ஐ.எஸ்.எல். கால்பந்து
கேரளா – நார்த் ஈஸ்ட் ஆட்டம் 2–2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது
பாம்போலிம், நவ. 27–
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் –- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய 7வது லீக் ஆட்டம் 2–2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகளில் கோவாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரசிகர்கள் அனுமதியில்லாமல் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே கேரளா அணியின் தடுப்பாட்ட வீரரிடம் நார்த்ஈஸ்ட் வீரர்கள் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதற்காக கேரள அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பில் செய்த்யாசென் சிங் அடித்த பாலை செர்ஜியோ சிடோன்சா தலையில் முட்டி கோலாக மாற்றினார்.
அதன்பின்னர் ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கேரளத்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த அணி வீரர் கேரி ஹூப்பர் அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா அணி 2–-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனால் 2-வது பாதியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 51-வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் வீர் கவேசி அப்பியா கோல் அடித்தார். இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 90-வது நிமிடத்தில் நீண்ட தொலைவிலிருந்து வந்த பந்தை நார்த்ஈஸ்ட் வீரர் இத்ரிஸா சைல்லா தனது மார்பில் வாங்கி அதை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.