செய்திகள்

அப்துல்கலாம் 89–வது பிறந்தநாள்: மோடி, எடப்பாடி புகழாரம்

இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு

இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டி

அப்துல்கலாம் 89–வது பிறந்தநாள்:

மோடி, எடப்பாடி புகழாரம்

ராமேஸ்வரம் நினைவிடத்தில் கலெக்டர், குடும்பத்தினர் மரியாதை

சென்னை, அக்.15–

மக்கள் ஜனாதிபதி, இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் 89–வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செய்தவர் கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத அப்துல்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று மாவட்ட கலெக்டர் மற்றும் கலாம் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மோடி பெருமிதம்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், ‘டாக்டர் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது’ என கூறி உள்ளார்.

மேலும் டாக்டர் அப்துல் கலாம் தொடர்பான வீடியோ தொகுப்பையும் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

ராஜ்நாத் சிங்

‘புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் டாக்டர் கலாம். எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பினார். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவுகூறப்படுகிறார் என்றும் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில், “கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.

ராமேஸ்வரம் நினைவிடத்தில்…

ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் கலாமின் நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் கலெக்டர் வீரராகவராவ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின் நினைவிடத்தின் அருகில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் யாரும் நினைவிடத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

கலாம் நினைவிடம் அருகில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கும் என கலெக்டர் தெரிவித்தார்.

படித்த பள்ளி மீது அதிக பற்று

அப்துல்கலாம், சிறுவயதில் ராமேசுவரத்தில் படித்த பள்ளியின் மீது அதிக பற்று வைத்திருந்தார். அந்த பள்ளிக்கூடம், மண்டபம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி ஆகும். அங்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி அப்துல்கலாம் வருகை தந்தார். அந்த பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழரசி பணி புரிந்தார். கலாம் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறினார்.

மகிழ்ச்சியுடன் இருங்கள்

அந்த நிகழ்ச்சியில் கலாம் பேசியதாவது:–

-“மாணவ செல்வங்களாகிய நீங்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். நான் சிறு வயதில் பள்ளியில் படித்த நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டேன். கனவு காணுங்கள். நல்ல விதமான கனவு காணுங்கள். அந்த கனவுகள் நிறைவேறும் வகையில் முயற்சி செய்யுங்கள். பாடப்புத்தகம் மட்டுமின்றி, எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும். நமக்கு சிறந்த அறிவை கொடுப்பது, நாம் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும்தான். தினமும் பள்ளிக்கு வரும் போது கவலை இல்லாமல் ஆர்வமுடன் வர வேண்டும்.

மாணவர்களாகிய உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகளை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். வருங்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் எப்படி படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். ஒரு மாணவன் பாட புத்தகத்தை மட்டும் படித்து பெரிய ஆளாக வர முடியாது. மாணவன் எல்லா கலைகளிலும் ஆர்வமுடன் வர ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்றார்.

நான் என்னை எப்படி உருவாக்கி கொண்டேன் என்பதை நான் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை ஆசிரியர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் கலாமின் பேச்சு அமைந்திருந்ததாக தலைமை ஆசிரியை தமிழரசி தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் 5-ம் வகுப்பு வரை படித்து, அதன் பின்னர் உயர்நிலை படிப்பை ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் முடித்தார். அந்த பள்ளிக்கும் பின்னாளில் கலாம் சென்றுள்ளார். இதுகுறித்து அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் ராக்லாண்ட் மதுரம் கூறியதாவது:-

ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார்

ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1946 முதல் 1950 வரை அப்துல்கலாம் படித்தார். அவர் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய போதும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பும் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். இருக்கையில் அமர மறுத்த அவர், பள்ளி மைதானத்தில் இருந்த மிகப்பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பள்ளிப்பருவ நினைவுகளை நினைவுகூர்ந்தார். ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவரது பெட்டி படுக்கை வைத்திருந்த இடத்தை பார்த்தார். அந்த இடத்தில் தங்கியிருந்த சிராஜுதீன் என்ற மாணவனை வாழ்த்தினார். அவர் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோதுதான் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அன்று நாடு விடுதலை அடைந்த செய்தியை அகில இந்திய வானொலியில் அறிவித்தபோது, அதை மாணவர்களுடன் கூட்டமாக அமர்ந்து கேட்டதையும், கொண்டாடியதையும் மகிழ்ச்சியுடன் அப்போது எங்களிடம் நினைவு கூர்ந்தார். தேசத்தலைவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் எங்களிடம் கூறினார்.

இவ்வாறு கலாம் நிகழ்ச்சி அனுபவங்களை ஆசிரியர் ராக்லாண்ட் மதுரம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *