செய்திகள்

ரூ.51 கோடியில் ஜெயலலிதா நினைவிடப் பணிகள் மும்முரம்: மிக விரைவில் திறப்பு விழா: கடம்பூர் ராஜூ தகவல்

Spread the love

சென்னை, மார்ச் 24–

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் அம்மாவின் (ஜெயலலிதா) நினைவிடம் 50.80கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா மிக விரைவில் நடைபெறும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்து பேசியதாவது:–

கடந்த 2011 ஆம் ஆண்டில், 5000 ரூபாயாக இருந்த பத்திரிகையாளர் ஓய்வூதியம் இன்று 10000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

பத்திரிக்கையாளர் மறைவுக்குப்பின் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 2011ல் ரூ.2500 ஆக இருந்தது

இன்று ரூ.5000 ஆக வழங்கப்படுகிறது.சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்திட அரசு தற்போது ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறது. ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு வந்ததை, முதலமைச்சர் எடப்பாடியார் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கி வருகிறார். இதுவரை 4.75 கோடி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் ரூ. 2கோடியே 80 லட்சம் செலவில் மணிமண்டபம்,

பழம்பெரும் நடிகரும், சிறந்த பாடகருமான எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சிராப்பள்ளியில் ரூ.42.69 இலட்சத்தில் முழுவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்,

சென்னை அருகே உள்ள பையனூரில் பெப்சி தொழிலாளர்களால் உருவாக்கப்படவுள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரங்கிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, முதல் தவணையாக ரூ.1 கோடி நிதி வழங்கல்,

சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு திரைப்பட விருதுகள்.

அம்மாவின் பெயரால் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்,

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் ரு.7 லட்சம்,

என்.எப்.டி.சி. சார்பில் கோவாவில் நடைபெற்ற 13வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு எண்ணற்ற நடவடிக்கைகள் அம்மா அரசு மேற்கொண்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா, ‘‘எனக்கு பின்னால்” என்ற வார்த்தையை இந்த பேரவையைத் தவிர வேறு எங்கும் பேசியதில்லை. வெளியில் எங்குமே அந்த வார்த்தையை அம்மா உச்சரித்தது இல்லை.

எனக்குப் பின்னாலும் இக்கட்சியும் ஆட்சியும் இன்னும் நூறாண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று மக்கள் சேவை செய்யும் என்று கூறினார்.

அந்த தீர்க்க தரிசன வார்த்தைகளின்படி, அம்மா தந்த ஆசியின்படி, அம்மாவுக்குப் பின்னாலும் இந்த கட்சியும் ஆட்சியும் நிலை குலையாமல், ஒரு சிறிதும் குறைபடாமல் அம்மா அவர்கள் இருப்பதைப் போலவே பெயரோடும் புகழோடும் இருக்கிறது.

ஆனால் ஒருசிலர் அப்படி நடக்காது என்று மனப்பால் குடித்தார்கள், பகற்கனவு கண்டார்கள்!

அவர்களுக்காகவே புரட்சித்தலைவர் தீர்க்க தரிசனமாக ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் என்பதுதான் அப்பாடல்

நடக்கும் என்பார் நடக்காது!”

அம்மா மறைந்ததும் ஆட்சி மாற்றம் … இன்று வரும் … இல்லையில்லை நாளை வந்துவிடும் என்றெல்லாம் கண்களைத் திறந்து கொண்டே கனவு கண்டார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

நடக்காது என்பார் நடந்து விடும் !”

இந்த ஆட்சி நீடிக்காது, நிலைக்காது என்றார்கள். ஆனால் வெற்றிகரமாக நான்காவது ஆண்டை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, நடக்காது என்று சொன்னவர்கள் முன்னால் வெற்றி நடை போடுகிறது, அம்மாவின் ஆட்சி.

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் அச்சுப்பணியை மேற்கொண்டுவரும் எழுதுபொருள் அச்சுத்துறை, பழம் பெருமை வாய்ந்தத் துறை ஆகும்.

189 ஆண்டுகால பழைமை வாய்ந்த எழுதுபொருள் அச்சுத்துறை, சென்னை அண்ணாசாலையில் எழுதுபொருள் அச்சுத்துறை இயக்ககம், வள்ளலார் நகரில் மைய அச்சகம், ராஜாஜி சாலையில் எழுதுபொருள் அலுவலகம், சென்னை உயர்நீதிமன்ற வளாகம், மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம், விருத்தாசலம், சேலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் மதுரை கே. புதூர் ஆகிய 10 அலகுகளுடன் சிறப்புற செயல்பட்டு வருகிறது.

முதன் முதலில் 10 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட அரசு அச்சகம், விரிந்து பரந்து அரசுத்துறையாக பரிமளித்து, இன்று 1677 பணியாளர்களைக் கொண்டு செயலாற்றி வருகிறது.

இதில் மேலும் ஒரு பெருமை என்னவென்றால் இவர்களில் 247 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பதே ஆகும். வேறு எந்தத் துறையிலும் இல்லாத அளவுக்கு பணியாளர்களில் 15 சதவீதம் பணிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி பெயர் பெற்று விளங்குகிறது எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை.

இதுவன்றி வெளி முகமை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 178 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதன் பயனாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் 100 சதவீகித அச்சுப்பணிகள் அரசு அச்சகங்களிலேயே மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் இந்தியாவிலேயே அத்தகைய ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *