சென்னை, நவ. 8–
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. சாஹி 11–ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி மேகாலயா ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று ஏ.பி.சாஹியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து கடந்த 30ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, சென்னை ஐகோர்ட்டின் 49வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30வது தலைமை நீநிபதியாகவும் ஏ.பி.சாஹி 11-ந்தேதி (திங்கட்கிழமை) பதவி ஏற்று கொள்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 9.20 மணிக்கு புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. புதிய தலைமை நீதிபதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதனை தொடர்ந்து 11.30 மணி அளவில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.