சிறுகதை

கறை | ராஜா செல்லமுத்து

முதலிரவு முடிந்த உடனே பிறந்த வீட்டில் வந்து நின்றாள் அனிதா.

அப்படியொரு திருமணத்தை அந்தக்கிராமம் இதுவரை கண்டதே இல்லை. தடபுடலான வரவேற்புகள். ஊராரின் வீட்டு வாசல்கள் தவறாமல் வாழை மரங்கள்; எல்லோருக்கும் பத்திரிகையோடு பழம், தட்டு, தாம்பூலம்,மேளதாளம், பட்டாசு வாண வேடிக்கையென அமர்க்களப்படுத்தப்பட்டது அனிதாவின் திருணம்.

வரவேற்பு முதல் திருமண வையோகம் வரை பெருந்தகுதி பெற்றிருந்தது அந்தப்பகுதி.

இப்படி நடந்த திருமணம் தான் இப்போது கசப்பாக மாறி மணப்பெண் அனிதாவின் நெஞ்சில் ஆணியடித்தது போல இருந்தது.

கட்டிய வாழை மரங்கள் கழற்றப்படவில்லை. பந்தி இலை இன்னும் காயவில்லை . முதலிரவு முடிந்த உடனே பிறந்த வீட்டில் வந்து நின்றாள் அனிதா.

அவள் வாய் திறக்கும் போதெல்லாம் அழுகையைத் தவிர வேறெதும் வந்தபாடில்லை கட்டிய முகூர்த்தப் புடவையோடு அமர்ந்த இடத்திலேயே குத்துக்கல்லாய் உட்கார்ந்திருந்தாள் .

‘‘அனிதா ..அனிதா..’’ அம்மா தமயந்தி கூப்பிட்டது கூட அவள் காதுகளுக்குல் போய்ச்சேரவில்லை

‘‘ஏய் ..அனிதா.. என்ன நடந்துச்சுன்னு.. சொன்னா தானே..! மாப்பிள்ளை வீட்டுல போயி கேக்க முடியும்.. நீ ..பேசாம இப்பிடியே..! உட்கார்ந்திருந்தா.. எத வச்சு எப்பிடி நாங்க கேக்க முடியும்..’’ என தமயந்தி இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டும் அவள் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரின் அளவு கூடியதேயொழிய அவள் வாய் திறந்து பேசவே இல்லை.

‘‘என்ன நடந்துச்சுன்னு ..சொன்னா தானே.. பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

நீ ..பேசாம இப்படியே உம்ன்னு அழுதிட்டு இருந்தா.. கட்டிக்குடுத்த இடத்தில இருந்து என்னத்த எப்படி கேப்போம்.. என்ன நடந்துச்சுன்னு சொல்லும்மா

அனிதா ..’’ அப்பா கணபதி கேட்டும் அவள் வாய் திறக்கவே இல்லை.

தலைவிரி கோலமாகக் கிடந்தாள் வீட்டின் முன்னால் போடப்பட்ட பந்தல் கீற்றுகள் பட பட.. என காற்றுக்கு அடித்துக்கொண்டிருந்தன.

‘‘புதுப்பொண்ணா போனா.. புதுப்புடவையோடவே வந்திட்டாளே.. வந்ததிலிருந்து பேயறைஞ்சது மாதிரியே உட்கார்ந்திருக்காளே.. மாப்பிள்ளை எங்கே..? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எங்கே..? என்ன ஏதுன்னு ஒரு விவரமும் பிடிபடலையே.. பெத்த ஒத்தப்புள்ள வாழ்க்கையும் இப்படி சீரழிஞ்சு போச்சே..!’’ என்று மூக்குச் சிந்தினாள் தமயந்தி.

வாய்விட்டு அழ முடியாமல் உள்ளுக்குள்ளே புழுங்கி உயிரில் பாதி இத்துப் பித்தாய்ப்போன கணபதியின் கண்ணீரும் கட்டுக்கடங்காமல் இமை கடந்து இறங்கிக்கொண்டடே இருந்தது. மூன்று பேரும் மூன்று திசைகளில் கிடந்தார்கள். ஆனால் உள்ளமும் உணர்வும் மட்டும் ஏதோ ஒன்றில் தொக்கி நின்றது.

‘‘அனிதா.. அனிதா..’’ மறுபடியும் தமயந்தி கூப்பிட முழங்கால்களுக்குள் முகம் புதைத்து அழுதுகிடந்தவள். கட்டிய கல்யாணப் புடவையோடு கண்ணீர் உகுத்துக்கொண்டே இருந்தாள் . அப்பவும் ஏதும் பேசவே இல்லை . மணநாள் பூக்களைச் சுமந்த அவள் கூந்தல் அவிழாமலே தலைவிரி கோலமாய் கிடந்தது.

‘‘என்னங்க.. இவ இப்பிடியே உட்கார்ந்து கிடக்காளே..! என்ன நடந்துச்சுன்னு கேளுங்களேன் ..இல்ல நான் விட்டத்தில சீலைய மாட்டிட்டு தொங்கிருவேன்..’’ என்று விம்மி விம்மி அம்மா அழுதது அனிதாவின் விலா எலும்பைக் குத்திக்கிழித்தது.

‘‘நீ.. மட்டும் போயிட்டா.. நான் என்ன உசுரோடவா.. இருக்கப் போறேன்.. உனக்கு முன்னாடியே.. நானும் போய்ச் சேந்திருவேன்..’’ என்று கணபதியும் கண்ணீரோடு பேசியது அனிதாவின் அடி உயிர்வரை அறுத்தெறிந்தது.

அம்மாவும் அப்பாவும் இப்படி அழுது கிடந்தது அனிதாவிற்குள் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துவண்டு கிடந்தவள் படாரென எழுந்தாள். அவிழந்து கிடந்த கூந்தலைக் கூட அவள் அள்ளி முடியவில்லை. அழுது விழுது கொண்டிருக்கும் கண்களைக்கூடத் துடைக்கவில்லை. சிலப்பதிகாரக் கண்ணகி போல சினங்கொண்டு பேசினாள்.

‘‘அம்மா.. நான் ஒரு உண்மைய சொல்லட்டுமா..’’ என்று முதன் முதலாக வாய் திறந்தாள்.

‘‘சொல்லும்மா.. சொல்லு.. நீ.. சொன்னா தானே.. பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் .. மாப்பிள்ளையும் நீயும் வந்தா.. அது மறுவீடு.. நீ மட்டும் தனியா வந்திருக்கிறது என்ன வீடுன்னு தெரியலம்மா .. அதுவும் கலயாணப் புடவையோட வந்திட்டயே ஊருக்குள்ள என்ன நினைப்பாங்க .. என்ன நடந்துச்சுன்னு தைரியமா சொல்லும்மா..’’ தமயந்தி அழுது கேட்டதும் உண்மையைச் சொல்ல வாய் திறந்தாள் அனிதா

‘‘அம்மா நீ.. என்னைய நம்புறியா..?’’ என்று சொல்லும் போதே அவள் உதடுகள் தந்தியடித்தன.

‘‘ நீங்க.. என்னைய நம்பித்தான வளத்தீங்க.. நான் உங்களுக்கு துரோகம் பண்ணுவேனா..? இல்ல உங்கள ஏமாத்துவனா..? நான் உங்க புள்ளைம்மா.. நான் தப்பு பண்ணலம்மா. என்ன நம்புங்க..’’ என்று ஆக்ரோஷமாக அனிதா அழுதழுது சொன்னது அம்மாவையும் அப்பாவையும் ஆணி வேர் வரை அசைத்துப் பார்த்தது.

‘‘ஏய்.. என்ன சொல்ற..?’’

‘‘நீ.. சொல்றது எதுவும் புரியலையே..! உன்னைய ஏதும் சந்தேகப்பட்டாங்களா..? இல்ல நீ.. ஏதும் தப்பு பண்ணுனியா..? சொல்லு அனிதா.. சொல்லு..’’ என தமயந்தி வினாவோடு கேட்டாள்.

‘‘நான் காலேஜ்ல படிக்கும் போது கூட யாரையும் லவ் பண்ணுனது இல்லம்மா.. ஒழுக்கமா இருந்த எனக்கு இப்படியொரு பட்டத்த கட்டி.. வீட்ட விட்டு விரட்டி விட்டாங்க.. நான் கெட்டுப் போனவளாம்மா நான் கெட்டுப் போனவளாம்..’’ அப்படி அழுதபடியே அனிதா சொன்னது கணபதியின் கழுத்தை வார்த்தைகளால் அறுப்பது போல் இருந்தது. பெத்த ஒத்த மக கல்யாணம் முடிந்த மறுநாளே இப்படிப் பேசிக்கொண்டிருந்தது கணபதிக்கு ஒரு பக்கம் அவமானமாகவும் இன்னொரு பக்கம் ஆத்திரமாகவும் இருந்தது.

‘‘என்னன்னு கொஞ்ச விவரமா சொல்லு அனிதா..?’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே அனிதாவிடம் கொஞ்சம் தைரியமாகவே கேட்டாள் தமயந்தி

‘‘ அதை என் வாயால நான் சொல்ல மாட்டேன்ம்மா.. நீயே போய்.. அவங்க வீட்டுல என்னன்னு கேட்டுக்க.. இதுக்கு மேல கேட்ட அவ்வளவு தான்.. தூக்குல தொங்கிருவேன்..’’ என்று அழுது சொன்னாள் அனிதா.

** சிறிது நேரத்திலேயே விறுவிறுவென பக்கத்து ஊரான மாப்பிள்ளை வீட்டிற்கு விரைந்தாள் தயமந்தி.

மாப்பிள்ளை வீட்டில் போடப்பட்டிருந்த பந்தல் இன்னும் அவிழக்கப்படாமலே இருந்தது. கட்டியிருந்த வாழை மரத்திலிருந்து இரண்டு இலைகள் அதன் இருப்பிடத்திலிருந்து கொஞ்சம் இடம் மாறி இறங்கியிருந்தன திருமணத்திற்கு வந்திருந்த நெருங்கிய சொந்த பந்தங்கள் கூட இன்னும் செல்லாமல் இருந்தனர். வீட்டிற்குள் நுழைந்த தமயந்தி வாய் திறந்து பேசாமல் கடகடவெனக் கண்ணீரை மட்டுமே உதிர்த்தாள். அவள் உகுக்கும் கண்ணீரே ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது. உள்ளம் உடைந்து போய் உருகி நின்றாள். தமயந்தியைப் பார்த்த சம்மந்தி வசந்தா முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டாள் .

‘‘அம்மா எம்பொண்ணு..’’ என்று கொஞ்சம் இழுத்தவள்

‘‘அம்மா.. எம் பொண்ணு என்னமோ சொல்லிட்டு வந்திருக்காளே..! அப்பிடியெல்லாம் எம்புள்ளைய நாங்க வளக்கலம்மா.. எங்கள நம்புங்க.. என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் வெவரமா சொல்லுங்க..’’ என்று வாய் விட்டு அழுதவளை வசந்தா ஏளமாகப் பார்த்தாள்.

‘‘ நான் என்னத்த சொல்றது..? இந்தா.. இதே சாட்சி..’’ என்று பெரிய வெள்ளைத் துணியை எடுத்துப்போட்டாள் வசந்தா.

அந்தத் துணியை வெறித்துப் பார்த்த தமயந்தி

‘‘இது என்னங்க ..வெள்ளைத்துணி..’’ என்று அதைக் கையில் எடுத்துக் கேட்டவளை

‘‘ம் உங்க பொண்ணு நல்லவளா..? இல்ல கற்பு உள்ளவளா..? அப்பிடிங்கிறது இந்த வெள்ளைத் துணியே சாட்சி சொல்லிருச்சு.. இதுல கறை இல்ல

முதலிரவுல இந்த வெள்ளைத் துணியைத்தான் கட்டில்ல விரிச்சு விட்டுருந்தோம்.. விடிஞ்சு போய் பாத்தா ராத்திரி விரிச்ச வெள்ளைத்துணியில ரத்தக்கறை இல்ல.. அப்படியே வெடிச்ச பருத்தி மாதிரி வெள்ள வெளேர்ன்னு அப்படியே இருக்கு.. இதுல இருந்து தெரிஞ்சு போச்சு உங்களோட பொண்ணு இதுக்கு முன்னாடியே கெட்டுப்போனவன்னு இதுக்குமேல சாட்சி வேற வேணுமா..? உங்களோட வளப்பும் உங்களோட குடும்ப வழக்கமும் எங்களுக்கு நல்லா தெரிஞ்சுபோச்சு. அதுனால தான் உங்களோட பொண்ணு இனி ஒரு நிமிசம் கூட இங்க இருக்கக் கூடாதுன்னு வெரட்டி விட்டுட்டோம்..’’ என்று வெட்ட வெளிச்சமாகவே பேசினாள் வசந்தா.

‘‘இந்த வெள்ளத்துணிய நம்புற நீங்க.. மனுசங்கள் நம்ப மாட்டீங்களா..? எம் பொண்ணு அப்பிடியெல்லாம் கெட்டுப்போனவ இல்லம்மா. இத எப்படி நிருப்பிக்கிறதுன்னு தெரியலையே.. எம்பொண்ண நாங்க அப்படி வளக்கலம்மா.. எம் பொண்ணு வயசுக்கு வந்ததில இருந்து பொத்திப்பொத்தி தான் வளத்தோம். இந்தக்குத்தம் எப்படி நடந்துச்சுன்னு சாமி சத்தியமாக தெரியாதுங்க. இது உண்மைதான்னு எங்க வேணும்னாலும் எங்க உசுரக்குடுத்தாவது நிரூபிக்கத்தயாரா இருக்கோம்.. எம்பொண்ண பெரிய மனசு பண்ணி ஏத்துக்கங்கம்மா..’’ என்ற தமயந்தி அழுதழுது சொன்ன போது திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் திக்குத்திணறி நின்றார்களேயொழிய ஒப்புக்குக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை .

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டே இருந்த புதுமாப்பிள்ளை பிரகாஷ் பொசுக்கென வெளியே வந்தான்.

‘‘நானும் நேத்திருந்து பாத்திட்ட தான் இருக்கேன்.. ரத்தம் கறை சாட்சின்னு அந்தப் பொண்ணையும் அந்தக் குடும்பத்தையும் போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க.. நீயெல்லாம் பெத்தா தாயா..? இல்ல பேயா..? பழைய காலத்து மூட பழக்கத்த தூக்கி தலையில வச்சிட்டு ஏம்மா என்னோட பொழப்ப சீரழிக்கிற அந்தக் காலம் வேற இந்தக்கால வாழ்க்கைக் சூழலே வேற. சாப்பிடுற சாப்பாட்டுல.. இருந்து உடுத்துற உடை வரைக்கும் எல்லாமே இங்க வேறயா இருக்கு.. அந்தக் காலத்தில எல்லாம பதினஞ்சு பதினாறு வயசில தான் பொண்ணுங்க வயசுக்கு வந்தாங்க. இப்ப பத்து பனிரெண்டு வயசிலயே பெரிய மனிஷி ஆகியிடுறாங்க.. இப்ப இருக்கிற பசங்கள பாத்தீங்களா..? எல்லாம் ஒசரம் ஒசரமா இருக்காங்க. முன்னாடியெல்லாம் யாரும் இவ்வளவு உயரமா வளரல. இப்ப எல்லாமே இங்க தலை கீழா இருக்கு.. உன்னோட இந்த மூட நம்பிக்கைய அடியோட வெறுக்கிறேன் . ஒரு பொண்ணு சைக்கிள் ஓட்டுற போதும் நீச்சலடிக்கிற போதும் ஏன்.. வேகமா ஓடுற போது கூட நீ நினச்சுக் கத்திட்டு இருக்கிற கருவறைச்சவ்வு ஈசியா விரிஞ்சிரும்மா.. அது அந்தப் பொண்ணோட தப்பு இல்ல.. இப்ப இருக்கிற உணவு முறை இயற்கை சூழல் பழக்க வழக்கங்கள் தான் காரணமா இருக்கு. இது தெரியாம.. நீ.. வெள்ளத்துணிய விரிச்சுவிட்டு கறை இல்ல.. அது இல்லன்னு.. சொல்லி என்னோட வாழ்க்கைய வீணாக்காதே.. அவளோட கழுத்துல நான் தானே தாலி கட்டுனேன். அவ தான என்னோட மனைவி இதுல.. எந்த மாற்றமும் இல்ல. மூட நம்பிக்கைய முன்னிறுத்தி என்னோட வாழ்கைய முடக்கிறாதே.. அனிதா கற்புக்கரசி தான். இது உங்களுக்கு சம்மதம்னா நீங்க நான் எல்லாம் ஒரே குடும்பமா குடித்தனம் நடத்தலாம்.. இல்ல இன்னும் அந்தப் பழைய விசயத்த பிடிச்சு வச்சிட்டுத்தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சிட்டு இருந்தீங்கன்னா.. நான் என்னோட மனைவிய கூட்டிட்டு போயி தனியா வாழ்றத நீங்க யாரும் தடுக்க முடியாதும்மா..’’ என்று மருமகன் பிரகாஷ் பேசியது தமயந்தியின் நெஞ்சில் பாலை வார்த்தது.

‘என்னுடைய நம்பிக்கையில் ஈட்டி பாய்ச்சிவிட்டானே..’ என்று நினைத்துக் கொண்டிருந்த அம்மா வசந்தாவின் பிடரியில் பிரகாஷ் பேசிய வார்த்தைகள் டமால்.. டமால்.. என அடித்தன.

‘‘அத்த வாங்க அனிதாவ கூட்டிட்டு வரலாம்..’’ என்று தமயந்திடம் பிரகாஷ் சொன்னபோது தமயந்தியின் கண்களில் ஆன்ந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

மூடநம்பிக்கையை முக்காடாய்ப் போர்த்தி உட்கார்ந்திருக்கும் கிராமத்துக் கிழடுகளுக்கு பிரகாஷ் பேசிய அத்தனை வார்த்தைகளும் சவுக்கடியாய் விழுந்தன. வைத்த கண் வாங்காமல் பிரகாஷ் போவதையே வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள் வசந்தா.

அவன் நடந்து போய்க் கொண்டிருக்கும் காலடித்தடத்தில் பல மூட நம்பிக்கைகளின் கறைகள் கரைந்து கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *