சினிமா செய்திகள்

‘காமெடி’ மார்த்தாண்டம் கலை வாழ்வில் இருள் படிந்தது; ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளி அணைப்பால் ஒளி பிறந்தது!

* சினிமாவில் சான்சோ குறைஞ்சு போச்சு

*கொரோனா பயத்தால் ஓவியத் தொழிலும் நின்னுப் போச்சு

‘ஒரு நடிகன் உங்களை வரைகிறார்’

‘காமெடி’ மார்த்தாண்டம் கலை வாழ்வில் இருள் படிந்தது; ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளி அணைப்பால் ஒளி பிறந்தது!

சென்னை நவ. 17

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் கவலையோடு வீட்டில் முடங்கிக் கிடந்த சினிமா நகைச்சுவை நடிகர் மார்த்தாண்டத்தை அழைத்து, அவரின் கலை வாழ்க்கைக்கு ஒளியூட்டி இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி.

சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஷோரூமில் மார்த்தாண்டத்துக்கு ஒரு தனியிடம் ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார். ஷோ ரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களின் மார்பளவு உருவப் படத்தை வரைந்து அவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியூட்டும் பணியில் மார்த்தாண்டத்தை அமர்த்தி இருக்கிறார். இதற்காக அவருக்கு கவுரவமாக மாதம் ரூபாய் 15,000 கொடுக்கிறார் முரளி.

மார்த்தாண்டம், திருநெல்வேலி திசையன்விளை ஊரைச் சேர்ந்தவர். 32 ஆண்டுகளாக ஓவியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை வந்த அவர், இயக்குனர் ராஜசேகரன் மூலம்‘கழுகுமலைக் கள்ளன்’ சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் இயக்குனர் எம் ஏ காஜா, ராம. நாராயணன், கே ஆர், பி வாசு உள்ளிட்ட இயக்குனர்களால் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

சின்னத் தம்பி, ஆடிவெள்ளி

சின்னத் தம்பி, ஒரு வீடு இரு வாசல், நன்றி மீண்டும் வருக, ஆடிவெள்ளி, பாளையத்தம்மன், சின்னப் பசங்க நாங்க, என் தங்கச்சி படிச்சவ, இது நம்ம பூமி, சின்ன பசங்க நாங்க… என்று பல்வேறு படங்களில் நடித்தவர் (110 படங்கள்) கடைசியாக பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் நடித்தார்.

அதற்குப் பின்னர் புதுப்புது இளைஞர்கள் இயக்குனர்களாக வர ஆரம்பித்த பிறகு இவருக்கு சினிமாவில் சந்தர்ப்பம் படிப்படியாக குறைந்தது. கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பிறகு சினிமாவில் சான்ஸ் இல்லாமலும் பகுதி நேரமாக இருந்து கொண்டிருந்த ஓவியத் தொழிலுக்கும் வேலை இல்லாமலும் மிகவும் சிரம நிலைக்குத் தள்ளப்பட்டார்.

போதிய வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாமல், எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் என்ன செய்வது என்று விழி பிதுங்கினார். தன்னம்பிக்கையோடு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளியை நேரில் சந்தித்தார். தனக்கு இருக்கும் ஓவியத் திறமையை அவரிடம் விளக்கினார். தன் எதிரில் வந்து உட்கார்பவர்களை அதிக பட்சம் நான்கு நிமிடத்திற்குள் படமாக வரைந்து கொடுக்கும் திறமையை நிரூபித்தார். அதை நேரில் பார்த்து அசந்து, அடுத்த நிமிடமே அவரது துயர் துடைக்கும் விதத்தில் அவரின் வாழ்க்கைக்கு உதவிக் கரம் நீட்டினார். தியாகராய நகர் வெங்கடகிருஷ்ணா ரோட்டில் உள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஷோரூமில் தனி இடம் கொடுத்து அங்கு பணியில் அமர்த்தினார்.


‘சுட்டிகளே, குட்டிகளே… நீங்களும் ஓவியராகலாம்…’ என்று சிறுவர்– சிறுமிகளுக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுத்தவர் மார்த்தாண்டம். இதற்காக வஸந்த் டிவி அதிபர் (‘என்றும் நினைவில் வாழும்’) வஸந்த்குமார், ஓவியப் பயிற்சிக்கான ஒரு தொடரையும் இவரிடம் ஒப்படைத்திருந்தார்.


எளிமை–இனிமை–திறமை

ஒரு நடிகர் உங்களை ஓவியமாக வரைகிறார்என்று ஷோரூமில் விளம்பர வாசகத்தை வைத்தார். அதைப் படிக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளை அவர் எதிரில் உட்கார வைத்து அவரைப் படம் வரையச் சொல்லி மகிழ்ச்சியோடு படத்தை வாங்கிச் செல்கிறார்கள். ஆசைப்படும் பெரியவர்களும் உட்கார்ந்து படம் வரையச் சொல்கிறார்கள். தன் உருவத்தை தத்ரூபமாக வரைந்ததைப் பார்த்து அதிசயித்த பத்திரிகையாளர் மீனாட்சிசுந்தரம் மனம் திறந்து பாராட்டினார். வரைந்த ஓவியத்துக்காக வாடிக்கையாளர் யாரிடமும் எந்தத் தொகையும் மார்த்தாண்டம் வசூலிப்பது இல்லை. இலவசம்.

தங்களின் மார்பளவு படம் அசல் அச்சாக கையில் ஐந்தே நிமிடத்தில் கிடைப்பதைக் கண்டு குழந்தைகளும் பெரியவர்களும் மகிழ்ந்து அவரைப் பாராட்டி செல்கிறார்கள். எளிமை –திறமை –லேசான புன்னகையில் கனிவான உபசரிப்பு – இப்படி மூன்றும் மார்த்தாண்டத்துக்கு இறைவன் கொடுத்த வரம்.

படம் வரைய அவர் முன் உட்காரும் பெரியவர்கள் அவர் எந்தப் படத்தில் நடித்தார் என்ற விவரத்தையும் கேட்டு அவருக்கு வாழ்த்துச் சொல்லி விடை பெறுகிறார்கள்.

காலம் ஒருநாள் மாறும்

‘‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையோடு செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து கொண்டிருந்தவன் நான். திடீரென்று வந்த சோதனை. என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. கலங்கவில்லை. நம்பிக்கையோடு காத்திருந்தேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதவைத் தட்டினேன். கதவு திறந்தது. எனக்குப் புது வாழ்வு மலர்ந்தது, என்று நெகிழ்ச்சியோடு சொல்லும் மார்த்தாண்டம்,

‘‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே…’’என்று தன் சட்டைப் பையில் இருக்கும் அதிபர் முரளியின் புகைப்படத்தை காட்டி, அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, மீண்டும் அதை தன் சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறார். நன்றி மறவாத நெஞ்சம்!

மார்த்தாண்டத்தின் கலைப் பயணம்அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *