம் கபீர் – நீங்க சம்பளத்தையே வாங்குறதில்ல.. சாப்பாட்டுக்கு போதும் – அப்பிடின்னு சொல்லித்தான் பணம் வாங்குறீங்க.. – இவ்வளவு வருசம் வேல செஞ்ச சம்பளமே பல லட்சம் உங்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கு.. அத எப்ப வேணும்னாலும் நீங்க வாங்கிக் கிரலாம்.. அடுக்கு மாடிக் குடியிருப்போட பேர்ல தான் அந்த அக்கவுண்ட் இருக்கு..’’ – என்று தலைவர் சொல்ல,

‘‘ஐயய்யோ.. – என்ன சொல்லிட்டிங்க.. இந்த கட்டிடத்துக்கு வரும் போது, சின்ன அப்பார்ட்மென்டா இருந்துச்சு.. – அப்பறம் அடுக்கு மாடிக் குடியிருப்பாகிருச்சு.. – ஆனா..! எதுவுமே இல்லாம, ரெண்டு சட்ட, பேண்ட்ட எடுத்திட்டு, அனாதையா வந்து இங்க நிக்கும் போது, ஐயா, தான் என்னைய என்னா ஏதுன்னு கூடக் கேக்காம வேலைக்கு சேத்தீங்க.. இன்னைக்கு மூணு வேள சாப்பிட்டுட்டு, இந்த ஊர்ல மனுசனா நடமாடிட்டு இருக்கேன்னு, அதுக்கு தலைவர் ஐயா தான் காரணம். எனக்கு என்னங்க, பிள்ளையா? குட்டியா? சொந்தமா? பந்தமா? ஒத்த ஆளு. படுக்கையும் இங்கயே தான், அப்பெறம் எதுக்குங்க, பணம் – என்னோட சம்பளம் முமுசும் உங்க கிட்டயே இருக்கட்டும் – எனக்கு பசிக்கு மட்டும் பணம் குடுங்க – மத்தது எல்லாம் உங்க கிட்டயே இருக்கட்டும் – எப்ப வேணும்னு கேக்கிறனோ..? அப்ப குடுத்தா போதும்..’’என்று கபீர் சொன்னார்.

‘‘சரி.. சரி.. வேலையப் பாருங்க..’’ என்று சொல்லிய குடியிருப்பு நிர்வாகிகள் கலைந்து சென்றனர் –

‘‘நாம சம்பளம் பத்தி எப்பச் சொன்னாலும் கபீர் அதப்பத்தி பேசவே மாட்டேங்கிறார்.. – அவரோட மொத்தப் பணமும் நம்ம கிட்டத் தான் இருக்கு..’’ என்று குடியிருப்புத் தலைவர் சொல்ல

‘‘இருக்கட்டுமே.. எங்க போயிரும் – கபீர் நம்ம வீட்டுப் பிள்ளை மாதிரி..’’ என்று அடுக்கு மாடிக் குடியிருப்பு நிர்வாகிகள் பேசிக் கொண்டே கடந்தனர்,

இரவு, பகல் என்று, நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என்று கரைந்தன,

கபீர், சம்பளம் எதுவும் வாங்குவதே இல்லை சாப்பாட்டுச்செலவுக்கு மட்டும் பணம் வாங்கிக் கொண்டு, மீதமுள்ளதை, அப்படியே விட்டு விட்டு வந்தார். சிறுகச் சிறுகச் சேர்ந்த இப்போது, பெருந்தொகையாக மாறியிருந்தது – அப்பவும் கபீர் பணம் கேட்கவில்லை.’

ஒருநாள், கபீருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

‘‘எனக்கு ஒன்னுல்லய்யா.. நான் நல்லாத் தான் இருக்கேன்..  லேசா மேல் சுட்டுக் கெடந்துச்சு அவ்வளவு தான் – வயசாகுதில்ல- வேற ஒண்ணுமில்ல..’’ என்று கபீர் சொல்ல, சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் அவரைப் பார்த்துக் கண் கலங்கினர்.

கபீரைப் பார்த்து அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்த கபீர்

‘‘ஏய்.. பாப்பா, ஏன் அழுற.. ? எனக்கு ஒன்னுல்ல..’’ என்று அந்தப் பாப்பாவை அருகில் அழைத்துத் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார் கபீர்.

‘‘தாத்தா.. நீ எப்ப வருவ..?’’ என்று பிஞ்சு மொழியில் கேட்டது,

‘‘இன்னைக்கு சாயங்காலமே தாத்தா வந்திருவேன்..’’என்று கபீர் சொல்லும் போதே

‘‘நீ.. வந்திரு தாத்தா.. நீ இல்லாம.. நீ டாட்டா காட்டாம.. என்னால ஸ்கூலுக்கு போக முடியல.. நீ வந்திடு..’’ என்றாள் அந்தச் சிறுமி .

சொந்த பந்தம் என்று எதுவுமே இல்லாமல் இருந்த கபீருக்கு, அந்த குடியிருப்புக்காரர்கள் காட்டும், அன்பு , பரிவு, கபீரை என்னவோ செய்தது –

அன்று, முழுவதும் கபீரைப் பார்க்க, குடியிருப்பு மக்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தார்கள்.

கபீர் இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்பு வெறிச்சோடிக் கிடந்தது. அன்று இரவு, யாரும் எதிர்பாராத நேரத்தில் கபீர் இறந்தார். மருத்துவமனையிலிருந்து கபீர் பிணமாகக் கொண்டு வரப்பட்டார். அந்த அர்த்த ராத்திரியிலும் எல்லா குடியிருப்புகளும் விழித்துக் கொண்டன, மறுநாள், காலை கபீருக்குச் செய்ய வேண்டிய எல்லாச் சடங்குகளையும் செய்தனர்.

‘‘கபீர்..நம்ம வீட்டுல ஒரு ஆள் மாதிரி இருந்தாரு.. இந்த மொத்தக் குடியிருப்புக்கும் அவரு வேண்டிய வரு தான், அவரோட எடத்த யாராலயும் நெரப்ப முடியாது… பணம், காசுக்கு ஆசப்படாத பெரிய மனுசன்.. இதுவரைக்கும் சாப்பாட்டுக்கு மட்டும் தான் பணம் வாங்கியிருக்காரு, மத்தபடி அவரோட சம்பளப் பணம் முழுதும் நம்ம கிட்டதான் இருக்கு . அவருக்குன்னு ,குடும்பம், சொந்த பந்தங்கள் யாரும் இல்ல. இந்தப் பணத்த யார்கிட்ட குடுக்கிற தின்னு தெரியல..’’ என்று அந்தக் குடியிருப்பின் தலைவர் பேசியபோது,

‘‘கபீர் ரொம்ப நல்ல மனுசன்ங்க.. குழந்தைங்க மேல ரொம்பவே பாசமா இருப்பாரு.. அதுனால, அவரோட பணத்த பிக்சட் டெபாசிட் டா போட்டு, அதுல வார வருமானத்தில ஏன்..? குழந்தைகளுக்கு உதவி செய்யக் கூடாது..’’ என்று செயலாளர் சொல்ல, அதையே மொத்தக் குடியிருப்பு வாசிகளும் ஆமோதித்தனர். அடுத்த வாரமே கபீரின் பெரிய புகைப்படத்தை குடியிருப்பு வாசலில் வைத்தனர். அந்த ஆண்டு முதல் கபீரின் நினைவாய் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். எங்கிருந்தோ வந்த பீகார் கபீர் தன் நல்ல எண்ணங்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *