சினிமா செய்திகள்

நீயா – நானா பார்த்துவிடும் போட்டியில் ஜீவா, அருள்நிதி!

எதைப் பற்றியும் யோசிக்கவே கூடாது; கலகலப்பாக இருக்கணும்; காமெடி கலாட்டாவை ரசிக்கணும்!

பூவா தலையா போட்டுப் பாரு

நீயா நானா பார்த்துவிடு…

கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் எழுபதுகளில் வெளிவந்த பூவா தலையா படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜனரஞ்சகப் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

களத்தில் சந்திப்போம் படத்தில் ஜீவா – அருள்நிதி இருவரின் போட்டா போட்டி நடிப்பை பார்த்த போது முதல் காட்சியில் ஜீவா ஒரு கோடு போட்டால்… அதன் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை போட்டு உயர்ந்து நின்றார் அருள்நிதி.

அடுத்து, அருள்நிதி ஒரு கோடு போட்டால் அதற்குப் பதில் மறு கோட்டை போட்டு உயர்ந்து நின்று முந்தைய அருள்நிதியின் கோட்டை சிறிய தாக்கினார் ஜீவா.

இப்படியேதான் இருவரும் மாறி மாறி, சிறிது பெரிதாகி – பெரிது சிறிதாகி 2 மணி 40 நிமிடம் ஓடிய படம் முடிந்து, வெளியே வருகிற நேரத்தில்… 50க்கு 50 என்ற சரி விகிதத்தில் நிற்கும் அசகாய சூரர்கள் ஆகி இருக்கிறார்கள்!


1990 ஏப்ரல் ‘புது வசந்தம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் வலது கால் எடுத்து வைத்தார் ஆர்.பி. சவுத்ரி. களத்தில் சந்திப்போம், 30 வருடத்தில் இது 90 வது படம். வாழ்த்துக்கள்! செஞ்சுரிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!


ஜீவா – அருள்நிதி இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிரி, நகமும் சதையுமான நண்பர்கள். கபடி வீரர்கள். ஆளுக்கு ஒரு அணியின் சாம்பியன். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத அளவுக்கு உயிர் நண்பர்கள். ஒருவனுக்கு காலில் முள் குத்தியது என்றால் அடுத்தவன் விழியோரம் நீர் துளிகள் விழும் என்றால்… அப்படி ஒரு நட்பு.

அருள்நிதியின் தாய் மாமன் வேல. ராமமூர்த்தி. இவரது மகள் மஞ்சிமா மோகன். இவர் ஜீவாவை காதலிக்கிறார். அருள்நிதி எதிர்வீட்டு பெண் (பிரியா பவானி)ணை காதலிக்கிறார்.

இந்தக் காதல் விவகாரத்தில் இரு நண்பர்களின் குடும்பத்திலும் இடையில் ஏற்படும் மோதல் – குழப்பம் – அது முடிவில் எப்படி தீர்க்கிறது? என்பதே ‘களத்தில் சந்திப்போம்‘ திரைக்கதை.

கதை,- திரைக்கதை, இயக்கம்: என். ராஜசேகர். யாரையும் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ‘சூப்பர்குட்’ ஆர். பி. சவுத்ரியின் முகாமில் கதை சொல்லி களத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அது சாமானியமல்ல. ஜனரஞ்சகம் – திரைக்கதையில் விறுவிறுப்பு – காதல் – அடிதடி – காமெடி – கலாட்டா… என்ற 6 அம்சங்களும் கலவையாய் இருந்தால்தான் தியேட்டர் ரசிக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் சவுத்ரி. அவருடைய முகாமில் ‘ஓகே’ ஆகி திரைக்கு வந்திருக்கிறார் என்றால், அதுவே ராஜசேகரின் முதல் வெற்றி.

திரைக்கதை – காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு சூடு பிடிக்கிறது. இயக்குனருக்கு யானை பலம் வசனகர்த்தா அசோக்குமார். ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனமும் எதார்த்தம். அளவோடு எழுதியிருக்கிறார். அனுபவம் பேசியிருக்கிறார்.

ஜனரஞ்சக இயக்கத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஓர் நம்பிக்கை நாயகன் என்று ராஜசேகரைப் பற்றி பெருமையாய் பாராட்டுகிறபோது அசோக்குமாருக்கும் அங்கே அழுத்தமான அங்கீகாரம் உண்டு.

சூப்பர் குட் பிலிம்சில் உருவான ஈரோடு சவுந்தர் மாதிரி அசோக்குமார்! ( திரைக்கதை – வசனகர்த்தா)

* காமெடி + கலகலப்பில் ஜீவா, காமிரா முன் நிற்பது பழக்கப்பட்டு, – அனுபவம் மெருகேறிய விஷயம்.

எதிரிகளோடு அருள்நிதியை சண்டை போட விட்டு ரசிப்பது,

டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே நண்பன் அருள்நிதி பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவனை வம்பில் மாட்டி விடுவது,

தன்னால் நின்றுபோன அருள்நிதியின் கல்யாணத்தை அதே பெண்ணை பார்த்து நடத்தி வைக்க படாத பாடு படுவது,

தன்னுடைய அப்பாவுக்காக (இளவரசன்) காதலியின் தந்தை ஆடுகளம் நரேனைப் புரட்டி எடுத்த சம்பவத்தில் நடந்த, தவறை உணர்ந்து, நண்பனுக்காக போய் மன்னிப்பு கேட்பது,

அருள்நிதி மஞ்சிமா மோகனின் ரகசிய காதலை அம்பலப்படுத்துவது,

தன் தந்தையிடமிருந்து அநியாயமாக ஏலம் போன சொத்தை மீட்க, எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலை கைதியாகி கபடி ஆட்ட சாம்பியனாக தன்னை நிரூபிப்பது…

இப்படி தலைகாட்டும் காட்சிகளில் கலகலப்போடு ரசிக்க வைத்திருக்கிறார் ஜீவா.


இனி சூப்பர்குட் ஆஸ்தானம் ரோபோ சங்கர்

காமெடிக்கு ரோபோ சங்கர், பால சரவணன். அந்தக்கால கவுண்டமணி, சமீபத்திய சந்தானம் ஸ்டைலில்… ஒரு கதாபாத்திரம் பேசி முடிப்பதற்குள் அதற்குள் கவுண்டர் கொடுக்கும் ரோபோ சங்கர் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் திரைச்சித்திரம், இந்தக் களம்.

காதல் காட்சியாகட்டும், அடிதடி சண்டையாகட்டும், ராதாரவியோடு பக்கத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் காட்சியாகட்டும், தண்ணி அடிக்கும் காட்சியாகட்டும், கிளைமாக்ஸ் சேசிங்காகட்டும்… ரோபோ சாங்கர், ஓஹோ சங்கர்தான். அவரை நினைக்காமல் இருக்க முடியாது. இனி சூப்பர்குட் பிலிம்சில் ஆஸ்தானமாகிவிடுவார்!

‘அப்பச்சி’- ராதாரவி. அந்த நேர் வகிடு தலை முடி, தடித்த ஃப்ரேம் மூக்கு கண்ணாடி, நடை உடை, பேச்சு அப்பச்சி ராதாரவி. காரைக்குடி அப்பச்சியின் அசல் அச்சு! ஓல்டு இஸ் கோல்டு!


* கதையில் ‘ கனமான ‘ பாத்திரம், நண்பனுக்காக போராடும் அருள்நிதி. ஸ்டண்ட்டில் பிளந்து கட்டுகிறார்.

சூப்பர் ஃபாஸ்ட் ஆக்க்ஷன் ஹீரோ.

ஆர். பார்த்திபனுக்கு எப்படி குரல் ஒரு பிளஸ்சோ, அது மாதிரி அருள்நிதிக்கு. கனத்த சாரீரம். அதிலும் ஒரு அழகு.

ஜீவாவை முறைக்கும் போதும், அவரோடு மனஸ்தாபத்தில் உள்ளுக்குள் குமுறும் போதும்… அலட்டிக் கொள்ளாத நடிப்பு. 2 நண்பர்கள் எப்படியோ – அதே உணர்வு வெளிப்பாடு. ஜீவா: 50. அருள்நிதி:50. களத்தில் வெற்றி வாகையில் சமபங்கு வீரர்கள்.

மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் இரட்டை நாயகிகள்.

இசை: யுவன் சங்கர். ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்.

ஸ்டண்ட் மாஸ்டர்: பிரதீப்குமார் தூள் பறக்கிறார் !

இது மாதிரி படத்துக்கு கொஞ்சம் நீளத்தை வெட்டி குறைத்திருக்கலாம்.

என். ராஜசேகரன் இயக்கத்தில் ‘களத்தில் சந்திப்போம்’:

ஜீவா – அருள்நிதி

அசகாய சூரர்கள் இருவரின் கலாட்டா, காமெடி, காதல்:

தியேட்டர் கலகலக்கும்!

– வீ.ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *