செய்திகள் வாழ்வியல்

வாழ்க்கையா – வியாபாரமா? இரண்டிலும் வெற்றிக்கு வித்திடும் ‘பஞ்சாட்சரம்’!

அடக்கம், அனுசரணை, ஆரோக்கியம், ஆனந்தம், ஆன்மீகம்

வாழ்க்கையா – வியாபாரமா? இரண்டிலும் வெற்றிக்கு வித்திடும் ‘பஞ்சாட்சரம்’!

அனுபவம் பேசும் ‘ஜி.ஆர்.டி.’ அபூர்வ சகோதரர்கள் ஜி.ஆர். அனந்தபத்மநாபன், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன்

சென்னை, அக். 11

அது வாழ்க்கையாய் இருந்தாலும், வியாபாரமாய் இருந்தாலும்… குதூகலம், வெற்றிக்கு வித்திடும் 5 அம்சங்கள் ஆரோக்கியம், ஆனந்தம், ஆன்மீகம், அடக்கம், அனுசரணை… என்று அனுபவம் பேசுகிறார்கள் ஜி.ஆர்.டி. நிறுவனத்தின் அபூர்வ சகோதரர்கள் ஜி.ஆர். அனந்த பத்மநாபனும், ஜி.ஆர். ராதாகிருஷ்ணனும்.

டை சென்னை அமைப்பு, அதன் பிரபல வருடாந்திர தொழில்முனைவுக்கான மாநாடான டைகான் சென்னை நிகழ்வை 2020ம் ஆண்டில் மெய்நிகர் முறையில் நடத்திக்கொண்டு வருகிறது. இதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஜிஆர்டி குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். அவர்களுடன் கார் டெக்னாலஜிஸ் தலைவர் மாறன் நாகராஜன் கலந்துரையாடினார்.

1964ம் ஆண்டு ஜி.ராஜேந்திரனால் ஒரு சிறிய நகைக் கடையாக துவங்கப்பட்டு இன்று பாரம்பரியமிக்க நகைக் கடையாக வளர்ந்து ஓட்டல், கல்வி, விவசாயம், சோலார் எனர்ஜி என பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனர்கள் ஜி.ஆர். அனந்தபத்மநாபன், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த குழுமத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். இந்திய கலாச்சார த்திலும் பாரம்பரியத்திலும் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டுள்ள இந்த சகோதரர்களின் அயராத உழைப்பினால் ஜி.ஆர்.டி குழுமம் இன்று இந்தியா முழுவதும் பல இடங்களில் பரந்து விரிந்திருக்கிறது.

இந்த சமூகத்திற்கு தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற தீராத ஆர்வத்தினால் கடந்த 2005-ம் ஆண்டு கார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை துவக்கி தற்போது அதன் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் இருக்கும் மாறன் நாகராஜன், ஜி.ஆர்.டி. குழும நிர்வாக இயக்குனர்களிடம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்தனர்.

ஜி.ஆர். அனந்தபத்மநாபன் பேசுகையில் கூறியதாவது: ஜி.ஆர்.டி.யின் பிரமாண்ட வளர்ச்சிக்கு கடவுளின் ஆசீர்வாதமும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும் தான் காரணம். அதேபோல் எங்களின் ஊழியர்களும் முக்கிய காரணமாவார்கள். அவர்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அதேபோல் இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் எங்களின் தந்தை ஆவார். தற்போது நாங்கள் ஒரே துறையில் வர்த்தகத்தை மேற்கொள்ளாமல் பல்வேறு துறைகளில் செயல்படுகிறோம். அவ்வாறு செயல்படும் போது மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். முதலில் நமது அடித்தளத்தை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஜிஆர்டி எங்களுக்கு தாய் போன்றது. இந்த நிறுவனத்தை முதலில் பாதுகாக்க வேண்டும். இதை நாம் வலிமைப்படுத்தி விட்டால் பின்னர் நாம் பல்வேறு துறைகளில் நுழையலாம். ஒரே தொழிலில் இல்லாமல் பல்வேறு தொழில்களில் இருப்பது மிகவும் நல்லது. அடிப்படை தொழிலை பலப்படுத்திக்கொண்டு இதர தொழில்களுக்கு படிப்படியாக செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது நிச்சயம் வெற்றி பெற முடியும்.

குறைந்த கடன் சிறப்பான தொழில்

ஒரு தொழிலுக்கு பண வரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது தொழிலுக்கு ஆக்சிஜன் போன்றது. பண வரவை மனதில் வைத்துக் கொண்டு முதலீடு செய்ய வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும். நமது முதலீட்டை அதிக அளவு செய்து கடன் குறைந்த அளவு வாங்கி ஒரு தொழிலை நாம் செய்யும்போது அந்த தொழில் சிறப்பாக இருக்கும். எப்போதும் நாம் அகலக் கால் வைக்கக் கூடாது. மன அமைதி என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானதாகும். பணம் இருக்கும் பலரிடம் ஆரோக்கியம் இல்லை. அமைதி இருந்தால் தான் நம்மிடம் கடவுள் இருப்பார்.

தொழில் என்பது ஒருவரை மட்டும் அதாவது தலைவர் அல்லது தலைமை செயல் அதிகாரி இது போன்று யாரையும் சார்ந்திருப்பதில்லை. இது ஒரு குழு செயல்பாடு போன்றது. அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு கிரிக்கெட் டீமில் உள்ள அனைவரும் நன்றாக விளையாடினால் தான் வெற்றி கிடைக்கும். எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதையும் மீறி தேவைப்பட்டால் மட்டுமே வெளியில் இருந்து ஆட்களை வேலைக்கு சேர்க்கிறோம். எங்கள் நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக சேர்ந்த பலர் இன்று எங்கள் ஷோரூம்களின் பொது மேலாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு திறமை இருந்தால் அவர்களை நாங்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறோம். இதை மற்றவர்கள் பார்க்கும்போது அது அவர்களுக்கான உந்து சக்தியாக இருக்கும். பயிற்சியும் தொழில்நுட்பமும் ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். ஒரு நிறுவனத்தில் 2 பேர் இருந்தாலும் 2 ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்களுக்கு பயிற்சி என்பது கட்டாயம். அப்படி இருந்தால் தான் அவர்களால் வாடிக்கையாளர்களிடம் சிறப்பாக சேவையாற்ற முடியும்.

நாம் உழைப்பிற்கு மாற்றாக எந்தவொரு விஷயத்தையும் கூற முடியாது. புத்திசாலித்தனத்துடன் உழைத்தால் வாழ்க்கையில் நாம் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதையும் வாழ்க்கையில் உயர உயர குனியக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எங்கள் அப்பா எங்களுக்கு கூறியிருக்கிறார். நீங்கள் எந்த அளவுக்கு உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவிற்கு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எல்லோரும் எல்லாரையும் சார்ந்து தான் இருக்கிறோம். எல்லோரும் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும்.

எங்கள் தொழிலை பொறுத்தவரை நாங்கள் அண்ணன் தம்பி என்று இல்லாமல் பங்குதாரர்களைப் போல் தான் செயல்படுகிறோம். இதனால் எங்களுக்குள்ள கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிகிறது. எந்த விஷயத்தை செய்தாலும் அது குறித்து விவாதித்த பிறகே அந்த விஷயத்தை மேற்கொள்வோம். அதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அது குறித்து எங்கள் தந்தையிடம் கேட்போம். அதன் பின் அவர் கூறியதைக் கேட்டு செயல்படுவோம்.

இந்தியா வல்லரசு நாடாக வருவதற்கு தொழில்முனைவோர் முக்கிய பங்காற்ற வேண்டும். நேர்மையாக நீங்கள் பணம் சம்பாதியுங்கள். உங்கள் மகிழ்ச்சியை உங்கள் குடும்பத்துடனும் ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்த வேண்டும் அப்படி செய்தாலே இந்தியா வல்லரசாக மாறும். தொழில் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 லட்சம் பேருக்கு வேலை இலக்கு

ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் இது குறித்து பேசுகையில் கூறியதாவது, எங்களுக்கான வளர்ச்சி என்பது எங்களின் தந்தையின் வழிகாட்டுதலால் ஏற்பட்ட ஒன்று. அதே சமயம் வாடிக்கையாளர் சேவை என்பது எங்களின் முக்கியமான குறிக்கோளாகும். எங்களின் தொலைநோக்கு பார்வை என்பது குறைந்தபட்சம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாகும். ஓட்டல் மற்றும் சோலார் துறையிலும் எங்கள் குழுமம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் கல்வித் துறையிலும் எங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கல்வியை வியாபாரமாக பார்க்காமல் அதை சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறோம். மேற்கு மாம்பலத்தில் ஜிஆர்டி மகாலட்சுமி வித்யாலயா பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறோம். அதேபோல் எங்களுடைய கல்லூரி ஒன்று திருத்தணியில் உள்ளது. எங்களுடைய அப்பா திருத்தணி அருகே உள்ள கிராமத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் அந்த பகுதியில் உள்ள ஏழ்மையான மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் அங்கு ஒரு கல்லூரியை துவக்கியுள்ளோம். வருவாய் ஈட்டும் நோக்கம் இல்லாமல் ஒரு நல்ல கல்வியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கனவாகும். அதை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

சொந்த தொழில் அட்வைஸ்

கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தக் கூடாது என்பதே எங்கள் தந்தை எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம். இந்தக் காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் தொழில் செய்ய முடியாது. ஆனால் அதே சமயம் நமது முதலீடானது குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீதம் இருக்க வேண்டும். ஒரு தொழில் துவங்கும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை கடன் வாங்காமல் ஆரம்பிக்க முடியுமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஒரு தொழிலில் நாம் இறங்கும்போது அந்த தொழில் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு குறிப்பிட்ட காலமாகும். இதை 2 விதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொழிலில் லாபம் வருவதற்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 வருடங்கள் ஆகும் என்றால் அந்தக் காலக்கட்டம் வரை நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதை நாம் முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தை நமது தாய் தொழில் மூலம் சரி செய்ய முடியும் அல்லது அங்கு வரும் பண வரவை வைத்து அதை சமாளிக்க முடியும் என்றால் அது ஒரு விதம்.

மற்றொன்று நமது தாய் தொழிலில் இருந்து குறைந்தபட்ச தொகைதான் எடுக்க முடியும் என்றால் அதற்கேற்ற தொழிலை நாம் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடன் வாங்கினால் நாம் சம்பாதிக்கும் தொகை வட்டி கட்டுவதற்கே சரியாகி விடும். அந்த வலைக்குள் நாம் சிக்கி விடக்கூடாது. எந்தவொரு தொழிலையும் பொறுமையாக யோசித்து துவக்குங்கள்.

தொழில்நுட்பம் என்பது ஒவ்வொரு தொழிலும் ஒருங்கிணைந்த ஒன்றாகும். தொழில்நுட்பத்தை நமது தொழிலுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் நகை தொழிலில் தொழில்நுட்பமும் ஊழியர்களும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது இருக்கும். எங்கள் தொழிலில் நகைகள் டிசைன் செய்ய, வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றுதான். அவரவர் தொழிலுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாடிக்கையாளரே கடவுள்

குறிப்பாக எங்கள் தந்தையிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டது வாடிக்கையாளர்களே எங்களது கடவுள் என்பதாகும். அதேபோல் ஊழியர்கள் கூறும் சில விஷயங்களை நாம் காதுகொடுத்து கேட்க வேண்டும். அவை பல சமயங்களில் நமக்கு உபயோகமாக இருக்கும். உண்மையும் நேர்மையும் தொழிலுக்கு அவசியமானதாகும். வாடிக்கையாளர்கள் விரும்பியதை நாம் கொடுத்தோமேயானால் அவர்களே பல வாடிக்கையாளர்களை நமக்கு கொண்டு வருவார்கள். எங்கள் தந்தை மற்றும் எங்கள் குரு மாத்ரேயாவின் வழிகாட்டுதல்களின்படி நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்கிறோம். அதேபோல் ஒவ்வொரு நாளும் நம்மை நாமே தற்சோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ஒருவர் எந்த வர்த்தகம் செய்கிறாரோ அது சம்பந்தமான புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கையில்

முக்கியத்துவம் பெறாது. நமது வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ வேண்டும். நாம் தொழில்முனைவோர்களாக இருந்தாலும் நமது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒருவருக்கு ஆரோக்கியம், செல்வம், காதல், ஆனந்தம், ஆன்மீகம் இவை 5 தான் வாழ்க்கையில் மிக முக்கியமானவையாகும். ஆன்மீகம் என்பது கடவுளை மட்டும் குறிக்கவில்லை. நீங்கள் செய்யும் தொழிலையும் அது குறிக்கிறது. தியானம் செய்வதே வெற்றிக்கான சிறந்த வழியாகும். வெற்றி பெற்ற தனிநபர்களும்

தொழில்முனைவோர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். இவற்றை நாம் கடைபிடிப்போம் வாழ்க்கையில் ஆனந்தமாக வாழ்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *