சிறுகதை

கண்ட சுகம் என்ன? | ராஜா செல்லமுத்து

Spread the love

ஒவ்வொரு நாளும் இருளும் இரக்கமற்ற இரவுகளை எதிர்கொள்வதே இந்திராணிக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.

நகரும் ஒவ்வொரு நொடியும் ரணமாய்க் கழியும். வழக்கம் போல அன்றும் தண்ணி அடித்தும் சிகரெட் பிடித்தும் பான்பராக் போட்டும் அதை வீதியெங்கும் ‘புளிச்..புளிச்..’ என்று துப்பிக்கொண்டே வந்த கணவன் வேலுவைப் பார்க்கும்போது இந்திராணிக்கு அருவருப்பாகவே இருந்தது. அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு விதமான நாற்றமெடுக்க முகத்தைப் பொத்திக் கொண்டாள் இந்திராணி. அவள் அப்படி முகத்தைப் பொத்திக் கொள்வதைப் பார்த்த வேலு ரொம்பவே கோபப்பட்டான்.

‘‘என்ன..என்ன.. நான் வரவும் மொகத்த பொத்துற..? கட்டுன புருசனப் பாத்தா ஒனக்கு அவ்வளவு எளக்காரமா போச்சா..? ம்ம்.. – உங்க வீட்டுல ஒங்க அப்பன், அண்ணன், தம்பி மட்டும் யோக்கியமா..? அவங்க குடிக்கல, அவங்க மேல வீச்சம் எடுக்கல – நான் மட்டும் குடிச்சிட்டு வந்தா ஒனக்கு அவ்வளவு வீச்சம் எடுக்குதா..?’’ என்று இந்திராணியைச் சராமாரியாகப் பேசினான் வேலு.

வழியும் கண்ணீரை இரண்டு கைகளிலும் துடைத்தபடியே இல்லை என்று தலையாட்டினாள் இந்திராணி,

‘‘புள்ளைகளெல்லாம் எங்க..?’’ என்று அதட்டலோடு கேட்டான் வேலு.

‘‘தூங்கிட்டாங்க..’’ என்று சன்னமாகப் பதில் சொன்னாள் இந்திராணி . அப்படி அவன் பேசுவதற்குள் இரண்டொரு முறை வீட்டிற்குள்ளேயே எச்சிலைத் துப்பியிருந்தான்.

‘‘என்ன சொன்ன.. ? பிள்ளைகள எங்கன்னு கேட்டா வாய்க்குள்ளயே என்னமோ மொனங்குற..?’’ என்று மேலும் அதட்டினான்.

‘‘தூங்கிட்டாங்க..’’ என்று இப்போது கொஞ்சம் சத்தமாகவே பேசினாள் இந்திராணி.

‘‘ம்ம்.. – சாப்பிட்டாங்களா..?’’

‘‘ம்ம்..’’ – என்று உள்ளுக்குள்ளே சொன்ன இந்திராணியை

‘‘என்ன..? சத்தத்தையே காணோம்..?’’ என்று அதட்டினான் வேலு

‘‘சாப்பிட்டாங்க..’’

‘‘ஓ..’’ – என்று சொல்லிக் கொண்டே இன்னும் இரண்டொரு முறை வீட்டிற்குள்ளேயே எச்சிலைத் துப்பினான் வேலு

அப்போதும் வெறித்துப் பார்த்தாள் இந்திராணி.

‘‘என்ன..? எச்சி துப்புனா தொடச்சு விட மாட்டியா..?’’ என்று மேலும் வேலு எகிறினான்.

‘‘தொடச்சு விடுறேங்க..’’ என்று பணிவுடன் சொல்லியவாறே வேலு கீழே துப்பிய எச்சிலைத் துடைத்து விட்டாள் இந்திராணி.

‘‘கடவுளே..! – இப்பிடியொரு புருசனா எனக்கு கேட்டேன்..? எல்லாம் என்னோட விதியா இது..? ஏழையா பொறந்தா..! எல்லாத்தையும் விட்டுட்டு வாழணும்னு அவசியமா என்ன..? எது வேணும்னாலும் விட்டுரலாம் – ஆனா..! சுயமரியாதை அது கூட வேண்டாம் – ஏன்..! ஒரு மனுசியா கூட மதிக்காத.. ஒரு மிருகத்துக்கா எங்க அப்பன் என்னையக் கட்டிக் குடுக்கணும்.. இந்த மிருகத்துக் கூட வாழ்ந்து ரெண்டு புள்ளைகள வேற பெத்தாச்சு.. இவன விட்டுட்டுப் போறதும் முடியாத காரியம்.. – இந்த ஈனப் பெறவி கூடத்தான் என்னோட வாழ்க்கை முழுசுமா..? ஐயோ.. கடவுளே – ஒவ்வொரு ராத்திரியும் இந்த மிருகத்துக்கூட இருக்கிறதுக்கே.. ரொம்ப பயமா இருக்கே.. – ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க. ஆனா..! இந்த மிருகத்துக்கு அது ஆயுசு பூராம் இருக்கும் போல, ஒவ்வொரு ராத்திரியும் சாராய வாடையும் சிகரெட் நெடியும் பான்பராக் வாடையும் என்னால தாங்க முடியலையே.. – இப்பிடியே செத்துப் போனா, பெத்த ரெண்டு புள்ளைகளும் அனாதையாயிருமே..’’என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தவளை,

‘‘என்ன..? ஒரே யோசனையா..? இருக்க..?’’ என்று வேலு கேட்கும்போதே அவனின் வேறு மாதிரியான சிரிப்பு இந்திராணிக்கு அச்சத்தை விதைத்தது. – ‘‘இன்னைக்குமா..? கடவுளே.. இந்த மிருகத்துக்கு இன்னைக்கு தூக்கம் வராதா..? கடவுளே இன்னைக்கு ஒரு நாளாவது, நான் ‘‘நிம்மதியா தூங்க முடியாதா..?’’ என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தவளை

‘‘சாப்பாடு போடு..’’ என்று முரட்டுக்கட்டளை இட்டான் வேலு.

சாப்பாடு பரிமாறினாள் இந்திராணி…

வாயில் அள்ளி வைத்த சோறு சட்டை, வேட்டி என்று சிதறி கீழே விழுந்து பரப்ப ஒரு அசட்டுச் சிரிப்பை வரவழைத்த வேலுவைப் பார்க்கும்போது பயம் வந்தது இந்திராணிக்கு .

ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தவன் உள் வீட்டிற்குள் நுழைந்தான், குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து புன்முறுவல் பூத்தான்.

‘யப்பா.. வீட்டுக்குள்ள போயிட்டான்.. இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம்..’ – என்று இந்திராணி எண்ணிக்கொண்டிருந்த போது

‘‘ஏய்.. – அங்க என்ன பண்ற..? புருசன் வீட்டுக்குள்ள வந்தா -பொண்டாட்டி உள்ள வர வேணாமா..? உள்ளவாடி..’’ என்று அதட்டினான் வேலு.

‘ஐயய்யோ.. கூப்பிட்டுட்டானே..’ என்று வேலுவின் முடை நாற்றம் அவள் நாசியில் வீச நடைபிணமாக அவன் இருக்கும் இடம் நோக்கி நடந்து கொண்டிருந்தாள் இந்திராணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *