செய்திகள்

ஜல்லிக்கட்டு விசாரணை கமிஷன்: விரைந்து அறிக்கை வழங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தகவல்

Spread the love

சென்னை, ஜன. 8–

ஜல்லிக்கட்டு விசாரணை கமிஷன் தனது அறிக்கையை விரைந்து வழங்கும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் (ஒரத்தநாடு தொகுதி) பேசும்போது, ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. வன்முறைகளும் நடைபெற்றது. அதை எல்லாம் விசாரிப்பதற்காகத்தான் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நியமிக்கப்பட்டு, அவர் தலைமையிலே இன்றைக்கு விசாரணை கமிஷன் நடைபெற்று வருகிறது. விசாரணை ஒரு இடத்தில் நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

அதுதான் காலதாமதம் ஆகின்றது. அதுவும் விரைவாக கமிஷனுடைய அறிக்கையை வழங்க வேண்டும் என்று அவர்களிடத்திலே நாங்களும் தெரிவித்திருக்கின்றோம். ஆகவே, விரைந்து அந்த கமிஷன் தனது அறிக்கையை வழங்கும் என்று நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

நீதிமன்றத்தில் வழக்கு

ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசும் அங்கே நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து, விசாரணை கமிஷனை நியமித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆகவே, உண்மைத்தன்மையை அறிந்து தான் அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே, எடுத்த உடனே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை. நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்றத்தின் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவம், இப்பொழுது கூட நீதிமன்றத்திலே இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *