* 300 அடி நீளம், 28 அடி அகலம், 40 அடி உயரம்
* 24 ஆயிரம் கி.மீ. தூரம் கடல் பயணம்
இந்திய கப்பல் படையில் 36 ஆண்டுகாலம் பணியிலிருந்த
‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கிக் கப்பல் சென்னையில் விற்பனை
மகாபலிபுரத்தில் நீர்மூழ்கி கப்பல் கடல் சார் அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமில்லாததால் விற்பனைக்கு அரசு முடிவு
சென்னை, டிச. 19
இந்தியக் கப்பல்படையில் 36 ஆண்டு காலமாய் பணியிலிருந்து இப்போது செயலிழக்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கிக் கப்பல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் விற்கப்படுகிறது.
300 அடி நீளம், 28 அடி அகலம், 40 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்டமான நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்டு தயாரானது. 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 10ல் இந்தியக் கடற்படையில் அர்பப்ணிக்கப்பட்டது. 2010, டிசம்பரில் பணியிலிருந்து ஓய்வு பெற்றது. 24 ஆயிரம் கி.மீ. தூரம் கடல் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, 36 ஆண்டு காலம் கடற்படையில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது.
மாமல்லபுரத்தில் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைப்பதற்கு, செயலிழக்கப்பட்ட இந்த ‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கி கப்பலை மீண்டும் கொண்டுவருவது குறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் முன்பு ஆலோசனை நடைபெற்றது.
(சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்து, கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 11-ம்தேதி சுற்றுலாத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது).
மாமல்லபுரத்தில் 30 ஏக்கர் ஒதுக்கீடு
மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் 30 ஏக்கர், இந்த பாரம்பரிய அருங்காட்சியகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 10 ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை நிறுத்திவைத்து அதில் அருங்காட்சியகம் அமைப்பது என்றும் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்துடன், கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், ஒலி – ஒளி படக்காட்சி அரங்கம், மீன் காட்சியகம், உணவுப் பொருள் விற்பனை நிலையம் ஆகியவை அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசின்கோரிக்கையை ஏற்று கடந்த 2010-ம் ஆண்டில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.வாக்லி என்ற இந்தக் கப்பலை இத்திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து, இக்கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை துறைமுகம் கொண்டு வரப்பட்டது. இந்தக் கப்பலை இழுத்துச் சென்று மாமல்லபுரத்தில் நிலை நிறுத்துவதற்கு மட்டும் ரூ.10 கோடி நிதி அப்போது ஒதுக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் உள்ள நீர்மூழ்கி கப்பலை, மாமல்லபுரத்துக்கு கொண்டுசென்று, அதைத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நிறுவும் பணியை, ‘டிரேடெக்ஸ் ஷிப்பிங் கம்பெனி’ என்ற தனியார் நிறுவனத்திடம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அப்போது ஒப்படைத்தது.
அந்த நிறுவனம், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நீர்மூழ்கி கப்பலை மாமல்லபுரத்துக்கு இழுத்து சென்றது. ஆனால், அப்பணிகள் தோல்வியடைந்ததால், மீண்டும்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் கப்பலை மாமல்லபுரம் கொண்டுசெல்ல பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் சாத்தியப்படவில்லை.
மோடி – சீன அதிபர் வருகை நேரத்தில்…
இதற்கிடையில் கடந்த ஆண்டு (2019) மாமல்லபுரத்தில் இந்தியா – சீனா இடையிலான முறைசாரா கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது, மாமல்லபுரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். மாமல்லபுரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் அதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பிஉள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நிலுவையில் உள்ள கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, மீண்டும் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் கே.சண்முகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சுற்றுலாத் துறைச் செயலர் அசோக் டோங்ரே, கடற்படை கமாண்டிங் அதிகாரி, தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத் தலைவர், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ரவீந்திரன், கடலோர பாதுகாப்புப் படை ஐஜி, கடலோர பாதுகாப்பு திட்டக் குழு கமாண்டென்ட் என்.சோமசுந்தரம், பொதுத் துறைச் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அமுதவல்லி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, ஐஐடி கடல்சார் பொறியியல் துறைத் தலைவர், திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஐஎன்எஸ் வாக்லி நீர்மூழ்கி கப்பலை மீண்டும் மாமல்லபுரத்தில், அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து கடற்படை, கடலோரக் காவல்படை பாரத் ஹெவி எலக்ட்ரிக்ல்ஸ், எல் அண்டு டி உள்ளிட்ட பல்வேறு நிறுவன தொழில்நுட்ப நிபுணர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் மாமல்லபுரத்தில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் பணி சாத்தியமில்லாத நிலையில், மீண்டும் ஐஎன்எஸ் வாக்லி, சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
2014ம் ஆண்டு முதல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கொண்டு இந்த நீர்மூழ்கி கப்பலால் பலன் ஏதுமில்லை தொடர்ந்து செலவுதான் அதிகமாகும், துறைமுகத்தில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் என்று உணரப்பட்ட நிலையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் விற்கும் நிலைக்கு அரசு வந்துள்ளது.
விசாகப்பட்டிணத்தில் ‘குர்சுரா’ நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம்
இந்திய கடற்படையில் 1969ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்டது ஐஎன்எஸ் குர்சுரா நீர்மூழ்கி கப்பல். இது கடற்படையில் 31 ஆண்டு, பணியாற்றியது. பின் 2001ல் கடற்படையிலிருந்து விடுவிக்கப்பட்டது. அப்போது இந்த நீர்மூழ்கி கப்பல், ஆந்திரப் பிரதேச அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐஎன்எஸ், குர்சுராவைக் கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. இந்த அருங்காட்சியகம் இப்போது வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணங்களை கவர்ந்திழுக்கும் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இதேபோல ஒரு கடல் சார் அருங்காட்சியகத்தை மகாபலிபுரத்தில் உருவாக்குவதற்குத் தான் ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார்.
– வீ.ராம்ஜீ