நாடும் நடப்பும்

இஸ்ரேல் எச்சரிக்கை

கடந்த வார இறுதியில் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு உலகெங்கும் தீவிரவாதம் அடங்கவில்லை என்பதை தான் சுட்டிக்காட்டுகிறது.

உலகமே கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளாலும் ஊரடங்கு சட்டங்களாலும் தீவிரவாதமும் நிலைகுலைந்து இருந்ததை கண்டோம்.

ஆனால் நம் மண்ணில் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியும் ஜனாதிபதி கோவிந்தும் பங்கேற்ற நிகழ்வின் போது சிறிது தொலைவில் இஸ்ரேலிய தூதரகத்தை அச்சுறுத்தும் வகையில் மெல்லிய சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.சம்பவ இடத்துக்கு அருகே ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் குண்டுவெடிப்புக்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

“ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, ஈரான்அணு விஞ்ஞானி பக்ரிசாதே ஆகியோரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டை வெடிக்க செய்கிறோம். இது சிறிய முன்னோட்டம்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜெய்ஷ்-உல்-ஹிந்த் தீவிரவாத குழு இதுவரை அறியப்படாத அமைப்பாகும். விசாரணையை திசை திருப்புவதற்காக தீவிரவாதிகள் இந்த பெயரை பயன்படுத்தியுள்ளனரா, இல்லை இந்த பெயரில் புதிய தீவிரவாத அமைப்பு உருவாகியுள்ளதா என்பது குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது.

இஸ்ரேல் தூதரகம் அருகே அமைந்துள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களின் பதிவை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு உரிய 2 பேர், வாடகை காரில் இருந்து இறங்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வாடகை கார் ஓட்டுநரையும் சந்தேகத்துக்குரிய 2 மர்ம நபர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல்வெளியுறவு அமைச்சர் காபி அஸ்கெனாசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினார்.

கடந்த 2012-–ம் ஆண்டில் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தது. இதில் தூதரக ஊழியர் ஒருவரின் மனைவி, ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். அப்போது ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

தற்போதைய குண்டுவெடிப்பின் பின்னணியிலும் ஈரான் உள்ளதாக இஸ்ரேல் உளவுத் துறையான மொசாட் குற்றம் சாட்டியுள்ளது. மொசாட் உளவுத் துறையின் புலனாய்வு குழு, வெடிகுண்டு நிபுணர்கள் விரைவில் டெல்லி வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பை தொடர்ந்து டெல்லியில் விமான நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கியபகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.இந்தியா இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை 1992–ல் தான் உறுதிபடுத்தியது. ஆனால் 1950–லேயே இஸ்ரேல் தனிநாடு என்ற அங்கீகாரத்தை வழங்கியது.

இஸ்ரேல் தலைநகர் டெல் ஆவிலில் நமது தூதரகம் இருக்கிறது. இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்றாலும் இந்திய தூதரகமோ டெல் ஆவிலில் இருக்க காரணம் பாலஸ்தீனர்களும் ஜெருசலேம் தான் எங்களுக்கும் தலைநகர் என்று சொந்தம் கொண்டாடி வருவதால் பலதரப்பட்ட சிக்கல்கள் நிறைந்த பகுதியாக ஜெருசலேம் இருப்பதால் எல்லா நாடுகளுமே அங்கு தூதரகத்தை அமைக்கவில்லை.

சமீபமாக இஸ்ரேலின் உறவுகளால் எண்ணைவள வளைகுடா பகுதியில் ஆதாயம் உண்டு என்பதை உணர்ந்து அமெரிக்கா 2017ல் தங்களது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்தது.

இஸ்ரேலின் பலமே ஆராய்ச்சியாளர்களின் அறிவு திறன் என்பதை உலகம் புரிந்து கொண்டு விட்டது.

தற்போது ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா ராணுவத் தளவாடங்களை அதிகமாக வாங்கும் நாடு இஸ்ரேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான், ஈராக் ரத்தவெறி யுத்தத்தில் இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் இந்தியா அங்கீகரித்தது உலகப் பார்வையில் புதிய மதிப்பை தந்தது. ஆனால் பல நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்ததன் பின்னணியில் இந்த சமீபத்திய குண்டு வெடிப்பை சாதாரண நடப்பாக உதாசீனம் செய்து விடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *