சிறுகதை

இனியொரு விதி செய்வேன் | ஆர்.எஸ்.மனோகரன்

Spread the love

அது ஒரு பொமரேனியன் மற்றும் லாப் ரடார் கலந்த கலவை நாய்க்குட்டி.

எப்படி இது சாத்தியம் என்று எனக்கு தெரியாது.

நண்பன் வீட்டில் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போக தூக்கி வந்து விட்ட ஒரு மாத பெண் குட்டி நாய் அது. பார்த்த முதல் பார்வையிலேயே குடும்பமே சரண்டர் ஆனதால் அதற்கு டோடோ என பெயர் வைத்தோம்.அதன் அழகுக்கு அடிமையாகி மடியிலேயே வைத்து கொஞ்சுவதும் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், பசும் பால் என மாற்றி மாற்றி கவனித்ததில் ஒரு வருடத்தில் கொழுகொழுவென வளர்ந்தது.

டோடோ ரோட்டில் யாரையும் போக விடாது. குரைப்பதில் டாபர்மேன், அல்சேசன் , ராசபாளையம் என எந்த நாயும் இதற்கு இணையாகாது.

வீட்டுக்குள்ளேயே திருடன் போலீஸ் விளையாட என் மகளும் மகனும் ஒளிந்து கொள்ள டோடோ மோப்பம் பிடித்து அவர்களை கண்டுபிடித்து குஷியுடன் குதித்து ஓடும்….

கமகமவென நான் வெஜ் சமையல் வாசம் வந்தால் போடச் சொல்லி குரைக்க ஆரம்பித்து விடும்.

பிரியாணி போடும் வரை ஓயாது.

அருகில் போய் உற்றுப் பார்த்தால் நாணத்துடன் வேறு புறம் திரும்பிக் கொள்ளும்.. அதற்கு பிடிவாத குணம் உண்டு. அதை நாங்கள் சந்தோசமாக ரசிப்போம். வாக்கிங் கூட்டிப் போகும் போது சந்தேகப் பேர்வழி யாராவது பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தால் குரைத்துத் தள்ளி விடும்.

ஒரு முறை நல்ல பாம்பு ஒன்றுவீட்டுத்தோட்டத்தில் புகுந்து விட அதனுடன்மிகக் கவனமாக சண்டை போட்டு விரட்டி அடித்தது.

காலையில் வாக்கிங் கூட்டிப் போகவில்லை என்றால் குரைத்து தள்ளி விடும்.

சில ஆண்டுகளில் மெருகு கூடி வாளிப்பான தோற்றத்துடன் வளைய வந்தது டோடோ.வாக்கிங் கூட்டிப் போகும் போது நகரில் சுற்றித்திரியும் வாலிப நாய்கள் இதனை சுற்றிச் சுற்றி வரும்.அவற்றிடமிருந்து பாதுகாத்து டோடோவை வீட்டுக்கு கூட்டி வர என் மகள் படாத பாடு படுவாள்.

வீட்டில் நாங்கள் வேலைக்குப் போக, பிள்ளைகள் படிக்கப் போக தனியேவிடப்பட்ட டோடோ கவலையுடன் பொழுதைக் கழிக்கும்.

குடும்பத்தில் யாராவதுஓருவர் தெருமுனையில் வரும் போதே, வித்தியாசமான குரலில் குரைக்கும். வாலை ஆட்டி சிணுங்கும். தடவிக்கொடுத்து பிஸ்கட் போட்டு ஆசுவாசப்படுத்தினால் தான் அமைதியாகும்.

ஆயிற்று;மேலும் ஒரு வருடம் ஆன பின்அதனுடைய குட்டிகளைக் காண எங்களுக்குஆர்வம் அதிகமாக இருந்தாலும் என் மனைவியின் கட்டளைப்படி டோடோவுக்கு குட்டிபோட அனுமதிகிடைக்கவில்லை. யார்குட்டிகளைக் கவனிப்பது;அதற்கெல்லாம் நேரமில்லை என்பது அவள் வாதம்.

இப்படியே 8 ஆண்டுகள் ஓடி விட்டன.

டோடோவின் உடலில் நோயின் அறிகுறிகள் தென்பட்டன.வயதாகி விட்டது எனவும் அதன் கர்ப்பப் பையை எடுத்து விட வேண்டும் எனவும் டாக்டர் சொன்னதால் அவ்வாறே செய்தோம். உடல் நிலை மேலும் மோசமாகி முடி உதிர்ந்து அரிப்புகள் தோன்றி மிகவும் அவதிப்பட்டது டோடோ.

கால்களும் வலுவிழந்து நிற்கக் கூட முடியவில்லை அதனால்.

ஆயிற்று..நான் அரசுப்பணியில் உயர்ந்தபட்ச பதவிஅடைந்து ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் ஆகி விட்டன.

சக்கையாக பணியில் பிழிந்து எடுத்து விட்டதால் எனக்கு எல்லா நோய்களும் எட்டிப் பார்த்தன..அதற்கு மருத்துவம் பார்க்க செலவழித்ததுடன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் போரடித்ததுடன் வீட்டிலும் தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வந்ததால் மனம் குழம்பிய நிலையில் டோடோவை கவனிக்க இயலாமல் போனது..நாய்களுக்கான காப்பகம் எதிலாவது டோடோவை விட்டு விடலாம் என என் மகளிடம் சொன்ன போது அவள் கேட்ட கேள்வியில் ஆடிப் போனேன்.

‘ ரிடையர் ஆன பின் உங்களுக்கும் தான் உடல் நிலை சரியில்லை. நடக்கவோ உட்காரவோ முடியவில்லை; கிட்னி ஸ்டோன்,பிபி,சுகர்,பைல்ஸ் இப்படி ஏகப்பட்ட பிரச்னை வேறே..வீட்டிலேயும் ஏதாவது சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க.. ஏன், உங்களையும் ஒரு முதியோர் இல்லத்தில் பணம் கட்டி சேர்த்து விட்டுடலாமா?’

நான் மறு பேச்சு பேசவில்லை.

டோடோவும் நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள் அதிகாலை,வாசலில் தண்ணீர் தெளிக்கும் நொடியில் திறந்திருந்த கதவு வழியே நொண்டியபடியே டோடோ வெளியேறிவிட்டதை நாங்கள் கவனிக்கவில்லை.

மாலையில் காலேஜ் விட்டு வந்த என் மகள் டோடோவை வீட்டில் தேடி,வெளியில் தேடி, பின்னர்,.நீங்கள் தான் கொண்டு போய் எங்கேயோ விட்டு விட்டீர்கள் என்று என்னை வார்த்தைகளால் குதறி எடுத்து விட்டாள்..

இரவு ஒன்றும் சாப்பிடாமல் சுருண்டு படுத்து தூங்கி விட்டாள் என் செல்ல மகள்..மறுநாள் காலை,நான் டோடோவைத் தேட ஆரம்பித்தேன். சற்று தொலைவில் ஒரு பூங்காவிற்குள் ஓரமாக சுருண்டுபடுத்திருந்தது டோடோ. அருகில் போய் வாஞ்சையுடன் தடவினேன். அதன்கண்களில் கண்ணீர்..காதுகளை தூக்கி கண்களை விரித்து என்னை பார்த்தது..அதில் எத்தனையோ அர்த்தங்கள்.. எத்தனையோ கேள்விகள்..வா வீட்டுக்கு போகலாம் என்று கலங்கியபடி அழைத்தேன்..அது தடுமாறி எழுந்தது. .எலும்பும் தோலுமாய் முடி உதிர்ந்து கால்கள் நிற்க முடியாமல் தள்ளாடியபடி இருந்த டோடோவை என் கைகளில் தாங்கி தூக்கி வந்து வீட்டில் சேர்த்தேன்.

டோடோவை கட்டிப் பிடித்து என் மகளும் மனைவியும் அழுதது என் மனசை என்னவோ பண்ணியது..அதன் உயிர் உள்ளவரை நானே அதனை பாதுகாக்க முடிவு செய்தேன்.

டோடோவை வெளியே விரட்டி விட ஒரு நிமிடம் எண்ணியதற்காக மகளிடம் மானசீகமாக மன்னிப்புகேட்டேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *