செய்திகள் முழு தகவல்

ஐ.பி.எல். 2020: சாதனை படைத்த தமிழக வீரர்கள்

13வது ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப்படைத்தார். இதே போல் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் சிறப்பான முறையில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் வருண் சக்கரவத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே போல் நெட் பவுலர் என்ற முறையில் நடராஜனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தோல் பட்டை காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதே போல் ஐ.பி.எல். போட்டிகளில் பல்வேறு அணிகளில் விளையாடிய தமிழக வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக வீரர்கள் சாதனைகள் விபரம்.

இந்திய அணியில் இளம் வீரர் நடராஜன்

டி.நடராஜன் (வயது 29)

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் (டி.என்.பி.எல்.) அசத்தியதன் மூலம் ஐ.பி.எல்.-ல் வாய்ப்பு பெற்றவர். 2017-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே எடுத்தார். 2018-ம் ஆண்டு ஐதராபாத் அணியால் ரூ.40 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட போதிலும் 2018, 2019-ம் ஆண்டுகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த ஐ.பி.எல். தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திய நடராஜன் யார்க்கர் வீசுவதில் தனது திறமையை வெளியப்படுத்தி எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். பல்வேறு முன்னணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன், பெங்களூருக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் முன்னணி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ்க்கு எதிராக பந்து வீசி நடு ஸ்டம்பை சாய்த்து விக்கெட் எடுத்த விதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. 16 ஆட்டங்களில் 16 விக்கெட் கைப்பற்றிய அவருக்கு அதன் மூலம் ஆஸ்திரேலிய டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

வருண் சக்ரவர்த்தி

வருண் சக்ரவர்த்தி தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா அணியால் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டார். சுழலில் 7 விதமாக வீசும் திறன் படைத்த வருண் சக்ரவர்த்தி இந்த ஐ.பி.எல்.-ல் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் (டெல்லிக்கு எதிராக) வீழ்த்திய ஒரே பவுலர் ஆவார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை இரண்டு முறை கிளீன் போல்டு ஆக்கியது சிறப்பு அம்சமாகும். 28 வயதான வருண் 13 ஆட்டத்தில் 17 விக்கெட்டுகளை (ஓவருக்கு சராசரி 6.84 ரன் விட்டுக்கொடுத்தார்) எடுத்தார். அந்த அணிக்காக ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சை விட (14 ஆட்டத்தில் 12 விக்கெட்) இது அதிகமாகும். வருண் சக்ரவர்த்தியின் இந்த சாதனையால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட இந்திய அணிக்கு தேர்வானார். ஆனால் தோல்பட்டை காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியை வகித்தவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். 2008ம் ஆண்டு முதல் பெங்களூர், டெல்லி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளில் விளையாடிய அவர் கொல்கத்தா அணியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு பக்கபலமாகவே இருந்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 169 ரன்கள் எடுத்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில், சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு இந்த ஆண்டு தக்க வைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2017-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல்.-ல் விளையாடி வருகிறார். இதுவரை 21 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளும், 75 ரன்களும் எடுத்துள்ளார். இந்த ஆண்டு 15 போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியும், 111 ரன்கள் எடுத்தும் அந்த அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சென்னை அணி வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜெகதீசன், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், இந்திய பேட்ஸ்மேன் முரளிவிஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

2018, 2019-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியில் இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த ஜெகதீசன் இந்த ஆண்டும் அந்த அணியில் தொடர்ந்தார். டோனி விக்கெட் கீப்பராக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு அவருக்கு 5 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 33 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தின் திறனை வெளிப்படுத்தினார்.

சென்னை அணியால் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரும், பிரதான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக களம் இறங்கும் வாய்ப்பில் அணியில் இடம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே துரதிர்ஷ்டம்.

இதே நேரத்தில் 2009ம் ஆண்டும் முதல் விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த 35 வயதான முரளிவிஜய் சென்னை அணியில் இடம் பெற்றார். ஆனாலும் அவருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் 32 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். அவருக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் அவரும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின்

கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இழுக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சுழல் பந்து வீச்சால் எதிரணியை மிரட்டக்கூடியவர். ஐ.பி.எல்.- போட்டிகளில் 125 விக்கெட் வீழ்த்தியுள்ள அஸ்வின் இந்த சீசனில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தார். மேலும் அந்த அணி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெறுவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

கொல்கத்தா அணி சித்தார்த்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தியுடன் எம்.சித்தார்த் இருந்தது தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு. 2019ம் ஆண்டுக்கான முஸ்டாக் அலி டிராபி போட்டிகளில் 12 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடிய 22 வயதான சித்தார்த் ரூ.20 லட்சத்துக்கு எடுக்கப்பட்டார். இந்த ஆண்டு அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே துரதிர்ஷ்டமான விஷயமாகும்.

முருகன் அஸ்வின்

முருகன் அஸ்வின் சில ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைபயிற்சி பவுலராக வலம் வந்த 30 வயதான முருகன் அஸ்வின் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் புனே அணிக்காக விளையாடினார். அதன் பிறகு, டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடம் பெயர்ந்த முருகன் அஸ்வின் இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தக்க வைக்கப்பட்டார். ஐ.பி.எல்- விளையாட்டு போட்டிகளில் ஏற்கனே 22 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அவருக்கு இந்த ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் 10 விக்கெட்கள் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர் சென்னையில் வசிக்கும் 29 வயதான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் 2014ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐதராபாத் அணியின் மிதவேகப் பந்து வீச்சு, பேட்டிங் மூலம் அந்த அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 4 விக்கெட்டுகளை எடுத்து 97 ரன்கள் அடித்துள்ளார். காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த ஆண்டு அவரால் சாதிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *