செய்திகள் முழு தகவல்

“எதிரி எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எதிர்க்க கூடிய துணிவு மிக்கவர் ஜெயலலிதா!”

வேகம், விவேகம், எதையும் முனைப்போடு செய்யக்கூடிய ஆற்றல்

“எதிரி எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எதிர்க்க கூடிய துணிவு மிக்கவர் ஜெயலலிதா!”

‘‘கம்பீரத்தையும் ஆளுமையையும் கடைசி வரை விட்டுக் கொடுக்கவில்லை’’

வைகைச்செல்வன் புகழாரம்

‘மக்களால் நான்..! மக்களுக்காகவே நான்..!”

ஜெயலலிதாவின் இந்த கம்பீர கர்ஜனை வார்த்தைகளை தமிழகம் கேட்டு நான்காண்டுகள் உருண்டோடிவிட்டது. “ஜெ.ஜெயலலிதா என்னும் நான்”… என ஜெயலலிதா ஒவ்வொரு முறையும்

பதவி ஏற்கும் போதும், இந்திய அரசியல் ஒருமுறை தலைநிமிரும்.

“ஆள வேண்டாம் என்று தானே சொன்னோம், அவர் வாழ வேண்டாம் என்று சொல்லவில்லையே”… என்று திமுகவினரே போஸ்டர் அடிக்கும் அளவுக்கு தவிர்க்க இயலா ஆளுமை அவர்.

ஜெயலலிதாவின் ஒவ்வொரு திட்டங்களும் தேசத்தை ஈர்த்தது. அடுத்த மாநில அதிகாரிகள் தமிழகம் வந்து ஆய்வு செய்த அதிசயம் நிகழ்ந்ததே அதற்கு சாட்சி.

ஆணாதிக்க அரசியலில் அடியெடுத்து வைத்து, அண்ணா திமுக எனும் பேரியக்கத்தை கட்டிக்காத்து தமிழகத்தை தனது ஆட்சி திறனால் தலைநிமிர வைத்த ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம்.

இதனை முன்னிட்டு, அண்ணா திமுக முன்னாள் கல்வி அமைச்சரும், கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளரும், கொள்கை பரப்பு துணை செயலாளரும், பிரச்சாரங்கள், ஊடகக் குழு, அறிக்கை குழு உறுப்பினரும், தமிழகத்தின் தலைச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான முனைவர் வைகைச்செல்வன் “மக்கள்குரல்” நாளிதழின் சிறப்பு செய்திக்காக அளித்த பேட்டி இது.

ஜெயலலிதாவை சந்தித்த தருணம்?

1995ஆம் ஆண்டு “வடக்கை வெல்லும் தெற்கு” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினேன். டாக்டர் நாவலர் தான் அதனை வெளியிட்டார். நாவலரும், காளிமுத்துவும் ஜெயலலிதாவிடம் அந்த புத்தகத்தை வழங்கினார்கள். ஜெயலலிதா அதனை பார்த்துவிட்டு என்னை பற்றி எழுதியதற்கு நன்றி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள், மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என்று கூறினார்.

அவரது நிர்வாகத் திறனில் நீங்கள் கண்டு வியந்த விஷயம்?

கட்சியில்…

கட்சியில் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். பணம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாகுபடுத்தி பார்க்கமாட்டார்.

அதனை அளவுகோலாக வைத்துக்கொள்ள மாட்டார். கட்சி பற்றுடன் ஒருவர் பணியாற்றுகிறாரா என்று மட்டுமே பார்ப்பார். என்னை நம்பி வந்துவிட்டார்கள். அவர்களை கைவிடக்கூடாது என்று அவர் சொல்வதை நான் பல தருணத்தில் நேரில் பார்த்திருக்கிறேன். வாய்ப்பு தாமதமாகுமே தவிர, அவர்களுக்கு உயர்வு கொடுக்காமல் இருந்ததே இல்லை. வாய்ப்பு தரவே கூடாது என்ற சூழ்நிலை எழுந்தாலும் கூட கடைசிவரை போராடி வாய்ப்பை பெற்றுத்தருவார். அது தான் அவரது உயர்ந்த பண்பு.

ஆட்சியில்…

நான் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர்நலன் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, என்னை ஒரு பைலை படிக்கச் சொன்னார். அப்போது நான் எச்சில் தொட்டு பக்கங்களை திருப்பினேன். இதனை கவனித்த ஜெயலலிதா, உடனே அலுவலர் ஒருவரை வரச்சொல்லி, தண்ணீர் பஞ்சு கொண்டுவரச்சொன்னார். என்னுடைய அமைச்சர்கள் நேர்த்தியுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஒரு முடிவு எடுக்க நாம் திணறும்போது, மின்னல் வேகத்தில் அதற்கு தீர்வு சொல்வார்.

அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள் பற்றி…

விழுப்புரம் பக்கத்தில் போஸ்ட்மேன் ஒருவர் விடைத்தாள் கட்டினை தவறவிட்டுவிட்டார். அப்போது இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து நான் பேசினேன். அப்போது எதிர்காலத்தில் விடைத்தாள்களை கவனமாக கையாள்வதற்கு வகுக்கப்பட்ட திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினேன். பள்ளிக்கல்வி துறை அமைச்சராகி 8வது நாள் இந்த பிரச்சினையை நான் சந்தித்தேன். நான் பேசியதை கவனித்த ஜெயலலிதா, புதிய அமைச்சர் போல் அல்லாமல் பண்பட்ட, பக்குவப்பட்ட அமைச்சர் போல் பேசுகிறீர்கள்… வாழ்த்துக்கள் என்றார்.

நெருக்கடியான காலக்கட்டம் பற்றி…

1996 கடுமையான சோதனை காலம். அவரே வெற்றி வாய்ப்பை இழந்த நேரம். அப்போது அவரை பார்ப்பதற்கு யாரும் வரவில்லை. அந்த நேரத்தில் அவருடைய பேச்சு, நிகழ்ச்சி நிரல்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நெருக்கடியான நேரத்தை அவர் உணர்ந்தார்.

நான் பள்ளி ஆசிரியராக இருந்து ராஜினாமா செய்து விட்டு கட்சி பணிக்கு வந்தேன். அதை அவர் நினைவில் வைத்து என்னை பள்ளிக் கல்வி துறை அமைச்சராக்கினார்.

நிர்வாகிகளை அவர் அணுகும் முறை…

பச்சையப்பன் அறக்கட்டளைக்கான தேர்தல் நடந்தது. அதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் தான் பொறுப்பு.

நான் பச்சையப்பன் கல்லூரி மாணவன். ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக இருந்தபோது, அவரை கல்லூரியில் பேசுவதற்காக அழைத்து வந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். பின்னாளில் அதனை அவருக்கு நான் நினைவுப்படுத்தினேன்.

இதனை நினைவு வைத்துக்கொண்டு, பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தலில் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் இணைந்து பணியாற்றுவார் என அறிவித்தார்.

மக்கள் நலத்திட்டங்களை அவர் தேர்வு செய்யும் விதம்…

2011ம் ஆண்டு ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் 14 அம்ச திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதாதான். மாணவர்களுக்கு செருப்பு வழங்கலாம் என்ற போது, ஊட்டியில் இருக்கும் மாணவர்களுக்கு ஷூ கொடுக்கலாம் என்றார். சீருடை வழங்கலாம் என்று சொன்ன போது ஊட்டியில் இருக்கும் மாணவர்களுக்கு ஸ்வெட்டர் கொடுக்கலாம் என்று சொன்னார். திருமண உதவி என்று வரும் போது தாலிக்கு தங்கம் கொடுக்கலாம் என்று சொன்னார்.

புதுசா என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் ஆர்வமாக இருப்பார். சட்டமன்றத்தில் மாற்று கட்சியினர் பேசும் போது நல்ல விஷயம் என்றால் குறிப்பெடுத்துக்கொள்வார்.

திமுகவினரே பேசினால் கூட, நல்ல திட்டம் என்றால், அவர் இது சம்பந்தமாக பேசி இருக்கிறார், செய்யலாமா என்று எங்களிடம் கேட்பார்.


அம்மா உணவக திட்டம் உருவான எப்படி?

அன்னதான திட்டம் அவர் சிந்தையில் உதித்தது தான். கோயிலில் அன்னதானம் செய்கிறோம் பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். கோயிலுக்கு போகாதவர்கள், மாணவர்கள் அல்லாதவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு என்ன செய்யலாம் என்று வரும்போது தான் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கலாம் என்று சொன்னார். அம்மா உணவக திட்டம் இப்படி உருவானதுதான்.


வெற்றி தோல்விகளை அவர் அணுகிய விதம்…

வெற்றி தோல்விகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வார். இதனால் இலக்கை நோக்கிய பயணம் தேக்கம் அடைந்து விடக்கூடாது என்பார். வெற்றி பெரும் போது மக்களுக்கு உண்மையாக உளப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.

தேசிய அரசியலில் அவரது பங்கு…

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக மாபெரும் வெற்றி பெற்றது. பிஜேபி தேசிய அளவில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனால் அவர்களுக்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை இல்லாமல் போய்விட்டது. அண்ணா திமுக ஆதரவுடன் பிஜேபி ஆட்சி அமைத்திருந்தால் ஜெயலலிதாவின் பங்கு தேசிய அளவில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.

ஆன்மிகவாதியான அவர் திராவிட கொள்கைகளை கையாண்ட விதம்…

தன்னுடைய இறைநம்பிக்கையை யார் மீதும் அவர் திணிக்கவில்லை. கட்சியின் கொள்கை எதுவோ அதில் அவர் பயணம் செய்தார். தன்னுடைய ஆன்மிக கொள்கையை கட்சியினர் பின்பற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்த்ததில்லை.


ஜெயலலிதாவின் தனித்துவம்

வேகம், விவேகம், எதையும் முனைப்போடு செய்யக்கூடிய ஆற்றல், எதிரி எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எதிர்க்க கூடிய துணிவு, மக்களின் நலனை விட்டுக்கொடுக்காத தன்மை அவரது தனித்துவம். எல்லாவற்றிற்கும் மேலாக தாய்மை பாசம். ஒருவரது பதவியை எடுத்துவிட்டாலும், மறுபடியும் அவருக்கு பதவி கொடுத்துவிடுவார். கம்பீரத்தையும், தனது ஆளுமையையும் அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை.


அவரது அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து…

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு அனுபவங்களை அவர் பெற்றுக்கொண்டார். எதிர்கட்சிகள் நடத்திய பாடங்கள், உடன் இருப்பவர்கள் பற்றி எல்லாம் தெரிந்து, அரசியல் பக்குவத்தை அவர் உணர்ந்தார். மக்களின் மாண்பு, இறையான்மையை பக்குவமாக கொண்டு சென்றார். பல்வேறு அனுபவங்களிலிருந்து ஒரு அற்புதமான தலைவராக அவர் வளர்ந்து வந்தார்.

அவரது லைப்ரரி பற்றி…

ஜெயலலிதாவை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது சால்வையோ, பூங்கொத்தோ கொடுப்பதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். குறைந்தபட்சம் ஆயிரம் நூல்களாவது கொடுத்திருப்பேன்.

எனது லைப்ரரியில் உங்களுடைய நூல்கள் தான் அதிகளவில் வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

“கவிதையை படித்தார்; நெகிழ்ந்தார்” 

கைகூடும் கனவுகள்

கைகூடாமல் போனதற்காய்

கதறி கதறி அழுதாலும்

நம் பயணத்தை தொடரத்தானே வேண்டும்

யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில்

நமக்கான ஒரு காலம் காத்திருக்கக் கூடும்

என்று நான் எழுதிய கவிதையை அவரிடம் கொடுத்தேன். அதனை படித்து பார்த்துவிட்டு நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

அவரது இயல்பான குணநலன் பற்றி…

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர். சட்டமன்றத்தில் நான் பேசுவதை மிகவும் ரசிப்பார். என்னை அதிகமுறை சிரிக்க வைத்திருக்கிறீர்கள் என்பார். என்னை சிரிக்க வைத்ததில் நீங்களும் ஒருவர் என்றார். ஏதாவது நகைச்சுவை சொன்னால் குலுங்கி குலுங்கி சிரிப்பார்.

ஒரு பேச்சாளர் தன் பேச்சின் மூலமாக கேட்பவர்களை கட்டிப்போட வேண்டும். மாறாக பேசி முடித்த பிறகு பேச்சாளனை கட்டிப்போட்டு விடக்கூடாது. குறிப்பெடுத்து பேசாத பேச்சும் குறிப்பார்த்து சுடாத துப்பாக்கியும் ஆபத்தானது என்றேன். மிகவும் ரசித்தார்.

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன். அவர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது, எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் திறக்க முடியுமா? என்று கேட்டார். சிவப்பு கொடி ஏந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழருக்கு, அம்மாவின் அரசு பச்சை கொடிக்காட்டிவிட்டது என்றேன். அம்மா மிகவும் ரசித்து சிரித்தார்.

அவர் இல்லாத சட்டமன்ற தேர்தல்…

ஜெயலலிதாவின் பெருமைகளை சுமந்து செல்கிறோம். அண்ணா இல்லாமல் எம்ஜிஆர் தேர்தலை சந்தித்தார். எம்ஜிஆர் இல்லாமல் ஜெயலலிதா தேர்தலை சந்தித்தார். ஜெயலலிதா இல்லாமல் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் தேர்தலை சந்திக்க போகிறார்கள்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை லட்சியங்களை கொண்டு நாங்கள் பயணிப்போம். இவ்வாறு வைகைச்செல்வன் கூறினார்.

ஷீலாபாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *