நாடும் நடப்பும்

வரியில்லா பெட்ரோல் சாத்தியமா?

பெட்ரோல், டீசல் விலைகள் சென்னையில் புதிய உச்சத்தில் இருக்கிறது. நாடெங்கும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளின் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிக்காது இருக்க காரணம் என்ன?

டீசல் விலை லிட்டருக்கு ரூ.85க்கு விற்பனை ஆவதால் ரெயில், பஸ் போக்குவரத்து விலைகள் கடுமையான கட்டண உயர்வுக்கு தள்ளிக்கொண்டு இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிப்பால் வாகன ஓட்டம் தடைபட்டது. அச்சமயத்தில் உலக கச்சா எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சியை கண்டது. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை.

ஆனால் தற்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 டாலராக உயர்ந்து விட்ட நிலையில் பெட்ரோல் விலை ரூ.90ம் டீசல் விலை ரூ.85 என விஷம் போல் உயர்ந்து விட்டது.

பெட்ரோல் விலையில் பங்குகளை நடத்தும் முகவர்களுக்கு கமிஷனும் பல உள்ளூர் வரிகளும் கொண்டிருப்பதை அறிவோம். அவ்வரிகளை அகற்றினாலோ, குறைத்து விட்டாலோ பெட்ரோல் விலை சாமானியனுக்கு தலைவலியாக இருக்காது.

ஆனால் ரேஷன் கடைகளில் இலவச அரிசியையும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியையும் வாங்கி மகிழ முடிகிறது. அதே அரிசியை மத்திய அரசுக்கு கிலோவுக்கு ரூ.35க்கு தந்து வாங்குகிறது. ஆக விவசாயிகளிடம் வாங்கும் கொள்முதல் விலையையும் விட மிகக் குறைந்த விலையில் அரிசி விற்பது சமுதாய அக்கறையை காட்டுகிறது.

அதாவது நம்மிடம் அதிக விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலையில் அதிக வரியை சம்பாதித்து சமுதாய சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கு செலவு செய்து வருகிறது மத்திய அரசு.

இலவச அரிசியையோ அல்லது மலிவு விலை உணவு தானியங்களின் விலை மிகக்குறைந்ததாக ரூ.2 அதிகரித்தாலும் நாடெங்கும் சலசலப்பை ஏற்படுத்தி தினக்கூலி தொழிலாளர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ரேஷன் கடைகளில் எதுவுமே வாங்க விருப்பமில்லை என்று சொல்லியே ரேஷன் அட்டையை அடையாள அட்டையாக உபயோகிப்பதும் வழக்கத்தில் இருப்பதை அறிவோம்!

அதுபோன்ற வரியில்லா பெட்ரோல், டீசல் விற்பனைக்கு வர வழி காண வேண்டும். அதாவது ஒரு இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வரியில்லா குறைந்த விலை பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய யோசிக்க வேண்டிய தருணம் இது.

பெட்ரோல் விலை ரூ.100 தாண்டினாலும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சி கார்களின் ஓட்டம் எந்த நகரிலும் குறையப்போவதுயில்லை. ஆக, அதனால் அரசுக்கு வரி விகிதம் அதிகரித்து வருவாய் அதிகரிப்பு இருக்கும்!

அதை ஏழைகளுக்கு குறிப்பாக ஒரு வாகன குடும்பத்தாருக்கு வரியில்லா குறைந்த விலை பெட்ரோல், டீசல் விற்பனையால் அரசின் வருவாயும் பாதித்து விடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *