செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடியும் வரை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை, பிப்.25–

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடியும் வரை ரூ.1000 – இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 14–-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையானது இரண்டு முறை நடைபெற்றுள்ளது. முதல் முறை போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலும், இரண்டாவது முறை எனது தலைமையிலும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடிவடைந்து 18 மாதங்கள் ஆகிவிட்டது.

மேலும், கடந்த ஓராண்டு காலமாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, இந்த பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. தற்பொழுது, நான் பங்கேற்ற பேச்சுவார்த்தையின் போது பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். இந்த கோரிக்கைகள் எல்லாம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரையில் நல்ல முடிவினை ஒரு வாரத்திற்குள்ளாக தெரிவிப்பதாக கூறியிருந்தேன்.

இந்த நிலையில், ஒரு சில தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இந்த நோய் தொற்று காலங்களிலே, பல்வேறு மாநிலங்கள் மாத ஊதியத்தை முழுமையாக வழங்கிடாத நிலையில், தமிழகத்தில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முழு ஊதியத்தினை வழங்கி சிறப்பித்துள்ளது அம்மாவின் தலைமையிலான இந்த அரசு.

ஓய்வு காலப் பலன்கள்

இந்த 14-–வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையானது, நோய் தொற்று காரணத்தினால் தாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்ற வருகின்ற நிலையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இடைகால நிவராணமாக ரூ.1000– ஐ வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஓய்வு வெற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2019 வரையிலான பணப்பலன்கள் 972 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி- 2020 முதல் ஏப்ரல் 2020 வரையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 536 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதோடு, அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த, ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஓய்வு காலப் பலன்கள் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்.

14–-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பங்கேற்றுள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் விரைவில் எட்டப்படும். எனவே, தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த 1000 ரூபாய் இடைகால நிவாரணத்தை ஏற்றுக்கொண்டு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் அனைவரும் பணிக்கு திரும்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாளைய தினம் ஒருசில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள எங்களுடைய அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவு தொழிற்சங்கங்கள் உதவியோடு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *