செய்திகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.6 கோடி நிதி

கவர்னர் முன்னிலையில் விஜயேந்திரர் ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் வழங்கினார்

காஞ்சீபுரம், பிப்.2–-

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தொகை ரூ.6 கோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சீபுரம் சங்கர மடத்தில் பொதுமக்கள் அனைவரும் காணிக்கை செலுத்துவதற்காக இரு பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் காலையிலிருந்தே கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் வரிசையாக நின்று காணிக்கைகளை உண்டியல்களில் செலுத்தினார்கள். மொத்தமாக சேர்ந்த நிதியை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையிடம் வழங்கும் விழா மாலையில் சங்கரமட வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு காஞ்சீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து அருளாசியுரை வழங்கினார். உடுப்பி பேஜாவர் மடத்தின் பீடாதிபதி விஷ்வப்பிரசன்னதீர்த்த சுவாமிகள் முன்னிலை வகித்தார். பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி எஸ்.ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தஞ்சாவூரை சேர்ந்த எம்.ஜி.வி.மோகன் என்ற கல்வியாளர் ரூ.5 கோடியும், சென்னை எம்.எஸ்.மூர்த்தி ரூ.25 லட்சம், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.வேதாந்தம் ரூ.19 லட்சம், சென்னை ஜெயசங்கர் ரூ.14 லட்சம், புனே சங்கர மடம் சார்பில் ரூ.5 லட்சம், ஹைதராபாத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத சங்கர மடத்தின் பக்தர் ரூ.25 லட்சம், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளரான கோவிந்த தேவ்கிரி சுவாமிகள் சங்கர மடத்தின் பக்தர் என்பதற்காக அவர் ரூ. 11 லட்சம் என பலரும் காணிக்கையாக தனித்தனியாக வழங்கினார்கள். இவர்களைத் தவிர சங்கரா கலை அறிவியல் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் ரூ.1.50 லட்சம் உட்பட பொதுமக்கள் வழங்கிய தொகை ரூ.1 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.6 கோடி நிதி அயோத்தி கோயில் கட்டும் பணிக்காக சங்கரமடம் பக்தர்கள் சார்பில் காணிக்கையாக வழங்கப்பட்டது.

இந்நிதியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சங்கர மடத்தின் பக்தர்கள் சார்பில் வழங்கினார்.

விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதாசேஷய்யன்,காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராம.வெங்கடேஷன் தொகுத்து வழங்கினார். நிறைவாக சங்கர மடத்தின் மேலாளர் என்.சுந்தரேசன் நன்றி கூறினார்.

விழாவினை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் பிருந்தாவனம் வெள்ளி வேலுடன் கூடிய வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *